ADVERTISEMENT

"இப்போது விட்டுவிட்டால் பிணத்தை எடுத்துவரக் கூட இந்தி பேசச் சொல்லுவார்கள்..." - வைரமுத்து காட்டம்

08:54 PM Oct 27, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் மீண்டும் இந்தி தொடர்பான பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுப் பணிகளுக்கு வருபவர்களுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் சூழ்நிலையில், இதுதொடர்பான எதிர்ப்பு போராட்டங்களும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இதுதொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாடலாசிரியர் வைரமுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகக் கடுமையாகப் பேசினார்.

அவர் பேசியதாவது, " ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. இந்தி திணிக்கப்படுவதும், தமிழன் அதனை எதிர்த்துக்கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு இது 85வது ஆண்டு. இத்தனை ஆண்டுகளாக ஒரு அரசு இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. அதனைத் தமிழக மக்களும், அரசும் எதிர்த்து வருகிறார்கள். இது சாதாரண நிகழ்வு அல்ல. தமிழை அதிகாரத்தால் அழிக்கப் பார்த்தார்கள்.சாஸ்திரத்தால் அழிக்கப் பார்த்தார்கள், தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்கப் பார்த்தார்கள். தற்போது சட்டத்தால் தமிழை அழிக்கப் பார்க்கிறார்கள்.

இது ஒன்றும் காகிதத்தால் எழுந்த மொழி அல்ல, அவ்வளவு எளிதில் யாராலும் எளிதில் எதுவும் செய்ய முடியாது. இந்த மொழியைச் சாஸ்திரத்தாலும் அழிக்க முடியாது, சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்பு நடைபெற்ற இந்தித் திணிப்பு எல்லாம் கொசுக் கடிப்பதைப் போல இருந்தது. அது நம்மைக் கடிப்பதும், அதை நாம் அடிப்பதும் நம் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் தற்போது ஆட்டுக்குட்டிக்கு மஞ்சள் தெளித்து பூ போட்டு வெட்ட அரிவாள் தயாராகிக்கொண்டிருப்பதைப் போல ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள்.

இதுவரை பலமுறை தமிழகத்தில் இந்தித் திணிப்பு போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இந்த முறை 1937ம் ஆண்டு நடைபெற்றதை விட, 1965ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தை விடத் தமிழர்கள் 2022ம் ஆண்டு இன்னும் வீரியமாக இருக்க வேண்டும். மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி, பயிற்று மொழியாக இந்தி என்ற முறைக்கு இவர்கள் வரத் துடிக்கிறார்கள். குறிப்பாக இந்திய அயலக பணித் தேர்வு இந்தியில் மட்டுமே நடக்கும் என்றால் அந்தத் தேர்வில் வெற்றிபெற்று வெளிநாட்டுத் தூதரகத்தில் பணியாற்றும் ஒருவரிடம், ஒரு தமிழருக்கோ, மலையாளிக்கோ, பஞ்சாபிக்கோ பிரச்சனை என்றால் தூதரகம் சென்று எப்படி தங்களின் பிரச்சனைகளைக் கூறுவார்கள். பிணத்தை எடுத்துவரக் கூட இந்தி தெரிந்தால் தான் முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

நாங்கள் தமிழை வாழ்வுக்கானதாக நினைக்கிறோம், ஆங்கிலத்தை வசதிக்கானது என்று நினைக்கிறோம். நாங்கள் வாழ்வோடும் இருப்போம். வசதியோடும் இருப்போம். இந்தியைப் படித்தால் ஊமைகளாக, அறிவற்றவர்களாக, மூன்றாம் தரக் குடிமக்களாக இருக்க இது வழி செய்துவிடும். அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆங்கிலத்தை அகற்றப் பார்க்கிறீர்கள். ஆங்கிலம் எங்களுக்கு அந்நிய மொழிதான். ஆனால் அறியாத மொழி அல்ல. இந்தி உள்நாட்டு மொழி தான். ஆனால் எங்களுக்கு அந்நிய மொழி. ஆங்கிலத்தை அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியாது.

200 ஆண்டுகள் இந்தியத் தேசத்தில் பேசப்பட்ட, பேசப்பட்டு வரும் மொழி, அவ்வளவு எளிதில் அதனை யாராலும் புறந்தள்ளி மாற்று மொழியைக் கொண்டுவர முடியாது. இந்தி இந்தியத் தேசத்து மொழிதானே அதைக் கற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால் இந்தியை அனுமதித்தால் என்ன நடக்கும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு முந்திரி மூட்டையில் 10 வண்டுகளை நுழையவிட்டால் என்ன நடக்குமோ அதுதான் இந்தியை அனுமதித்தால் நடக்கும். 10 வண்டுகள் தானே என்று இரண்டு மாதம் கழித்து நாம் மூட்டையைத் திறந்து பார்த்தால் மூட்டையில் முந்திரி இருக்காது, வண்டுகள்தான் இருக்கும். தமிழ் முந்திரி மாதிரி, இந்தி வண்டுகள் போல, எனவே நாம் வண்டுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT