ADVERTISEMENT

"என்னங்க... நான் லவ் பண்ண பொண்ணையே ராஜகுமாரனும் லவ் பண்ணிருக்காரு" புலம்பிய விக்ரம்! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #9   

03:16 AM Sep 03, 2018 | vasanthbalakrishnan

தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான ஹீரோக்களின் வெற்றி படிப்படியாக நடந்திருக்கும், ஆனால் தொடர்ந்து அதை நோக்கிய படங்கள் வந்துகொண்டிருக்கும். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், இப்போ அஜித், விஜய், விஜய் சேதுபதி வரை அப்படித்தான். இவர்களுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைக்கல, அதே நேரம் சினிமா இவர்களை வெளியே அனுப்பிவிடவும் இல்லை. அப்பப்போ ஒரு வெற்றி, ஒரு முன்னேற்றம் என்று இப்போ இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தார்கள், பெரும்பாலும் பின்னே செல்லும் நிலைமை ஏற்படவில்லை. இன்னொரு வகையாக, சிலருக்கு முதல் படத்திலேயே சிறப்பான அறிமுகம் கிடைத்து பெரிய வெற்றியும் அமைந்திருக்கும். சிவாஜி, கார்த்திக், கார்த்தி என இப்படியும் சிலர் இருக்காங்க. முதல் படமே நல்ல அறிமுகமாக அமைந்து அதன் பின் வெற்றி தோல்வி என மாறி மாறி வந்தாலும் நிலைத்துவிடுவார்கள்.

ADVERTISEMENT



இந்த இரண்டுமே இல்லாமல், நாயகனாக அறிமுகமாகி அதுவும் ஸ்ரீதர் என்ற பெரிய இயக்குனர் படத்தில், பின் படங்கள் தோல்வியடைந்து, தொடங்கப்பட்ட படங்கள் கைவிடப்பட்டு, வாய்ப்பு கிடைக்காம, தொடங்கிய இடத்துக்கே திரும்ப வந்து, மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் பேசி, இப்படி ஆகியும் விடாம முயன்று, ஒரு படத்தில் தன் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, தொடர் வெற்றிகள் கொடுத்து, கமர்ஷியலாகவும் நம்பர் 1 ஹீரோவாகி, நடிப்புக்காக தேசிய விருது பெற்று, இன்னைக்கும் கதாபாத்திரத்துக்காக தன் உடலை வருத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள தயாராக என... இப்படி ஒரு கிராஃப் தமிழ் சினிமாவில் ஒரே ஒருத்தருக்கு மட்டும்தான் இருக்கு. அவர் சீயான் விக்ரம். நான், வாழ்க்கையில ஒரு கட்டம் வரைக்கும் தோல்விகளை மட்டுமே பார்த்தவன். பாகுபலி 1ல ஷிவு அந்த மலை மேல ஏற முயற்சி பண்ணிப் பண்ணி கீழ விழுவது போல விழுந்தவன். எனக்கே ஒருவரின் தன்னம்பிக்கையைப் பார்த்து ஆச்சரியம் வருதுன்னா அது விக்ரமைப் பார்த்துதான். தமிழ் சினிமாவில், ஹீரோவா அறிமுகமாகி, பின்னாடி தோல்விகளால் வெளியே போய்ட்டு திரும்ப வந்து ஹீரோவாகவே இவ்வளவு பெருசா ஜெயிச்சவங்க யாருமில்லை.

ADVERTISEMENT



புதுக்காவியம்... இது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த படம். ஆர்.பி.சௌத்ரி சாரின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. புதுவசந்தம், புரியாத புதிர்னு வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தது சூப்பர் குட் ஃபிலிம்ஸ். இன்னொரு பக்கம் கே.எஸ்.ரவிக்குமார் புரியாத புதிர் வெற்றிக்குப் பிறகு இயக்கவிருந்தார். இப்படி எதிர்பார்ப்போட, நம்பிக்கையோட தொடங்க இருந்த இந்தப் படம், என் ராசியா இல்லை விக்ரம் ராசியானு தெரியல கைவிடப்பட்டது. அந்தப் படத்தில் நான் அஸோசியேட்டா வேலை பார்த்திருந்தா அப்போவே விக்ரம் கூட பணியாற்றி இருப்பேன். அந்த வாய்ப்பு பல வருடங்கள் கழிச்சு 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தில் அமைந்தது. ராஜகுமாரன் இயக்கத்தில் 'நீ வருவாய் என' வெற்றிக்குப் பிறகு வந்த படம். அதன் பிறகு இயக்குனர் சரண் காதல் மன்னன், அமர்க்களம் போலவே ஜெமினி படத்திலும் என்னை நடிக்க அழைத்தார். அதற்குப் பிறகு சாமி, இப்போ சாமி ஸ்கொயர் வரைக்கும் விக்ரம் கூட பணியாற்றுகிறேன், பழகுகிறேன்.


'விண்ணுக்கும் மண்ணுக்கும்' ஷூட்டிங் சமயத்திலெல்லாம் நாங்க ஒன்னாவேதான் இருந்தோம். எங்க கூடவேதான் தங்கினார், ஒன்னாவேதான் சில மாதங்கள் வாழ்ந்தோம். அந்தப் படத்தில் தேவயானிதான் ஹீரோயின். கதைப்படி தேவயானி நடிகை தேவயானியாகவே இருப்பாங்க, அவுங்கள ஒரு கிராமத்து இளைஞரான விக்ரம் லவ் பண்றார். படம் முடிஞ்சு தேவயானி-ராஜகுமாரன் காதல் விஷயம் வெளியே வந்து அவங்க திருமணம் செஞ்சப்போ விக்ரம் என்கிட்டே சிரிச்சுக்கிட்டே சொன்னார், "என்னங்க... 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' டைம்ல நான் மட்டும்தான் தேவயானியை லவ் பண்றேன்னு நெனச்சேன். நான் லவ் பண்ணுன தேவயானியை ராஜகுமாரனும் லவ் பண்ணியிருக்காரு" என்று.



'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படம் வெற்றி பெறவில்லை, ஆனால் தேவயானி-ராஜகுமாரன் காதல் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் டைட்டிலே தங்கள் காதலை மனதில் வைத்துதான் ராஜகுமாரன் வைத்தார்னுலாம் பேசிக்கிட்டாங்க. அது உண்மையானு தெரியல, ஆனால் அவுங்க காதல் செய்தி வந்தபொழுது தமிழ்நாடே ஆச்சரியப்பட்டது உண்மை. யாருமே எதிர்பார்க்கல. அப்போ தேவயானி பெரிய ஹீரோயின், ராஜகுமாரன் ஒரு படம் மட்டுமே எடுத்த இயக்குனர். காதலே அப்படித்தானே? அதற்கு காரணம், தர்க்கம்லாம் இருக்கா என்ன? ஆனால், இன்று வரை அவுங்க ஒருவருக்கொருவர் பெரிய சப்போர்ட்டா சந்தோஷமா வாழுறாங்க, எனக்கும் அது ரொம்ப சந்தோஷம்.


விக்ரம், 'புதுக்காவியம்' டைம்ல இருந்த அதே மனநிலையில்தான் இப்பவும் இருக்கார். தன் தோல்விகளை எப்படி அமைதியாக, உறுதியாக தாங்கினாரோ வெற்றியையும் அப்படித்தான் பார்த்தார். "எப்போ நரைச்ச முடியை சிசர்ல கட் பண்ணுனாலும் எனக்கு உங்க ஞாபகம்தாங்க வருது"னு சொல்வார். நான் அதை ரெகுலரா செய்வேன். சின்ன விஷயத்தையும் கவனிச்சு, அதைத் தாண்டி அதை என்னிடம் சொல்லி, இதெல்லாம் விக்ரமின் அன்புக்கு அடையாளம். வெற்றியின் போதும் அதிக படங்கள் பண்ணி சம்பாரிக்கணும்னு அவசரமெல்லாம் படாம நல்ல படங்கள் செய்தார்.



சாமி ஸ்கொயர் படம் ஷூட்டிங்குக்குப் போனப்போ எனக்கு நரை முடி வைத்து வயசான கெட்-அப். விக்ரம் என்னடான்னா இளமையாவே வந்தார். "என்னங்க இது அநியாயம், எனக்கு வயசாயிடுச்சு சாமிக்கு மட்டும் வயசாகாதா?"ன்னு கேட்டேன். "இல்லை சார், இது சாமி இல்லை, சாமியோட பையன். நீங்க சாமி ஃப்ரெண்ட் என்பதால அவருக்கு ஹெல்ப் பண்றீங்க"ன்னு டைரக்டர் சொன்னார். "அப்போ எனக்கும் பையன் கேரக்டர் வைங்க, நானும் இளமையா நடிக்கிறேன்"னு சொன்னேன். "சும்மா இருங்க நீங்க" என்று விக்ரம் சிரிச்சுகிட்டே சொன்னார். இப்படி, கொடுக்கல் வாங்கல் என்பது எங்க நட்பில் அன்பை மட்டும்தான். அதுனால ரொம்ப அக்கறையான, நல்ல நட்பா இருக்கு எங்களோடது. காதல் அப்படின்னா, நட்பு இப்படித்தானே...

முந்தைய பகுதி:

"அய்யய்யோ... ஆளை விடுப்பா" - செல்வராகவனிடம் கெஞ்சினேன்! ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #8


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT