Skip to main content

தினகரனை அவமானப்படுத்திய சசிகலா! டென்ஷனில் தினகரன்!

அ.ம.மு.க. நிர்வாகிகள் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திப்பதற்கு பெங்களூரு புகழேந்தி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், சென்னையைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய மூவரோடு சென்றார் தினகரன். அவர் கையில் ஒரு பெரிய ஃபைல் இருந்தது. அவர் கூடவே சென்றவர்கள், எப்படி தங்க.தமிழ்ச் செல்வன் அ.ம.மு.க.விலிருந்து விலகினார் என சசிகலாவிடம் விளக்குவதற்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். சசிகலாவிடம் "நான்கு பேர் உங்களை சந்திக்க வந்துள்ளனர்' என சொல்லப்பட்டது. "அந்த மூன்று பேர் எதற்கு' என சசிகலா கேட்டார். "அவர்கள் விளக்கம் சொல்லி பேச வருகிறார்கள்' என சொல்லப்பட, "எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். அவர்களை போகச் சொல்லுங்கள்'' என வாசலிலேயே துரத்தி விட்டார் சசிகலா. தினகரனை மட்டும் வரச் சொல்'' என கோபம் கொப்பளிக்க சசிகலா அழைக்க தினகரன் உள்ளே சென்றார்.

 

ammkசசிகலாவை நாற்பது நிமிடம் சந்தித்து விட்டு வந்த தினகரனின் முகம் வாடியிருந்தது. "அண்ணே அப்படி என்னண்ணே சொன்னாங்க?'' என கேட்ட புகழேந்தியிடமும், பழனியப்பனிடமும் ஒன்றுமே பேசாமல் முகத்தை துடைத்தபடியே வந்தார் தினகரன். "அண்ணன் ஏன் பேசாம வந்தார்' என பெங்களூருவில் தங்கியிருந்த ஹோட்டல் வரை கவலைப்பட்டபடியே வந்தார்கள் இருவரும். ஆனால் பெங்களூருவிலிருந்து புறப்பட்ட தினகரன் சென்னை வரும் வரை எதுவுமே பேசவில்லை. அடையாறு வீட்டுக்கு வந்த பிறகு மனைவி அனுராதாவிடம் மட்டும் உடைந்த குரலில், ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க என தினகரன் வருத்தப்பட்டார் என்கிறார்கள் தினகரனுக்கு மிக நெருக்கமானவர்கள்.

 

ammkஅப்படி என்ன அவமானத்தை சசிகலா தினகரனுக்கு தந்தார் என அவரது சொந்தங்களிடம் கேட்டோம். அ.ம.மு.க.விலிருந்து நாளொரு நிர்வாகிகள் விலகிப் போன சூழலில் புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலாவின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார் தினகரன். தங்க.தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக முத்துசாமியை மாவட்ட பொறுப்பாளராக்கியது அடங்கிய நிர்வாக பட்டியலை பார்த்ததுமே டென்ஷன் ஆனார் சசி. அ.ம.மு.க.வில் தலைவர் பதவியை மட்டுமே எனக்கு காலியாக வச்சிருக்க. அ.தி.மு.க.வில் மதுசூதனன் மாதிரிதானே அ.ம.மு.க.விற்கு நான் இருக்கிறேன். அதிகாரம் மிக்க பொதுச்செயலாளர் பதவியை நீ தானே வச்சிருக்க. அப்புறம் எதுக்கு நிர்வாகிகள் பட்டியலை எனக்கு காட்டுறே? இதில் நான் என்ன செய்ய முடியும்?'' என்பதுதான் சசி கோபத்துடன் கேட்ட முதல் கேள்வி.

 

ammkஉறவுகளைப் பொறுத்தவரை, வனிதா மணி குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தின கரனுக்கும் டாக்டர் வெங்கடேசுக்கும் சசிகலா திடீரென முக்கியத்துவம் கொடுத்தது பிடிக்க வில்லை. டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கியதும் ஓ.பி.எஸ்.சை முதல்வர் பதவியிலிருந்து எடுத்ததையும் உயிரோடிருக்கும் வரை நடராஜனும் இன்றைய நாள் வரை  திவாகரனும் சசிகலாவிடம் சண்டை போடும் விவகாரங்களில் ஒன்று. ஓ.பி.எஸ்.சை நீக்கியதால் அவரை பா.ஜ.க. கையிலெடுத்தது. அதற்குப் போட்டியாக இ.பி.எஸ்.சை சசிகலா கையிலெடுத்தார். அன்று முதல் இன்று வரை சசிகலாவிடம் தினகரன் அவரது மனைவி அனுராதாவின் நடவடிக்கைகளை போட்டுக் கொடுத்து கொண்டுதான் சொந்தபந்தங்கள் இயங்கி வருகின்றன.

 

ammkகுறிப்பாக சசிகலாவுடன் 24 மணி நேரமும் சிறை வாசம் அனுபவிக்கும் இளவரசிக்கும் சுதாகரனுக்கும் ஒத்துவரவில்லை. இளவரசியின் மகன் விவேக்கிற்கு திவாகரன் மகன் ஜெய் ஆனந்திற்கு மதிப்பு கொடுக்காதது போலவே முக்கியத்துவம் எதையும் தினகரன் கொடுக்க மறுத்தார். அத்துடன் ஜெயா டி.வி.யின் செய்திப் பிரிவையும் தனது ஆட்களால் ஆக்கிரமித்து விவேக்கிற்கு குடைச்சல் கொடுத்தார். போதாக் குறைக்கு சசிகலா குடும்பத்தின் பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு விவேக் மட்டும்தான் நிர்வாகியா என்றதோடு, அடிக்கடி சசிகலாவுக்கு வியாபார ரீதியில் பணம் தர வேண்டியவர்களை மிரட்டி அ.ம.மு.க. செலவுகளுக்கு பணம் கேட்டார். இதெல்லாம் இளவரசி, தினகரன் மீது வைக்கும் புகார்கள்.

இதுதான் தினகரன்-சசிகலா சந்திப்பில் அடுத்த மோதலாக வெடித்தது. அ.ம.மு.க.வை நீ நடத்து, என்ன வேணுமானாலும் செய். அதன் செலவுகளுக்காக விவேக்கிடம் மோதாதே. அவன் எனக்காக தொழில் நடத்துகிறான். ஏற்கனவே தேர்தல் செலவுக்காக கொடுத்த 1,500 கோடிக்கு கணக்கு வரலை. இன்னும் எதுக்கு உனக்கு பணம்? ஒழுங்கா கணக்க செட்டில் பண்ணு'' என எகிறிய சசிகலாவை தினகரன் சமாதானப் படுத்த முயன்றார். சசிகலா அடங்கவில்லை.  எல்லோரும் உன்னை விட்டு ஓடுறான். அதுக்கென்ன காரணம்னு நீ யோசிச்சியா? உன்னை விட்டு போன தங்க.தமிழ்ச்செல்வன், இரத்தினசபாபதி எம்.எல்.ஏ., இவங்கள்லாம் இன்னிக்கும் திவாகரன்கிட்ட பேசிக்கிட்டிருக்காங்க. கலைச்செல்வன் எம்.எல்.ஏ. நீ எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பேன்னு சொன்னதால போனேன்னு சொல்றாரு. நீ இன்னிக்குதான் திடீரென்று எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பேன்னு சொன்னியா? போறவனுக்கு ஒரு காரணம் வேணும். அவங்கள்லாம் எனக்கு விசுவாசமானவங்க. எத்தனை கோடி கொடுத்தாலும் என்னை விட்டு போக மாட்டாங்க. அவங்க விட்டுட்டு போறாங்கன்னா, நீ நடந்துக்குற முறை அப்படி.

நீயும் உன் குடும்பமும் உன்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கிட்டு உங்களுக்கு புடிச்சவங்கள வச்சு சர்க்கஸ் வித்தை நடத்துற மாதிரி கட்சி நடத்துறீங்க. உங்களை நம்பி லட்சக்கணக்குல செலவு செய்யுறவங்களை நீங்க அவமானப்படுத்துவீங்க. எவன் உங்க கூட இருப்பான். இதுல உன்னோட கீழ்த்தரமான செய்கைகள் வேறு. டி.வி. மைக்குகளில் பேசிட்டா பெரிய தலைவரா? அக்காவை விட பெரிய ஆளா? என்ன நினைச்சுக்கிட்டிருக்கே என ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார் சசிகலா'' என்கிறது பெங்களூரு சிறை வட்டாரம்.


சசிகலாவை பொறுத்தவரை டி.டி.வி. தினகரன் மீது நம்பிக்கையில்லை. ஆனால் அ.ம. மு.க.வை முற்றிலுமாக அவர் இழக்க விரும்பவில்லை. பா.ஜ.க. அரசு சசிகலா குடும்பத்தினரிடம் நடத்திய வருமான வரி சோதனைகளை சேகர் ரெட்டி பாணியில் எதிர்கொண்டு வெளியே வர நினைக்கிறார். இதுவரை வருமான வரித் துறை சசி குடும்பத்தின்மீது அதிக அளவு ஆக்ஷ னில் இறங்கவில்லை. விவேக் சென்னையில் கட்டி வரும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் மற்ற விவகாரங்களும் எந்த வித சேதாரமும் இல்லாமல் நடப்பதை பா.ஜ.க. அளிக்கும் பாசிட்டிவ் சிக்னலாகத்தான் சசிகலா உணர்கிறார்.


அதேபோல ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவரும் சசிகலாவுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். அதனால் தன்னை சந்திக்க வந்தது தினகரனிடம், ஒரு ஆணியும் நீ பிடுங்க வேண்டாம் என்ற ரீதியில் சொல்லிவிட்டார். ஒன்றரை வருடங்கள் கழித்து சசி வெளி வரும்போது ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., அ.ம.மு.க., திவாகரனின் அ.தி.க. என அனைத்தும் ஒன்றாகிவிடும். பா.ஜ.க., ரஜினி, ஒருங்கிணைந்த அ.தி.மு.க. என சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும்போது, அ.தி.மு.க.வில் தீர்மானிக்க கூடிய இடத்தில் தான் இருப்போம், இப்படி கணக்கு போடுகிறார் சசி.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...