ADVERTISEMENT

"விவசாயம் செய்து தோடு, மூக்குத்தியை மீட்க பார்ப்பார்களா, இல்லை கலெக்டரிடம் புகார் கொடுப்பார்களா..?" - விசிக செல்லதுரை காட்டம்!

12:35 PM Oct 09, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி. அரசுக்கு எதிராக தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செல்லதுரையிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

வேளாண் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த மத்திய அரசு, இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறது. இந்நிலையில், இந்தக் கருத்தை எடுத்துக்கொண்டு பாஜக தரப்பு, விவசாயிகள் ஏன் போராடுகிறீர்கள் என்று தொடர்ந்து கேட்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

அவர்கள் (விவசாயிகள்) இந்திய பிரதமரிடம் பேச வேண்டும் என்றுதான் இத்தனை நாட்களாக காத்துக்கிடக்கிறார்கள். வாங்க, வந்து அவர்களோடு நின்று பேசுங்கள். மக்களுக்காகத்தான் நீதிமன்றம், மக்களுக்காகத்தான் அரசு. எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்கள் போராட்டத்தின் காரணமாக அவை எல்லாம் மாற்றப்படவில்லையா? இவர்கள் ஏன் மாற்றுதல் என்ற பேச்சையே பேசக்கூடாது என்கிறார்கள். அது என்ன மூன்று மாதம் மட்டும் நிறுத்தி வைப்பது, மொத்தமாக இந்த சட்டத்தையே வாபஸ் வாங்குங்கள்.

விவசாயிகள்தான் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்கிறார்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து தயாராகத்தான் இருக்கிறோம் என்று மத்திய அரசு தரப்பு தொடர்ந்து கூறிவருகிறார்களே?

விவசாயிகள் தொடர்ந்து பேசினார்கள், இவர்கள் யாரும் விவசாயிகளின் பேச்சைக் காது கொடுத்து கேட்க தயாரில்லை. இந்த சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது என்று தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் கேட்பதற்கு ஆளில்லை. குறிப்பாக விலை நிர்ணயம் செய்ய உரிமையில்லை என்று விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறுகிறார்கள். ஆனால் இதுதொடர்பான புகார்களை ஆட்சியர்களிடம் தெரிவிக்கலாம் என்று கருத்து சொல்கிறார்கள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் விவசாயம் செய்து அடகு வைத்திருக்கும், மூக்குத்தி, தோட்டை மீட்க நினைப்பார்களா, ஆட்சியரிடம் சென்று புகார் கொடுப்பார்களா? அந்த வேலையை இவர்கள் பார்த்தால், விவசாயத்தை யாரு, அரசாங்கம் பார்க்குமா? இது அனைத்தும் விவசாயிகளை ஏமாற்றும் போக்காகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

இதெல்லாம் பெரும் முதலாளிகளிடம் சாத்தியப்படும். பயிரை விளைவித்து, குடோனில் அடைத்து வைத்து, தங்களுக்குத் தேவையான விலை கிடைக்கும் வரையில் முறையிடுவார்கள், இல்லை என்றால் நீதிமன்றம் சென்றாவது உரிய விலையைப் பெறுவார்கள். ஆனால், பாமர விவசாயிகளுக்கு அது சாத்தியப்படுமா என்று பார்க்க வேண்டும். இவர்கள் போராடும் விவசாயிகளையே வண்டியை ஏற்றி தாக்குகிறார்கள். விவசாயிகளின் குறைகளைக் கேட்ட அவர்கள் எப்படி செயல்படுவார்கள். அதிகாரிகள் இவர்களை ஒருபொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த விவசாய விரோத மூன்று சட்டங்களைக் கண்டிப்பாக மத்திய அரசு நீக்க வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT