ADVERTISEMENT

நகைக் கொள்ளையன் முருகன் சரண்டரில் இருக்கும் மர்மம்...நடந்த பேரம்...அதிர்ச்சி தகவல்!

11:02 AM Oct 17, 2019 | Anonymous (not verified)

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ், கடந்த 10-ம்தேதி திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தான். இவனிடம் நடத்திய விசாரணையில், லலிதாவில் கொள்ளையடித்த 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நருங்குழி நகர் பகுதியில் முருகன் தங்கியிருந்த வீட்டில் வைத்து பங்கு பிரித்துக்கொண்டது தெரிய வந்தது. அதே நேரம், இந்த கொள்ளை தொடர்பாக தேடப்பட்டு வந்த சுரேஷின் மாமன் முருகன், பெங்களூருவில் பதுங்கி யிருப்பதாக தகவல் வர, தனிப்படையினர் அங்கு விரைந்தனர். ஆனால், அடுத்த நாள் காலை பெங்களூரு சிட்டி சிவில் 11-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் குற்றவியல் நீதிமன்றத்தில் வேறொரு திருட்டு வழக்கில் முருகன் சரணடைந்தான்.

ADVERTISEMENT



பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் சரணடைந்தவன், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டான். சிறையிலடைக்கப்பட்ட முருகனை பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸார், 9 கிலோ நகைக்கொள்ளை வழக்கில் 6 நாட்கள் விசாரணைக்கு எடுத்து இரவோடு இரவாக திருச்சி அழைத்து வந்தனர். லோக்கல் போலீஸாருக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல் வந்த பெங்களூரு போலீசார், முருகன் காட்டிய இடத்தில் 12 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.

ADVERTISEMENT



இத்தகவல் அறிந்து பெரம்பலூர் போலீஸார் அலர்ட் செய்யப்பட்டார்கள். வேப்பந்தட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் கலா தலைமையிலான போலீஸார் விரட்டிச் சென்று காரை மடக்கினர். இனோவா காரின் டிக்கியில், கொள்ளையன் முருகனும், 12 கிலோ தங்க நகையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து அவர்களைப் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்த போலீஸார், பெரம்பலூர் எஸ்.பி. நிஷா பார்த்திபன், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் டி.எஸ்.பி. கோபால்ராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தினர்.


விசாரணையில், "திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்ததும் நாங்கள் தான்'' என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான். மேலும், "பஞ்சாப் வங்கியில் 6 பேர் சேர்ந்து கொள்ளையடித்தோம். வங்கியில் நாங்கள் எதிர்பார்த்த நகை கிடைக்கவில்லை என்பதால் லலிதா ஜுவல்லரியை குறிவைத்தோம். லலிதா கொள்ளையில் நானும் கணேஷ் என்பவனும்தான் உள்ளே சென்றோம். அந்த வகையில் எனக்கு 12 கிலோ தங்கம், ஒரு கிலோ வைர நகைகளை எடுத்துக்கொண்டு, சுரேஷுக்கு ஆறு கிலோ தங்க நகை கொடுத்தேன். மீதம் இருந்த நகைகளை உடன் வந்த மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேஷ், சதீஷ்குமாருக்கு கொடுத்தேன்'' என்று சொல்லியிருக்கிறான். முருகன் கொடுத்த தகவலின்படி, மதுரை வாடிப்பட்டி, குருவித்துறை, அம்பலக்கார தெருவைச்சேர்ந்த கணேசனை கைது செய்த போலீசார், 6 கிலோ நகைகளை கைப்பற்றினர்.


தமிழக போலீஸ் தொடர்ச்சியாக முருகனை விரட்டிய நிலையில் பெங்களூவில் சரணடைந்த அன்றே 6 நாள் கஸ்டடி கொடுக்கப்பட்டு அன்றைக்கு இரவே யாருக்கும் தெரியாமல் "பிரஸ்' வண்டியில் கர்நாடக போலீஸார் ரகசியமாக மொத்த நகையையும் அள்ளிச் சென்றது ஏன்? திருடப்பட்ட நகைகள் திருச்சி நகைகள் என்று தெரிந்தும் கர்நாடக போலீஸ் அதை யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்றது ஏன் என்கிற கேள்வி பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விசாரித்தபோது, "பெங்களூருவில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை விசாரிக்க ஹரிசங்கர் என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கே முருகனை கஸ்டடி எடுத்து திருச்சிக்கு அழைத்து வந்த விசயம் எதுவும் தெரியவில்லை.

பெங்களூரு போலீசார் இதற்கு முன்பு, முருகனை 90 நாள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியபோது, ஒரு உயரதிகாரிக்கு 1 கிலோ நகை கொடுத்து சமாளித்துள்ளான். அதே போன்று தற்போது தமிழகத்தில் திருடிய நகைகளை கொண்டுபோய் பெங்களூரு போலீசுக்கு கொடுத்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைத்துதான் சரண்டர், கஸ்டடி நாடகமாடியுள்ளான் என்கிறார்கள். தமிழக போலீஸ் பெங்களூருவில் முருகனை கஸ்டடி கேட்டு பெட்டிசன் கொடுக்கவிருக்கிறது. தமிழக போலீசிடம் முருகன் ஒப்படைக்கப்பட் டால், "இதுநாள் வரை நடந்த அத்தனை திருட்டுகளின் கதைகளும் வெளியே வரும். கொள்ளையடித்த பணத்தில் சினிமா படங்கள் எடுத்தது முதல், பெரிய பெரிய அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்தது எல்லாம் அம்பலமானால் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. பலரும் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன வழி இருக்கிறது என்று விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தப்பிப்பதற்கான முயற்சியில், முருகன் உயிருக்கு ஆபத்து நேரலாம்'' என்று கூறுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT