ADVERTISEMENT

அ.தி.மு.க. மீதான அதிருப்தி அதிகரிப்பு! நெருக்கடியில் முதல்வர் எடப்பாடி!

12:36 PM Jul 14, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆட்சியிலும் கட்சியிலும் நாடார் சமூகத்திற்குரிய பிரதிநிதித்துவத்தை எடப்பாடியும் பன்னீரும் கொடுப்பதில்லை என்கிற அதிருப்தி, அச்சமூகத்தினரிடம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலையால் அ.தி.மு.க. மீதான அதிருப்தி அதிகரித்துள்ளன.

இந்தச் சூழலில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நாடார், மூப்பர், சாணார், கிராமணி சாதியினரை இணைப்பதற்காக, 1957-இல் போடப்பட்ட அரசாணையைத் திரும்பக் கொண்டுவர வலியுறுத்தியும், இஸ்ரோ வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் 2 கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடிக்கு அவசரமாக வைத்துள்ளன நாடார் சமூக அமைப்புகள்.

அரசியல் ஆலோசகர் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமியிடம் இது குறித்து கேட்டபோது, "1957-இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி மிகவும் பிற்படுத்தப் பட்ட சாதி பட்டியலில் (எம்.பி.சி) சாணார், கிராமணி சமூகத்தினர் இருந்தனர். 1971-இல் அந்த அரசாணை நீக்கப்பட்டது. பிறகு, 1989-இல் மிகவும் பிற்படுத்த பட்டோர் என புதிய அரசாணையைக் கலைஞர் கொண்டு வந்தார். அந்த அரசாணையில் இடம்பெற்ற சாதிகளின் வரிசைப் பட்டியலில் சாணார், கிராமணிகள் விடுபட்டு விட்டனர். அதனால், தற்போது 1957-இல் போடப்பட்ட அரசாணையைத் திரும்பக் கொண்டு வாருங்கள் எனத் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து நாடார் அமைப்புகள் போராடி வருகின்றன. முதல்வர் எடப்பாடி நினைத்தால், உள்ளடக்கிய அரசாணையைக் கொண்டு வர முடியும். கொண்டுவர வேண்டுமென்பதே நாடார் அமைப்புகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது'' என்கிறார்.

இதற்கிடையே, தென்மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காகவும், அதன்மூலம் நாடார் சமூகத்தினருக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கவும் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு வைத்து வருகிறது தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கம். இதன் பொதுச்செயலாளர் சதீஷ்மோகன், அண்மையில் முதல்வர் எடப்பாடிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

சதீஷ்மோகனிடம் இதுபற்றி பேசியபோது, "நாங்குநேரியிலுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2,500 ஏக்கர் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதில், ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்காக 1,500 ஏக்கர் நிலப்பரப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திற்கு (இஸ்ரோ) ஒதுக்க வேண்டும் என இஸ்ரோ நிர்வாகம் முதல்வர் எடப்பாடிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது.

இதனை அப்படியே கிடப்பில் வைத்திருக்கிறார் எடப்பாடி. இஸ்ரோவின் கோரிக்கை நிறைவேறினால் தென்மாவட்ட மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். ஆனால், நாடார்கள் பயன்பெற்றுவிடுவார்கள் என்பதாலேயே இஸ்ரோவின் கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளார் எடப்பாடி! நாடார் சமூகத்தைத் தொடர்ச்சியாக எடப்பாடி வஞ்சித்து வருவதால் அ.தி.மு.க.-வின் மீதான அதிருப்தி நாடார்களிடம் அதிகரித்தபடி இருக்கிறது'' என்கிறார் சதீஷ்மோகன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT