ADVERTISEMENT

நீடிக்கும் இழுபறி! விட்டுக்கொடுக்குமா தி.மு.க.?

11:33 AM Feb 05, 2021 | rajavel

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அதி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே நீடிக்கிறது.

தி.மு.க.வில் என்ன நடக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மா.செ.க்கள் சிலரிடம் விசாரித்தோம். ’தி.மு.க.வில் காங்கிரஸ், மதி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இருக்கின்றன. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கூட்டணிக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கு, எண்ணிக்கை என்பதையும் கடந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது, விரும்பும் தொகுதிகளைப் பெறுவது என்பதில்தான் இழுபறி நீடிக்கிறது. உதயசூரியனில் போட்டியிடச் சொல்லி வலியுறுத்தவில்லை என எங்கள் தலைமை சொன்னாலும், அதற்கான வலியுறுத்தல்கள் உண்டு. அதாவது, 200 தொகுதிகளில் உதயசூரியன் நிற்க வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் இலக்கு.

காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதில் பிடிவாதமாக இருந்தால், அவைகளுக்கான எண்ணிக்கை குறையும். அந்த வகையில், 34 தொகுதிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 200 இடங்களில் தி.மு.க. நேரடியாக களமிறங்கும்.

அதுவே, கூட்டணி கட்சிகளுக்கு எண்ணிக்கையை தி.மு.க. உயர்த்தினால் அந்த எண்ணிக்கையில் சரிபாதியாக தனிச் சின்னத்திலும் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட கூட்டணி கட்சிகள் சம்மதிக்க வேண்டும். அப்படி நடந்தால் 180 இடங்களில் தி.மு.க. போட்டியிட ஸ்டாலின் சம்மதிப்பார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எண்ணிக்கை 34-லிருந்து 54 ஆக உயரும். அது கட்சிகளின் தன்மைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும்.

இது ஒருபுறமிருக்க, தற்போது தி.மு.க. ஜெயித்துள்ள சிட்டிங் தொகுதிகளோடு, வெற்றி வாய்ப்புள்ள மேலும் 100 இடங்களை அடையாளம் கண்டறிந்து அதனை ஸ்டாலினிடம் தந்துள்ளது ஐ-பேக். அதில் பல தொகுதிகள் கூட்டணி கட்சிகள் அழுத்தமாக கேட்கும் தொகுதிகளும் அடங்கியிருக்கின்றன. அதனை விட்டுக்கொடுக்க தி.மு.க. தயாராக இல்லை.

இதனால், எண்ணிக்கையும் குறைவு, தி.மு.க. சின்னத்திலும் போட்டியிட வேண்டும், விரும்பிய தொகுதிகளும் கிடைக்காது என்றால் எப்படி என்கிற ஆதங்கம்தான் கூட்டணி கட்சிகளிடம் இருக்கிறது. இதனால்தான் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை.

தற்போதைய சூழலில், எண்ணிக்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு மட்டுமே இரட்டை இலக்கத்திலும், மற்றவைகளுக்கு ஒற்றை இலக்கத்திலும்தான் ஒதுக்க சம்மதிக்கிறார் ஸ்டாலின். குறிப்பாக, ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளுக்கு தலா 5 சீட் என சொல்லப்பட்டிருக்கிறது. முந்தைய தேர்தலில் மதி.மு.க.வுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதால், அதைச் சுட்டிக்காட்டி 5 சீட்டுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது தி.மு.க.

உதயசூரியனில் போட்டியிடுவதாக இருந்தால், எண்ணிக்கையைக் கூடுதலாக்குகிறோம். அதில் நீங்கள் விரும்பும் சில தொகுதிகளும், நாங்கள் தரும் தொகுதிகளும் இருக்கும் என விடுதலைச் சிறுத்தைகளிடமும், அதேபோல, 5 சீட்டுகளுக்கு ஒப்புக் கொள்ளுங்கள்; ராஜ்யசபா தேர்தலின்போது உங்களுக்கு சீட் தரப்படும் என கம்யூனிஸ்டுகளிடமும் தி.மு.க. தெரியப்படுத்தியிருக்கிறது. ஆனால், தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில் ராஜ்யசபா என்கிற கமிட்மெண்ட்டை எப்படி ஏற்பது என்கிற குழப்பம் கம்யூனிஸ்டுகளிடம் உள்ளது. இப்படிப்பட்ட சிக்கல்களால்தான் வெளிப்படையான பேச்சுவார்த்தை தி.மு.க.வில் துவங்கவில்லை'' என்கிறார்கள் விரிவாக.

தி.மு.க. வைத்திருக்கும் இப்படிப்பட்ட நிபந்தனைகளைக் கூட்டணிக் கட்சிகள் தங்களின் உயர்மட்ட குழுவில் விவாதித்து வருகின்றன. அநேகமாக, பிப்ரவரி 15-க்குள் கூட்டணி கட்சிகள் தங்களின் இறுதி முடிவை தி.மு.க.வுக்குத் தெரிவித்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு அறிவாலயத்தில் எதிரொலிக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT