ADVERTISEMENT

முதலில் செருப்பால் அடித்ததே அவர்கள்தான் - பேரணியில் கலந்துகொண்ட பெரியார் தொண்டர் பேச்சு!

10:08 PM Jan 23, 2020 | suthakar@nakkh…


துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினி, பெரியார் குறித்து பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். திருமாவளவன் உள்ளிட்டவர்களும் ரஜினி பெரியார் குறித்த விமர்சனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். பெரியாரிய அமைப்புக்கள் பெரியார் விவகாரத்தில் பொய்யான தகவலை சொன்ன ரஜினி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும் ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற சில அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய ரஜினி, பெரியார் தொடர்பாக நான் எனது சொந்த கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்றும், பத்திரிக்கைகளில் வந்த செய்தியினை அடிப்படையாக கொண்டே கருத்து தெரிவித்தேன் என்று நேற்று முன்தினம் விளக்கம் அளித்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினி குறிப்பிட்டு பேசிய போராட்டத்தில் பங்குகொண்டு எந்த வாகனத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்டதோ அதே வாகனத்தில் பயணம் செய்த திருச்சி செல்வேந்திரன் அவர்களிடம் இதுதொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு மிக தெளிவான பதிலை அவர் வழங்கினார். இதுதொடர்பாக அவரிடம் பேசியதாவது,

ADVERTISEMENT



ADVERTISEMENT

துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ரஜினிகாந்த் பெரியார் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர் சிலை அவமரியாதை செய்யப்பட்டதாக கூறியது உண்மையா?

அவர் சொல்வதை போன்று ராமர் சிலையை வைத்து பெரியார் தலைமையில் ஊர்வலம் நடந்தது உண்மை. அது மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு. அதனால் கடவுள் சிலைகளை லாரியில் வைத்து எடுத்து சென்றோம். இந்த நேரத்தில் அந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கத்தினர் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை வளைவு அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இதே போன்று வேறு சில இடங்களிலும் தடுப்புக்கள் போடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நின்றிருந்தார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர், எங்களை நோக்கி செருப்பை வீசினார். அது எங்களை விட பல மடங்கு உயரமாக இருந்த ராமர் சிலை மீது மோதி எங்கள் மீது விழுந்தது. அதனை தொடர்ந்து மேலும் சிலர் செருப்புக்களை வீசினார்கள். இதனால் கோபமான கீழே நின்றவர்கள் ராமர் சிலையை அவர்கள் வீசிய செருப்பை கொண்டே அடித்தார்கள். மேலே நின்ற நானும் செருப்பால் ஒரு அடி அடித்தேன். ஆனால் இது பெரியாருக்கு இது தெரியாது. இப்போது இந்த செய்திகளை பேசுவது என்பது வெறும் அரசியலுக்காக மட்டுமே இருக்குமே தவிர வேறு எதற்காகவும் இல்லை. நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு இது. இதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT