ADVERTISEMENT

காங்கிரஸையும் பாஜகவையும் ஒரே அடியாக அடித்த உறியடி!

06:28 PM Apr 12, 2019 | vasanthbalakrishnan

செங்கதிர்மலை... தமிழகத்தில் ஒரு சிறிய அழகிய கிராமம்; எளிய மக்களைக் கொண்ட கிராமம். அதனருகே 'பக்சினி' என்ற பெயரில் இயங்கும் ஒரு தொழிற்சாலை. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறோம் என்ற பெயரில், தேவையான பராமரிப்போ பாதுகாப்பு ஏற்பாடோ இல்லாமல் கொள்ளை லாபம் ஈட்டி வரும் தொழிற்சாலை.

ADVERTISEMENT

உறியடி 2

ADVERTISEMENT



உள்ளே என்ன வாயு பயன்படுகிறது, வெளியாகிறது என எந்தத் தகவலையும் தெளிவாகத் தராத, கொடுக்கும் லஞ்சத்தால், தரத் தேவையில்லாத ஒரு ஆலை. அந்த ஆலையில் வேலைக்கு வருகிறார்கள் நாயகனும் நாயகனின் நண்பர்கள் இருவரும். நண்பர்களில் ஒருவர் வேலை நேரத்தில் தங்கள் ஆலையில் ஒரு குழாய் சேதப்பட்டிருப்பதை கவனிக்கிறார். அதை அணுகும்போது அதிலிருந்து திரவ நிலை வேதிப்பொருள் வெளியாகி முகத்தில் அடித்து, அதை சுவாசித்ததால் சிகிச்சை பயனின்றி உயிரிழக்கிறார். பேருக்கு சில நாட்கள் மூடப்படும் அந்த ஆலை மீண்டும் இயங்குகிறது. எதுவும் சரி செய்யப்படாமல் இயங்கும் அந்த ஆலையில் சில நாட்களில் மீண்டும் ஏற்படும் விஷவாயுக் கசிவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். ஆலையின் அதிபர் அரசின் உதவியோடு வெளிநாடு பறக்கிறார். பிறகு நடப்பது சினிமாவில் மட்டும் நடக்கக்கூடிய, 'இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே' என்று நாம் ஏங்க மட்டுமே கூடியவை.

மேலே படித்தது 'உறியடி 2' படத்தில் நிகழ்ந்தது. இதே காட்சி மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்தது. ஆனால், அதன் கோரமும் அதனால் ஏற்பட்ட இழப்பும் இன்னும் மிக மிகப் பெரியது. 'உறியடி' படம் போபால் விஷவாயு விபத்தை அடிப்படையாக வைத்து முக்கிய காட்சிகளைக் கொண்டுள்ளது. படத்தில் அந்த ஆலையின் பெயர் 'பக்சினி'. போபாலில் இருந்தது 'யூனியன் கார்பைட்'. 1981ஆம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது விஷவாயு கசிவுகள் நிகழ்ந்து அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் 1984இல் அந்தப் பேரழிவு நிகழ்ந்தது. உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாக இன்றும் அது கருதப்படுகிறது. அந்த ஆலை நிர்வாகத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு உடனே ஜாமீன் கிடைத்தது. அதன் பிறகு அவர் விசாரணைக்கு ஆஜராகவே இல்லை. விசாரணைக்கு வராமலேயே வயதாகி மறைந்தும் போனார். அப்போது நடந்தது காங்கிரஸ் அரசு. இந்திரா காந்தி கொல்லப்பட்டிருந்த சமயம். தேர்தல் நேரம் வேறு. அமைச்சர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பால் வாரன் எளிதாக வெளிநாடு சென்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர் வந்த காங்கிரஸ் அரசும் பிற அரசுகளும் அவரை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க, தண்டிக்க, முயற்சி செய்துகொண்டே இருந்தன. இந்திய நியதிப்படி, எதுவும் நிகழவில்லை.


போபால் கொடூரம்



போபாலில் வெளியான விஷவாயு மெத்தில் ஐஸோ சயனேட் (Methyl Isocyanate). 'உறியடி 2' படத்திலும் அதே வாயுதான் குறிப்பிடப்படும். போபாலில் இந்தக் கொடுமை நிகழ்ந்தபின் சுற்றுவட்டார மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஆனால், எந்த மருத்துவருக்கும் வெளியானது என்ன வாயு, அதற்கு சரியான சிகிச்சை எது என்பது தெரியவில்லை. ஆலை நிர்வாகமும் அதை தெரிவிக்கவில்லை. இதனாலேயே உயிரிழப்பு அதிகமானது. அரசின் கணக்குப்படியே உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 4000. இன்னும் அதிகம் என்கின்றன பிற ஆய்வுகள். பார்வை, கேட்கும் திறன் என பிற இழப்புகளை சந்தித்தவர்கள் லட்சக்கணக்கில். இன்று வரை தொடர்கின்றது அந்த விஷத்தின் தாக்கம். குற்றம் செய்தவரை தப்பிக்கவிட்டுவிட்டுத் தேடிய காங்கிரஸ் அரசின் போபால் சிறப்பைக் கூறியிருக்கும் அதே நேரம் தமிழகத்தில் நிகழ்ந்த ஸ்டெர்லைட் துயரையும் பேசுகிறது உறியடி 2.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு



படத்தில் வெளிநாடு தப்பிச்செல்லும் 'பக்சினி' ஆலை அதிபர் அங்கிருந்தபடி செங்கதிர்மலை மக்களுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிடுகிறார். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் ஒரு வீடியோ வெளியிட்டது நமக்கு நினைவுக்கு வருகிறது. மக்கள் நடத்தும் போராட்டமும் அதில் அரசும் போலீஸும் நடத்தும் தாக்குதல் தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசும் மாநில அதிமுக அரசும் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டை நினைவுபடுத்துகிறது. மிகப் பெரிய துயர் நிகழ்ந்த பிறகும் ஆலை விரிவாக்கத்திற்கு முயல்கிறார் ஆலை அதிபர். இதுவும் நாம் பார்க்காததல்ல. இறுதியாக தொழிலதிபர் தரும் பணத்துக்காக எதிரெதிர் கட்சிகளும் ஒன்றாக வேலை செய்வது மக்களுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கிறது. 'செங்கதிர்'மலை, 'லெனின்' விஜய் என பெயர்கள்... சாதிக் கட்சியின் செயல்பாடுகளைக் காட்டும் காட்சிகள்... தீர்வைத் தேடிப் பெற மக்களைத் தூண்டும் வசனங்கள் என நடப்பு அரசியலையும் அத்தனை கட்சிகளையும் ஓங்கி அடித்திருக்கிறது 'உறியடி2'. இத்தகைய ஒரு படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவும் இயக்கிய விஜய்குமாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT