ADVERTISEMENT

''உங்களுக்கு ஒரு லஞ்சக் கதை சொல்லப் போறேன்...'' -அம்பலப்படுத்தும் அப்ரூவர்!

10:46 AM Nov 18, 2020 | rajavel

ADVERTISEMENT

சார் என் பேரு அங்குலிங்கம். நான் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை பத்தி பேசறதுக்காக... இல்லையில்லை... உங்களுக்கு ஒரு லஞ்சக் கதை சொல்லப் போறேன்... அப்ரூவரா மாறி! ஆனா இந்தக் கதை தமிழ்நாடு முழுக்க இருக்கற அத்தனை ஆர்.டி.ஓ ஆபிசிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ADVERTISEMENT

பரணி ஆட்டோ கன்சல்டிங் ஓனர் சக்திவேலிடம் 15 வருடமாக வேலை செய்து வந்தேன். எம்.எம். பைனான்ஸ் ஏஜெண்ட் சபியிடம்தான் வண்டிகளுக்கு லோன் வாங்குவோம். சபிக்கு ஆர்.டி.ஓ ஆபிசின் நேர்முக உதவியாளர் பழனியப்பனுடன் நல்ல தொடர்பு உண்டு. பிறகுதான் தெரிந்தது இருவரும் சேர்ந்து நிறைய வடிவில் கையாடல் செய்வது.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய வரி வசூலை எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இருவரும் கையாடல் செய்வதை நான் தெரிஞ்சுக்கிட்டேன்ங்கிறது அவங்களுக்கு தெரிஞ்சிடிச்சி. அங்குலிங்கம் இதுல தப்பே இல்ல. உனக்கு சொந்தமா வீடு இருக்கா? காலிமனை மட்டும்தான் வச்சிருக்கியா? உன் இடத்துல வீடு கட்ட நாங்க உனக்கு பணம் கொடுக்கறோம். உனக்கும் குழந்தை இருக்கு. அதையப் புரிஞ்சுக்கோ... வாழ்க்கையை வாழ்ந்து பாருன்னு என்னையும் அவங்க மோசடிக்கு சம்மதிக்க வச்சாங்க.

வீடு கட்ட எனக்கு 24 லட்சம் பணம் கொடுத்ததால, அவங்களுக்கு நானும் துணையாப் போனேன். என்னோட, என் மனைவியோட, என் நண்பர்களோட ஆதார் அட்டையை வாங்கி னாங்க. 25 செக் லீப் கேட்டாங்க. கொடுத்தேன். ஆர்.டி.ஓ. ஆபீசில் சி.சி.டி.வி கேமரா இருந்த பின்புற அறையில் இருந்து அதைக் கழட்டி வச்சுட்டோம். அந்த ரூம்லதான் எல்லா லஞ்சப் பரிவர்த்தனை களையும் பண்ணுவோம்.

ஆர்.டி.ஓவா இருந்த சிவகுருநாதன் சிஸ்டம் பாஸ்வேர்டு, ஓ.டி.பி நம்பரை இவங்க இரண்டு பேரும் எடுத்துட்டாங்க. வண்டிகளுக்கு கொடுக்கற ஆர்.சி. புக் இப்ப ஸ்மார்ட் கார்டா மாறிருச்சு. இதுதான் அவங்க போர்ஜரி பண்றதுக்கு ஏதுவா போயிருச்சு.

அதாவது, லாரி, ஸ்கூல் பஸ், கார், டூ வீலர்களுக்கு டேக்ஸ் பணம் கட்ட வருவாங்கள்ல, அவங்க கொடுக்கற பணத்தை பி.ஏ பழனியப்பன் வாங்கிடுவாருங்க. அப்புறம் ஆன் லைன்ல போய்... உங்க ரசீது எடுத்துக்கோங்கன்னு பணம் கட்ட வந்த ஆளுங்ககிட்ட சொல்லிடுவாங்க. பி.ஏ. மூலமாவே டேக்ஸ் கட்டுறதால, வந்தவங்களில் பல பேரு ஆன்லைன் ரசீதை கண்டுக்க மாட்டாங்க. அந்த வெப்சைட் பக்கமும் போக மாட்டாங்க.

இதைத்தான் நாங்க சாதகமா பயன்படுத்திக்கிட்டோம். 1,00,000(ஒரு லட்சம்) ரூபாய் கொடுத்திருந்தா, ஒரு ஜீரோ எடுத்துருவோம். 10,000தான் கணக்குல காட்டுவோம்.

அரசாங்கத்துக்கு போற பணத்துல முக்கால்வாசி நாங்க எடுத்துக்குவோம். கடந்த 3 வருஷத்துல 10 லட்சம் வாகனங்களுக்கு அனுமதி புதுப்பிச்சு கொடுத்துருக் கறோம். ஆனா நாங்க 1 லட்சம் வாகனங்களுக்குத்தான் கொடுத்தோம்னு கணக்கு கம்மி பண்ணிக் காட்டிட்டோம். இப்படித்தான் அரசாங்கத்துக்கு சேரவேண்டிய பணம் சுருட்டப்பட்டது.

ஏ.ஆர்.பி. ஸ்கூல் பொள்ளாச்சியில புகழ் பெற்ற ஸ்கூல். அங்க இருக்கற அத்தனை பஸ்கள்லயும் நான்தான் வேலை செய்வேன். நான் வேலை செய்ற அத்தனை வண்டிக நம்பரும் சபிக்கு அத்துப்படி. ஒரு நாள் பச 41 ஆப 9091 அப்படிங்கற வண்டியோட உரிமையாளர் என்னைத் தேடி வந்தாரு. என் வண்டியோட ஓனரா உன் பெயர் எப்படிடா வந்துச்சு?ன்னு என்கிட்ட சண்டைக்கு வந்துட்டாரு. எனக்கே ஒண்ணும் புரியலை. நான் போய் சபிகிட்ட கேட்டேன். பழனியப்பனும், சபியும் சேர்ந்து என்கிட்ட, இது பெரிய மேட்டரே இல்ல... நாங்க பாத்துக்கறோம்னு சொன்னாங்க.

எனக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் நான் வேலை செஞ்ச ஏ.ஆர்.பி. ஸ்கூல் வண்டி நம்பர்களை எடுத்து பார்த்த போது... எங்க கிட்ட வாங்குன ஆதார் கார்டு நம்பர் மூலமா என் மனைவி, என் நண்பர்களை வண்டிகளோட ஓனர் போல ஆக்கியிருந்தது தெரிந்தது.

எனக்கு பயங்கர ஷாக். உங்க வண்டி என் பேர்ல இருந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. எதுக்கு இப்படி பண்ணாங்கன்னு விசாரிக்கும் போதுதான்... நாங்கதான் வண்டி ஓனர்கள்னு சொல்லி, சென்னையில இருக்கற சேட்டுகிட்ட, என்னோட செக் லீப்பை எல்லாம் கொடுத்து 1 கோடியே 24 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறான் சபி.

அந்தப் பணத்தை 5 ரூபாய் வட்டிக்கு பெரிய பெரிய ஆளுகளுக்கு கொடுப்பான்.

மாசா மாசம் சேட்டுக்கு வட்டியோட சேர்த்து கட்டுவான். இதுதான் அவங்களோட டோட்டல் பிளான். இப்படித்தான் பல கோடிகள் பழனியப்பனும், சபியும் சம்பாதிச்சாங்க. சம்பாதிச்சுட்டும் இருக்காங்க. ஆர்.டி.ஓ. ஆபீஸ் செல்வாக்கு மூலமா மறுபடியும் வண்டி ஓனர்ஷிப்பை மாத்திடுவாங்க. வண்டியின் உண்மையான ஓனருக்குத் தெரியாமல், இப்படி பல டிரான்சாக்ஷன் நடந்திருக்குது. இதிலே என்னை மாதிரி சிக்கிக்கிட்டு தவிக்கிறவங்க நிறைய பேரு. சம்பந்தமில்லாதவங்க பேரிலே எல்லாம் கடன் இருக்குது.

ஏ.ஆர்.பி. ஸ்கூல் என் மேல புகார் கொடுக்க... கடைசியில, நான்தான் 1 கோடியே 24 லட்சம் ரூபாயை சுருட்டிட்டேன்னு என் மேல பழி போட்டு ஓட விட்டுட்டாங்க.

என்னைக்கு ஆர்.சி. புக்கை தூக்கிட்டு ஸ்மார்ட் கார்டு கொண்டு வந்தாங்களோ, அப்ப இருந்துதான் இப்படிப்பட்ட மோசடிகள் அதிகமா நடக்குது. அதனால, யாரா இருந்தாலும் உங்க வண்டி உங்க பேர்லதான் இருக்கான்னு செக் பண்ணிக்குங்க. இதை சொல்றதுனால எப்ப வேணாலும் நான் கொல்லப்படலாம். இல்லைன்னா அரெஸ்ட் பண்ணப் படலாம்...'' எனச் சொல்லிய அந்த இரவே அங்குலிங்கம் கைது செய்யப் பட்டு விட்டார்.

பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்தில் நடந்த லஞ்சம், ஊழல் பற்றி அங்குலிங்கம் கொடுத்த புகாரை ஹைகோர்ட்டில் வழக்காக தொடுத்து இருக்கும் வழக்கறிஞர் பவானி சுபாஷ் நம்மிடம், ""அரசுக்கு உரிய முறையில் வரு வாய் கிடைக்க வேண்டும். அதில் எந்த விதமான முறைகேடும் இருக்கக்கூடாது என்பதற் காகத்தான் அனைத்துத் துறைகளையும் கம்ப்யூட்ட ரைஸ்டு செய்து, அதை உரிய அதிகாரிகள் பயன்படுத்த வைத்துள்ளது. ஆனால் இதிலும் அரசுக்கு வரவேண்டிய வருவாயை தடுத்து இந்த மின்னணு சாதனத்தில் முறைகேடு நடத்தி கொள் ளையர்களுடன் கூட்டு சதி செய்து, அதிகாரிகளும் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார்கள்.

இது ஏதோ லஞ்சம் சம்பந்தப்பட்டது என முடிவு செய்யக்கூடாது. இது அரசின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த முறைகேடுகளை விசாரிக்க சி.பி.ஐ. விசா ரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒரு ஊரிலேயே இப்படிப்பட்ட முறைகேடு நடந்துள்ளது என்றால் தமிழகம் முழுக்க இந்த அலுவலகங்களில் எவ்வளவு ஊழலும் லஞ்சமும் முறைகேடுகளும் நடந்திருக்கும்?

இதில் பல கோடிகள் கைமாறி இருக்கிறது. முழுமையான விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் இரும்புக்கரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் அழுத்தமாக.

பழனியப்பன் பொள்ளாச்சியில் இருந்து திருச்சிக்கு மாறுதலாகிப் போய் விட்டார் என்கிற தகவலையடுத்து... குற்றச்சாட்டுகள் குறித்து கேட்க பழனியப்பனை அலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டோம். ""சார்... அங்குலிங்கம்தான் பொய் சொல்றான். அவன்தான் எங்களோட பாஸ்வேர்டை ஹேக் பண்ணி நிறைய சம்பாதிச்சு இருக்கறான். அதுக்கு நிறைய ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அதை இப்போது வெளியிட முடியாது. ஒரு நாள் உங்களுக்கு காட்டுகிறேன். சபியோட நம்பர் என்கிட்ட இல்லை. கேட்டு வாங்கித் தர்றேன்...'' என சொல்லி விட்டு லைனை கட் செய்து விட்டார்.

வெளிவராத பல மோசடிகள் ஆர்.டி.ஓ. ஆபிசில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை அரசாங்கம் ரெனிவல் பண்ணுமா?

-ஜீவா தங்கவேல், அ.அருள்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT