ADVERTISEMENT

துட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்..! அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி? அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்!

11:45 AM Nov 09, 2020 | rajavel

ADVERTISEMENT

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் வெற்றிக்கான பட்ஜெட்டை கூட்டிக் கழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி முன்னிறுத்தப்பட்டிருப்பதால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர் போட்டிருக்கும் பட்ஜெட் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.

ADVERTISEMENT

ஆட்சியைத் தக்கவைத்து மீண்டும் முதல்வராக அமர்ந்துவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை போட்டு வைத்திருக்கிறார் எடப்பாடி. அதிகார பலம், பண பலம் ஆகியவையே திட்டத்தின் பிரதானமாக இருக்கிறது என்கின்றனர் அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்கள்.

இதுகுறித்து நம்மிடம் மனம் திறந்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர், "அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது. ஆனால், கழகங்களின் பார்வை வேறு. அவர் வரக்கூடாது என தி.மு.க. நினைப்பது போல எடப்பாடியும் நினைக்கிறார். அவரைப் பொறுத்தவரை இந்த தேர்தல் ஸ்டாலினுக்கும் நமக்குமான போட்டியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்கேற்பத்தான் அவரது தேர்தல் யுக்திகள் வகுக்கப்படுகின்றன.

தி.மு.க.வைப் போலவே அதிக இடங்களில் அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்பது முதல் யுக்தி. 185 தொகுதிகளுக்கும் குறையாமல் அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என அவரிடம் ஆலோசனை வழங்கியிருக்கிறோம். இந்த 185 தொகுதிகளிலும் தேர்தல் கால கள யுக்திகளை பயன்படுத்தினால் 155 இடங்களில் வெற்றிபெற முடியும். ஒருவேளை அமைச்சர்களின் தேர்தல் பணியில் அலட்சியம், அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு, தி.மு.க.வில் வலிமையான வேட்பாளர், சீட் கிடைக்காதவர்களால் ஏற்படும் அதிருப்தி ஆகிய பிரச்சனைகளால், 25 தொகுதிகளில் சரிவு ஏற்பட்டாலும்கூட , 130 இடங்களை அ.தி.மு.க.வால் கைப்பற்ற முடியும் என்றும் சில கணக்குகளின் அடிப்படையில் எடப்பாடிக்கு விவரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக, முந்தைய தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளிலிலும், தோல்வியடைந்த தொகுதிகளிலிலும் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்குமிடையே உள்ள ஓட்டு வித்தியாசங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் அ.தி.மு.க.வுக்கு, தி.மு.க. கூட்டணி கட்சிகளிடத்தில் கிடைத்த வெற்றியின் வாக்கு வித்தியாசத்தையும், தி.மு.க.வை வெற்றிகொண்ட தொகுதிகளின் வாக்கு வித்தியாசத்தையும் கூர்ந்து அலசியிருக்கிறோம்.

அப்படி அலசப்பட்டதில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஜெயித்த தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு தற்போதைய ஆதரவு எப்படி இருக்கிறது? அந்த தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டால் யாரை வேட்பாளராக நிறுத்தும்? கூட்டணி கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டால் யாரை நிறுத்துவார்கள்? என தோராயமாக ஆராய்ந்துள்ளோம். அந்த வகையில், அந்த தொகுதிகளில் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எப்படி உள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவு இல்லை. எதிர்ப்புதான் அதிகமாக உள்ளது. அதனால், அந்த தொகுதிகளில் தி.மு.க.வை எதிர்க்கும் வகையிலான வலிமையான புதியவர்களை களமிறக்க யோசனை சொல்லியுள்ளோம். அதேபோல, அ.தி.மு.க. தோல்வியடைந்த தொகுதிகளிலிலும் இதே ரீதியிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என முதல் யுக்தியை விவரித்தார் அந்த தலைவர்.



மேலும் விசாரித்தபோது, "கடந்த பிப்ரவரியில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள கணக்கின்படி தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் அதிகபட்சமாக 6 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கியதாக சென்னையிலுள்ள சோழிங்கநல்லூர் தொகுதியும், குறைந்தபட்சமாக 1 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்களை கொண்டதாக சென்னை துறைமுகம் தொகுதியும் இருக்கின்றன. மற்ற தொகுதிகளைப் பொறுத்த வரை 2 லட்சம் முதல் 2 லட்சத்து 93 ஆயிரம் வரை வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக, தேர்தலில் அதிகபட்சமாக 70, 75 சதவீத வாக்குகள்தான் பதிவாகின்றன. அந்த வகையில் ஒரு வேட்பாளர் 1 லட்சம் வாக்குகள் வாங்கினால் போதும். அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிடும். இதனை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. துட்டுக்கு ஓட்டு என்கிற மனநிலையில்தான் பெரும்பாலான தமிழக வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதுவும் கரோனா நெருக்கடியால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரிடம் இத்தகைய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதுவும் துட்டு அதிகமாக தருகிற கட்சிக்கு ஓட்டு என்கிற சிந்தனை அவர்களிடம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் தற்போது ஒரு ஓட்டுக்கு 2000 என்கிற கணக்கை போட்டு வைத்திருக்கிறது ஆளும் கட்சி தலைமை. அதன்படி ஒரு தொகுதிக்கு 1 லட்சம் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் தரப்படவிருக்கிறது. அந்த 1 லட்சம் வாக்காளர்களில் யாரும் மாற்று கட்சி உறுப்பினர்களாக இருந்து விடக்கூடாது என இப்போதே விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு தொகுதியில் 1 லட்சம் ஓட்டுகளை விலைக்கு வாங்க, 20 கோடியும், மற்ற தேர்தல் செலவுகளுக்காக 5 கோடியும் என 25 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் 185 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட தீர்மானிக்கப்பட்டிருப்பதால் 4,625 கோடி ரூபாய் பட்ஜெட்டை போட்டுள்ளார் எடப்பாடி. தேர்தல் வெற்றிக்கான இந்த பட்ஜெட், தி.மு.க.வின் தேர்தல் கால திட்டங்களைப் பொறுத்து அதிகரிக்கும். குறிப்பாக, அ.தி.மு.க.வையும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடியையும் தமிழகத்தின் முகமாக மாற்றும் தொழில்நுட்ப ப்ராண்டிங்கிற்கான பட்ஜெட் தனி. துட்டுக்கு ஓட்டு என்பதே இரண்டாவது யுக்தி.

இதனையடுத்து, அ.தி.மு.க. ஆட்சியே மீண்டும் வர வேண்டும் என 100 சதவீதம் விரும்பும் அதிகாரிகளைத்தான் தேர்தல் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும் நியமிக்க திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. அதேபோல, பூத்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் இதே பாணியில் நியமிக்கும் யோசனையும் விவாதிக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது யுக்தி. இப்படி பல யுக்திகள் தீட்டப்படுகின்றன'' என்று அ.தி.மு.க.வின் தேர்தல் ரகசியங்களை விவரிக்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமான சீனியர்கள்.

ஆக, கூட்டணி பலத்தைவிட துட்டுக்கு ஓட்டு என்கிற தேர்தல் பட்ஜெட் பலத்தைத்தான் அழுத்தமாக நம்புகிறது அ.தி.மு.க. தலைமை. அந்தவகையில், ஒவ்வொரு தொகுதிக்கான தேர்தல் நிதி, ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கும் போய்ச்சேர்ந்துவிட்டது. அந்த கோடிகள் பல்வேறு வழிகளில் பதுக்கப்பட்டுள்ளன. அந்த பதுக்கல் வழிகளை கண்டறிந்துதான் ரெய்டு வேட்டையை துவக்கியிருக்கிறது, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.கவினரின் தலைமுடி எப்போதும் தங்கள் கைப்பிடியில் இருக்க வேண்டும் என நினைக்கும் மத்திய மோடி அரசு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT