Police searching VCK Member who involved in fraudulent case

சேலத்தில், சமூக நலத்துறை அதிகாரி எனக்கூறிஅப்பாவி பெண்களிடம் 14 லட்சம் ரூபாய் சுருட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகியை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

சேலம், ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி, மொச்சைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா (32). இவர், சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சேலம் அம்மாபேட்டை பச்சைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி காயத்ரி (42). அவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வருவதாக என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

Advertisment

அப்போது அவர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு மூலம் தமிழக அரசு ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குவதாகக் கூறினார். இந்த கடனுதவியைப் பெற வேண்டுமானால் பயனாளிகள் தலா 20 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், மொத்தக் கடனுதவித் தொகையில் 50 சதவீதம் அரசு மானியம் வழங்குவதாகவும் கூறினார். இதை நம்பிய நான் உள்பட பல பெண்கள் 24 லட்சம் ரூபாய் அவரிடம் கொடுத்தோம். ஆனால் அவர் உறுதியளித்தபடி கடன் பெற்றுத் தரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் காயத்ரி கூறியது போன்ற நலத்திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்பது தெரியவந்தது.

பிறகுதான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். இதையடுத்து காயத்ரியிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டனர். நெருக்கடி அதிகரித்ததால் வேறு வழியின்றி காயத்ரி முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் திருப்பிக் கொடுத்தார். பல மாதங்கள் கடந்த நிலையிலும் மீதப் பணம் 14 லட்சம் ரூபாயைத்திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் காயத்ரியிடம் பணத்தைக் கேட்டபோது, அழகாபுரத்தில் வசிக்கும் அவருடைய தோழி சாவித்திரி என்பவருடன் சேர்ந்து கொண்டு அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தனர்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் காயத்ரி, லெனின், இளமாறன், சாவித்திரி ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முதல்கட்டமாக, லெனினை காவல்துறையினர் ஆக. 20ம் தேதி கைது செய்தனர். அதற்கு அடுத்த நாள் சாவித்திரி, இளமாறன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காயத்ரியை தீவிரமாகத்தேடி வருகின்றனர். இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராகப் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.