ADVERTISEMENT

‘அவங்களே திருந்திருவாங்க; கண்டுக்காதீங்க!’ - அமைச்சரின் தலையீட்டை போட்டுடைத்த ஆட்சியர்!

10:01 AM Feb 24, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘மாவட்ட ஆட்சியர்களை ஆட்சியாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை..’ என்று பொதுவாக விமர்சனம் எழும் நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தலையீடு குறித்து, வெளிப்படையாகவே பேசினார், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன். அதனால் ஏற்பட்ட பரபரப்பில், மைக் ஆஃப் செய்யப்பட்டு, செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டு, ஆய்வுக்கூட்டத்தை ‘ரகசியமாக’ நடத்தியதாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த 12-ஆம் தேதி, அச்சங்குளம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு, 21 பேர் பலியாகி, 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஆட்சியர் கண்ணன் இப்படி பேசினார்; “கடைசியா நடந்த விபத்துலகூட பார்த்தீங்கன்னா.. சின்ன சின்ன வயலன்ஸ் இருந்தா வார்ன் பண்ணிட்டு வந்திருவோம். டெய்லி பிடிச்சோம். பட்டாசுத் தொழில் கொஞ்சம் சிரமத்துல இருக்கிறதுனால பார்த்துக்கிட்டு இருக்கோம். அமைச்சர் நீங்க திரும்பத் திரும்ப சொல்றீங்க.. ‘வயலன்ஸ் எல்லாம் வந்து அவங்களுக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுங்க.. அவங்களே திருந்திருவாங்க.. நெருக்கிப் பிடிக்காதீங்க’ன்னு.. நீங்க சொல்றதுனாலதான், நாங்களும் பெருசா எதுவும் பண்ணல.” என்று விளக்கம் தந்தார்.

தன்னுடைய பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர், “அமைச்சர் சொல்லுறத கேட்கிறதுக்கா கண்ணன் சார் கலெக்டரா இருக்காரு? என்னமோ, ராஜேந்திரபாலாஜி மந்திரியானதுக்கு அப்புறம்தான் பட்டாசு விபத்துகள் நடக்கிற மாதிரி பேசிருக்காரு. என்கிட்ட புள்ளிவிபரம் இருக்கு. ராஜேந்திரபாலாஜி அமைச்சரானதுக்கு முன்னால உள்ள பத்து (2000 – 2010) வருஷத்துல, 162 விபத்து நடந்திருக்கு. 201 பேர் செத்திருக்காங்க. அப்பல்லாம், எந்த மந்திரி தலையிட்டு, அதிகாரிகள் ஆய்வு நடத்தாம இருந்தாங்க? ஆய்வுங்கிறது சும்மா கண்துடைப்புக்குத்தான். ஆய்வுன்னு சொல்லி லஞ்சம் லஞ்சமா வாங்கிக் குவிக்கிறதுதான் அதிகாரிகளோட வேலையே. எங்கே விபத்து நடக்கும்? எத்தனை பேரு சாவாங்க? அதை வச்சு எவ்வளவு பணம் பிடுங்கலாம்? திரும்பவும் அந்த ஃபேக்டரிய ஓட்டுறதுக்கு எம்புட்டு லஞ்சம் வாங்கலாம்? இந்தக் கணக்கு மட்டும்தான் அதிகாரிங்க மண்டைக்குள்ள ஓடும்.

இன்னொரு விஷயம். உலக மகா நீதிமானே வந்து பட்டாசு ஆலை நடத்தினாலும், விதிமீறல் இல்லாம நடத்த முடியாது. அந்த அளவுக்கு சிக்கலான தொழில் இது. தடை பண்ணனும்னு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போயி, நொம்பலப்பட்டு இருக்கோம். கிட்டத்தட்ட பட்டாசுத் தொழிலே அழியிற நிலைமைக்கு வந்திருச்சு. ஆனாலும், அதிகாரிங்க ஆய்வுன்னு சொல்லி, நோட்டீஸ் விட்டு பணம் பறிக்கிற வேலையை விடல. இப்படி ஒரு நிலைமையில நாங்க இருக்கிறப்ப, கலெக்டர்கிட்ட அமைச்சர் ‘பட்டாசு ஆலை நடத்துறவங்க பாவம் சார்.. ரூல்ஸ்ன்னு கறார் பண்ணி அவங்கள தொந்தரவு பண்ணாதீங்க. நடவடிக்கைக்குப் பதிலா, என்னென்ன விதிமீறல்ங்கிறத சுட்டிக்காட்டி, அதைச் சரிபண்ணச் சொல்லுங்க’ன்னு எங்க சார்பா கேட்டுக்கிட்டாரு. இந்தத் தப்பை எங்களுக்காகத்தான் அமைச்சர் பண்ணுனாரு.

இன்னொரு விஷயமும் இருக்கு. பெரிய ஃபேக்டரிகள்ல பெரும்பாலும் விபத்து நடக்கிறது இல்ல. ஏன்னா, அவங்களுக்குத் தெரியும். இதெல்லாம் வேகவேகமா அவசர அவசரமா பண்ணுற தொழில் இல்லைன்னு. கூடிய மட்டிலும் விதிகளை மீறுவதில்லை. சின்ன ஃபேக்டரிகாரங்க, குறிப்பா கள்ளத்தனமா வீடுகள்ல பட்டாசு தயாரிச்சிட்டு, இப்ப கொஞ்சம் முன்னுக்கு வந்து, குத்தகைக்கு எடுத்து, ஃபேக்டரி நடத்துறவங்க பேராசை பிடிச்சவங்களா இருக்காங்க. குறுகிய காலத்துல நெறய சம்பாதிக்கணும்னு, விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, அதிகமா உற்பத்தி பண்ணுறதுலயே குறியா இருக்கிறாங்க. 21 பேர் பலியான அச்சங்குளம் விபத்துகூட, அந்தமாதிரி நடந்ததுதான்.

லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களை ஓட்டு வங்கியா அரசியல்வாதிகள் பார்க்கிறாங்க. பட்டாசுத் தொழிலைப் பாதுகாப்போம்னு தேர்தல் நேரத்துல ஆளாளுக்கு கிளம்புறாங்க. எடப்பாடி பழனிசாமியும், ராஜேந்திரபாலாஜியும்கூட பட்டாசுத் தொழிலின் பாதுகாவலர்களாக தங்களை விளம்பரப்படுத்துறாங்க. பசுமைப் பட்டாசுன்னு சொல்லி சென்ட்ரல் கவர்மெண்டும் ரொம்பவே குழப்புது.

பட்டாசுத் தொழிலாளர்கள் சாகணும்னா வேலைக்கு வர்றாங்க? ஆபத்தான தொழில்னு தெரிஞ்சே ரிஸ்க் எடுக்கிறாங்க. பட்டாசு ஆலை நடத்துறவங்களும், விபத்து நடக்கணும்னு தெரிஞ்சே எதுவும் பண்ணுறதில்ல. ஏன்னா, ஒரு ஃபேக்டரில விபத்து நடந்துச்சுன்னா அந்த உரிமையாளருக்கு வாழ்க்கையே இல்லாம போயிரும். ஆனாலும், தொழிலாளர்களின் கை மீறி விபத்துகள் நடந்து, அநியாயத்துக்கு உயிர்களும் பறிபோகுது.” என்று நொந்துகொண்டார்.

நாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் பேசினோம். “அமைச்சர் தவறுகளுக்குத் துணை போறவர் கிடையாது. சிறு தவறுகளைக் கண்டுக்காதீங்கன்னு ஒரு ‘ரெக்வஸ்ட்’ வைப்பாரு. சின்ன தவறுகளா இருந்தா கொஞ்சம் பாருங்க சார்ன்னு சொல்லுவாரு. உதாரணத்துக்கு, மஸ்டர் ரோல் இல்லைன்னா எழுதி வைங்க. இந்த மாதிரி சின்ன விஷயங்களுக்கு சஸ்பெண்ட் பண்ணாதீங்க. அன்னைக்கு அவங்களுக்கு வேலை கெட்டுப் போயிரும்பாரு. 50 பேரைக் கூட்டிட்டுப் போற வண்டியில 60 பேரைக் கூட்டிட்டுப் போகும்போது நிப்பாட்டினா, விடுங்க சார்.. கூட்டிட்டுப் போகட்டும்பாரு. மற்றபடி, அரசு அதிகாரிகள் எடுக்கிற நடவடிக்கையில அவங்க தலையிட முடியாது. போன வாரம் ஒரு கம்பெனில மூணு பசங்கள வச்சிருந்தாங்க. அதெல்லாம் சஸ்பெண்ட் பண்ணிருக்கோம். அடிப்படைத் தவறுகள் எது இருந்தாலும் நாங்க கடுமையாத்தான் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். இதுல எந்த காம்ப்ரமைஸும் பண்ணுறது கிடையாது. எத்தனை ஃபேக்டரிய சஸ்பெண்ட் பண்ணிருக்கோம்னு ஒரு டேட்டா எல்லாம் கொடுத்துட்டோமே. இது யாரு கிளப்பிவிட்டதுன்னு தெரியல. எந்த ஒரு மீட்டிங்கிலும், பத்திரிக்கையாளர்களைக் கவர் பண்ணிட்டு வெளியே போங்கன்னு ரெக்வெஸ்ட் பண்ணுறது வழக்கம்தான். முதல் 5 நிமிஷம் கவர் பண்ணிக்கோங்க. அப்புறம் மீட்டிங் முடிஞ்சதும், நடந்தது என்னங்கிறத, உங்களக் கூப்பிட்டு சொல்றோம்னு சொல்வோம். இதுக்கு ஏன் கோவிச்சிக்கிட்டாங்கன்னு தெரியல? மற்றபடி ஒண்ணும் இல்ல சார்.. இது வழக்கமான நடைமுறைதான்.” என்றார் கூலாக.


தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியோ, “அரசு நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. பட்டாசுத் தொழிலுக்கும், பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் என்னால் முடிந்த வரையிலும் நல்லது மட்டுமே செய்து வருகிறேன். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக, 8 பேர் கொண்ட மத்திய குழு, அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு செய்ய உள்ளது. அச்சங்குளம் பட்டாசு வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த 12 வயது சிறுமி நந்தினிக்குத் தமிழக அரசு அளித்த ரூ.6 லட்சம் வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையை என் சொந்தக் குழந்தையாகவே பாவித்து அனைத்து உதவிகளும் செய்து கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அவளுடைய படிப்புச் செலவுக்கு, என்னுடைய பங்களிப்பாக ரூ.5 லட்சம் கொடுத்திருக்கிறேன். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நான் பாரபட்சமின்றி உதவுவேன். இனிமேல், இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.” என்றார்.

சம்பிரதாயமாகவே சகலமும் நடப்பதால், விபத்துகளும் உயிர்ப் பலிகளும் விதிமீறலால் தொடர்கின்றனவே!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT