ADVERTISEMENT

''விசுவாசத்தைக் காட்டியவர்'' எனக் கண்ணீர் விட்டு அழுத சசிகலா! - ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட முடிவு?

12:47 PM Oct 23, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிறையில் இருக்கும் சசிகலா இன்னமும் அபராதத் தொகையைக் கட்டவில்லை. அதைக் கட்டுவதற்காக பா.ஜ.க.வின் அனுமதி வேண்டி காத்திருக்கிறார். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து கிளம்பியிருக்கும் எதிர்ப்பு, சசி தரப்பினருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.


தினகரன்தான் தலைவலி என எடப்பாடி அண்ட் கோ தெரிவிப்பதால், அவருக்கு வாய்ப்பூட்டு போட்ட சசிகலா, தினகரன் கையில் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் வரவேண்டும் என காய் நகர்த்திய அவரது மனைவி அனுராதா, சசிகலாவுக்கு ஜெ.வைப்போல வேஷமிட்டு மக்கள் மத்தியில் வெறுப்புவர காரணமாக இருந்த கிருஷ்ணப்பிரியா, விவேக், ராவணன் உட்பட அனைவரையும் மவுன விரதம் கடைப்பிடிக்க வைத்தார் சசிகலா.

ஒட்டுமொத்த குடும்பமே மவுனமான நேரத்திலும் தினகரனால் சும்மா இருக்க முடியவில்லை. அ.ம.மு.க சார்பில் தமிழகம் எங்கும் போஸ்டர்கள், பேனர்கள், சுவர் எழுத்துகள் என ஆக்டிவாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். அத்துடன் அ.ம.மு.க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தினார். கரோனாவுக்கு பயந்து தனது குடும்பத்துடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியிருந்தார் அ.ம.மு.க பொருளாளரான வெற்றிவேல். அவரையும் விடாமல் துரத்தி அந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கெடுக்க வைத்தார் டி.டி.வி. தினகரன். அதுதான் வெற்றி வேல் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதனால் கரோனா நோய் தாக்கிய வெற்றிவேல் இறந்துபோனார்.

இது சசிகலாவை பெரிதும் வருத்தமடையச் செய்தது. பெங்களூருவில் இருந்து தினகரனை தொடர்பு கொண்ட சசிகலா, "எதுக்குப்பா இந்த ஆலோசனைக் கூட்டங்களெல்லாம் நடத்துன? அதுக்கு வந்ததால வெற்றிக்கு கரோனா வந்து, இப்போ இறந்துபோற நிலைமை ஆயிடுச்சே... வெற்றி மாதிரி நமக்கு உழைக்க இன்னொரு ஆளு கிடைக்குமா? அக்கா(ஜெ) அப்பல்லோவுல இருந்த வீடியோவை வெளியிட்டு அதனால வந்த எதிர்ப்புகளையெல்லாம் வீரமா சமாளிச்சிட்டு நின்னு விசுவாசத்த காட்டியவர் வெற்றிவேல்'' எனக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் சசிகலா.

"உன்னத்தான் சைலண்டா இருக்க சொல்லியிருக்கேன்ல. இப்போ ஒரு உயிர் போச்சே'' என்கிற சசிகலாவின் சூடான வார்த்தைகளால் நொந்துபோன டி.டி.வி., வெற்றிவேலின் படத்துக்கு அஞ்சலி செலுத்த காரின் பின்சீட்டில் அமர்ந்து சத்தம் இல்லாமல் வந்து போனார் என்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.

சசிகலாவுக்காக பா.ஜ.க.விடம் சுப்பிரமணிய சாமி பேசிக் கொண்டிருக்கிறார். "சசிகலா இன் - தினகரன் அவுட்' என்கிற ஃபார்முலாபடி பேச்சுவார்த்தைகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இ.பி.எஸ்.ஸின் கை, பாஜக - சசிகலா பேச்சுவார்த்தையில் இடைமறித்தல் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. இப்போதுவரை இந்த விவகாரத்தில் இ.பி.எஸ்.ஸின் கையே ஓங்கி இருக்கிறது. இந்நிலையில், ஓ.பி.எஸ் மகனின் தனி விமானத்திலான மொரீசியஸ் பயணத்தில், டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நயினார் என்ற பெயருடைய தி.நகரைச் சேர்ந்த ஒரு பிஸ்னஸ் மேனும் உடன் சென்றிருக்கிறார் என்ற தகவல் இ.பி.எஸ் முகாமை கலவரமடையச் செய்துள்ளது.

இ.பி.எஸ்.ஸை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் வரை பா.ஜ.க.வை பகைத்துக்கொள்ள தயாராக இல்லை. அமித்ஷா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என சொல்லியிருப்பது எடப்பாடி தரப்பை, பா.ஜ.க நாங்கள் சொல்வதைத்தான் கேட்கும் என உறுதியாகப் பேச வைத்திருக்கிறது.

இது சசிகலா தரப்பினருக்கு சங்கடத்தை உருவாக்கியுள்ளது. சசிகலா தனது அபராதத் தொகையைக் கட்ட கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்திற்கு இந்த வாரத்துக்குள் பா.ஜ.க க்ரீன் சிக்னல் கொடுத்துவிடும் என பேசி வந்த அவரது சொந்தங்கள், இன்னமும் பா.ஜ.க - சசிகலாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடியவில்லை என்கிறார்கள். ஆனாலும் சசிகலா தரப்பு நம்பிக்கையை இழக்கவில்லை.

மறைந்த வெற்றிவேல் வசம் கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வீடியோ ஆதாரங்களைக் கண்டெடுத்து கைப்பற்ற சசிகலா உத்தரவிட்டிருக்கிறார். மொத்தம் 12 வீடியோக்கள் இருக்கிறது. அவையெல்லாம் சசிகலா, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது எடுத்த வீடியோக்கள். அந்த வீடியோக்களில் ஜெயலலிதா சசிகலாவை புகழ்ந்து சசிகலா செய்து வரும் பணிவிடைகளை பாராட்டி மூச்சுத் திணறலுடன் மரண வாக்கு மூலம்போல பேசியிருக்கிறார் என்கிறார்கள்.

நாளை ஒரு வேளை எடப்பாடி கை ஓங்கி, சசிகலாவை அ.தி.மு.க.வில் அனுமதிக்க மறுத்தால் சட்டப்படி ஜனவரி மாதம் வெளியேவரும் சசிகலா, ஜெயலலிதா மரணத்தில் தன் மீதான பழியை உடைக்க அவர் வீடியோக்களை ஒவ்வொன்றாக தேர்தல் முடியும் வரை வெளியிட்டு, அ.தி.மு.கவினரைத் தன் வசப்படுத்துவார் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.

இதை எப்படிச் சமாளிப்பது என ஆலோசித்த எடப்பாடி, சசிகலா வெளியே வந்தால் அவர் யாரை சந்திக்கிறார் என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். மற்றபடி அவருக்குப் பதில் கொடுக்கும் பொறுப்பு அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒப்படைப்பது என முடிவெடுத்துள்ளார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT