ADVERTISEMENT

"நீங்கள் நினைப்பது போல எல்லோரையும் உடனேயெல்லாம் சந்திக்க முடியாது!" - ஸ்டாலின், தினகரன் சந்திப்புகள் குறித்து திருமாவளவன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

10:30 AM Dec 05, 2018 | tarivazhagan

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பயணம், மத்திய மாநில அரசுகளுக்கெதிரான போராட்டங்கள், தொடரும் ஆணவக் கொலைகளுக்கெதிரான செயல்பாடுகள், இடையில் கூட்டணியில் குழப்பம் என்று செய்திகள்... பரபரப்பாகவே இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் நேரத்தில் கொஞ்சத்தை கேட்டு வாங்கினோம். சில முக்கியமான கேள்விகளுக்கு அவரது விடைகளையும் கேட்டு வாங்கினோம். எப்பொழுதும் போலவே தெளிவும் தீர்க்கமுமான பதில்கள்...

ADVERTISEMENT

ADVERTISEMENT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. நீங்கள், மக்களை நேரில் சென்று சந்தித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

கஜா புயல் அடித்தபோது நான் மாநாட்டு பணிகளில் தீவிரமான சுற்றுபயணத்தில் இருந்ததால் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்க இயலவில்லை. பிறகு நான் புதுகோட்டை மாவட்ட ஆலங்குடி வட்டாரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிராமத்து மக்களை சந்தித்தேன். அந்தப் பகுதிகளில் இருக்கும் மக்கள் எல்லாம் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். குறிப்பாக அமைச்சரின் பெயரை சொல்லியே அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் புயல் அடித்து பத்து நாட்களுக்குப் பிறகும் அவர்களுக்கு தண்ணீர் கிட்டவில்லை, வீடுகளுக்கு மின்சாரம் கிட்டவில்லை, கோவில் போன்ற பொதுவான இடங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு கிடைத்துள்ளது. அரசு தரப்பில் இருந்து ஒரு வேளை உணவும்கூட தரப்படவில்லை என்று தெரிவித்தனர். நான் சென்ற அனைத்து இடங்களிலும் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இப்படி இருப்பதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களை வஞ்சித்துவிட்டதாக மக்கள் கருதுகிறார்கள். நான் பார்த்த பல பேர்களில் என்னை பாதித்த ஒரு முதியவரின் வார்த்தைகள் ‘இந்த ஒரு மரந்தாங்கையா எனக்கு ஒரு வருஷத்தில் ஆறு மாசத்திற்கு கஞ்சி ஊத்துச்சு. இப்போ நான் என்ன பண்ணுவேன்னு தெரில’ என்றார். அவர் 40 வருடத்திற்கு முன் அந்தப் புளிய மரத்தை வைத்து ஒரு குழந்தையைப்போல் வளர்த்துவந்திருக்கிறார். அந்த மரத்தில் காய்க்கும் புளிகளை விற்று, வருடத்தில் ஆறு மாதத்திற்கு அவருக்கு உணவு அளித்துள்ளது. ஆனால் இந்தப் புயலில் அந்த மரம் வேரோடு சாய்ந்திருக்கிறது. இதுதான் அங்கிருக்கும் அனைவரின் பிரதிபலிப்பாகவும் பார்க்கமுடிகிறது.


மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் அவர்களுடன் துணையாக களத்தில் அரசியல் கட்சிகள் நிற்க வேண்டும் எனும் சூழ்நிலையில், தமிழகத்தில் கூட்டணி தொடர்பான சலசலப்புகளும் எழுந்ததே?

ஊடகங்கள் பல யூகங்களை செய்தியாகவும் அதனை ஊதி பெரிதாகவும் ஆக்கிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக துரைமுருகன் பேட்டி அளிக்கும் முன் நான் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தேன். அவர்களும் ’திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு என்ன பங்கு, என்ன பாத்திரம், என்ன இடம்’ என்பதைத்தான் மீண்டும் மீண்டும் முதன்மைப்படுத்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதற்கு நான் ‘திமுக, காங்கிரஸ் ஏற்கனவே கூட்டணியில் இருக்கிறார்கள். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லை. அதற்கு மாறாக நாங்கள் 'மக்கள் நல கூட்டணி' எனும் மாற்று அணியை கட்டி எழுப்பினோம். அதில் எங்கள் அணி வெற்றி பெற முடியவில்லை. அதன் பின் ஆர்.கே.நகர் தேர்தலிலும் எங்களால் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கமுடியாமல் போனது. மேலும் 2016 தேர்தல் முடிந்து 'மக்கள் நல கூட்டணி' தோற்றுப் போனதும் தேமுதிகவும் தமிழ் மாநில காங்கிரஸும் கூட்டணியில் இருந்து வெளியேறின. அதன் பின் கிட்டத்தட்ட 'மக்கள் நல கூட்டணி' இனி எடுபடாது என்ற நிலையிலே, போராட்டக் களத்தில் இணைந்து செயல்படுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடது சாரிகள் இணைந்து செயல்பட்டுவந்தன. அதன் பிறகு திமுக சில போராட்ட நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தது. குறிப்பாக விவசாயிகள் பிரச்சனை, ஈழத் தமிழர் பிரச்சனைகள் போன்றவற்றில் மக்கள் நல கூட்டணியில் இருந்த நான்கு கட்சிகளும் குரல் கொடுக்கத் தொடங்கினோம். அது தோழமையாக வளர்ந்து, இன்று கூட்டணி குறித்து பேசும் அளவுக்கும் ஒரு இனக்கமான உறவை உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் ஒரு தோழமையுடன்தான் இருக்கிறோம். கூட்டணியாக மாற வேண்டும் என்றுதான் எங்கள் ஆசை. ஆனால், அதனை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கமுடியாது. இதைத்தான் திரு. துரைமுருகனும் 'இன்னும் கூட்டணி உறுதிப்படுத்தி அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் குறிப்பாக மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் என்று கேள்வி கேட்டதால், 'அவர்கள் எங்கள் நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் குறித்த முடிவை தலைமை எடுக்கும்’ என்றும் சொன்னார். இதில் எந்த வகையான எதிர்மறை அணுகுமுறையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நீங்கள் தினகரனை சந்தித்தது ஒரு சலசலப்பை ஏற்படுத்தியதால் உடனடியாக ஸ்டாலினை சந்தித்தீர்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

நீங்கள் நினைப்பது போல் உடனடியாக எல்லாம் யாரையும் சந்தித்துவிட முடியாது. அவரை சந்தித்ததனால் அதை ஈடுகட்டுவதற்கு இவரை சந்திப்பது என்பது எல்லாம் முடியாது. இல்லை அவர்தான் வேலை இல்லாமல் இருக்கிறாரா அல்லது நான்தான் வேலை இல்லாமல் இருக்கிறேனா?

திமுக தலைமையிடம் நாங்கள் அனுமதி கேட்டு ஒரு வாரம் ஆனது. இந்த மாநாடு தொடர்பாக சில ஆலோசனைகளை அவரிடம் கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருந்தது. குறிப்பாக டிசம்பர் 10ஆம் தேதி எங்கள் மாநாடு தொடங்குகிறது. அதேபோல் டிசம்பர் 11, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்காக இரு அவைகளும் கூடுகிறது. மேலும் தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையில் 10ஆம் தேதி யுபிஐ தலைவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணி தொடர்பாக பேசயிருப்பதாகவும் மேலும் சந்திரபாபு நாயுடு ஒரு கூட்டத்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வந்திருக்கின்றது. இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்காகத்தான் திமுக தலைமையிடம் அனுமதி கேட்டிருந்தோம். அவருக்கும் பணிச்சுமை இருந்த காரணத்தினால், நானும் மாநாடு தொடர்பாக சுற்றுப் பயணத்தில் இருந்ததால் உடனடியாக சந்தித்துக்கொள்ள முடியவில்லை அந்த வாய்ப்பு பின்பு கிடைத்தது, சந்தித்துப் பேசினோம். இது ஒரு வழக்கமான சந்திப்புதான்.

தினகரனுடன் சந்திப்பு என்ற செய்தி வந்ததும் அவருடன் கூட்டணியா என்ற சர்ச்சை உருவாகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

கொத்தமங்கலம் என்னும் இடத்தில்தான் நானும் தினகரனும் சந்தித்துக்கொண்டோம் அதும்கூட எதார்த்தமான சந்திப்புதான். காரணம், புயல் பாதித்த பகுதிகளை பார்க்கச் சென்றபோது கொத்தமங்கலத்தின் நகரவீதியில் மக்கள் கூடி இருந்த இடத்தில், என்னை அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் பேசச் சொல்லி அங்கிருக்கும் மக்கள் என்னை கேட்டுக்கொண்டார்கள். அதனால் நான் அங்கு உரையாடிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் போலீஸ் கொஞ்சம் பரபரப்பானது, என்ன என்று பார்த்தபோது டிடிவி தினகரன் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். உங்கள் வாகனங்கள் தொடர்ச்சியாக நிற்பதனால் அவர்களால் வரமுடியவில்லை, அதனால் உங்கள் வாகனங்களை கொஞ்சம் எடுங்கள் என்று என் தொண்டர்களிடம் போலீசார் பேசிக்கொண்டிருந்தனர். இந்த விஷயம் என் காதிற்கு வந்து, நான் மேடையை விட்டு இறங்குவதற்குள் தினகரன் பிரச்சார வண்டி நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே வந்தது. ஒரு மரியாதை நிமித்தமாக நான் இறங்கியதும் அவரிடம் கை கொடுத்துவிட்டு, அவருக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். அவ்வளவுதான் எனக்கும் அவருக்கும் இடையேயான சந்திப்பு நடந்தது. இதனை வைத்துக்கொண்டுதான் திமுகவுடன் தேர்தல் சிக்கல் ஏற்பட்டுவிட்டதால், தினகரனுடன் கூட்டணி வைக்க திருமாவளவன் முயற்சிக்கிறார் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அண்மையில் கூட முதலமைச்சரை சந்தித்து பேசினேன். அதேபோல் ஒரு விருது வழங்கும் விழாவிலும்கூட மாஃபா பாண்டியராஜனை சந்தித்து பேசினேன், அதேபோல் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கடலூர் எம்.சி.சம்பத்தை சந்தித்துப் பேச நேர்ந்தது. இதுவெல்லாம் நாகரிகமான அணுகுமுறை, சந்தித்துக் கொள்வதனாலேயே கூட்டணி பேசுகிறோம் என்று கருத்து தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

பாஜகவிற்கு எதிராக ஒரு அணியை அமைக்க வேண்டுமென மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் எல்லாம் கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கும்போது. ரஜினி, பாஜகவை பலசாலியான கட்சி என்று கருத்து தெரிவித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

பாஜக ஆபத்தான கட்சியா என்பதுதான் கேள்வி. ஆனால், திரு ரஜினிகாந்த் அவர்கள் அதற்கு பதில் எதிர் கேள்வி எழுப்பி பிரச்சினையை திசை திருப்பி விட்டார். கேட்ட கேள்வியின் பொருள் அடக்கம் என்பது பாஜக நல்ல கட்சியா அல்லது கெட்ட கட்சியா என்பதுதான். அதற்கு நேரடியாக, 'அது ஆபத்தான கட்சி என்று சொல்லமுடியாது, அது நாட்டுக்கு நன்மை செய்துகொண்டிருக்கும் கட்சிதான் என்று பதிலளித்து இருக்கலாம். ஆனால் திரு. ரஜினிகாந்த் அவர்கள் பிரச்சினையை திசை திருப்பும் வகையில் பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் அந்த ஒருவர் பலசாலியா இல்லையா என்ற எதிர் கேள்வி கேட்டு பிரச்சினையை திசை திருப்பிவிட்டார். இது ரஜினிகாந்தின் ஒரு நழுவல் போக்கு. அவர் நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுற்றிவளைத்து கேள்வியின் தன்மையை மாற்றி விட்டார். இந்தப் பத்து பேர் சேர்ந்து பாஜகவை எதிர்க்கவில்லை. அவர்களின் கொள்கைகள் மக்களுக்கு விரோதமாக இருக்கிறது. அதனால் அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் சேர்ந்திருக்கிறார்கள். ரஜினிகாந்திற்கு பாஜக, ஆர் எஸ் எஸ், சங்கப் பரிவார் போன்றவற்றை எதிர்க்கக் கூடாது என்றுகூட காரணமாக இருக்கலாம். மத்தியில் ஆளும் கட்சியாகவும், மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாகவும் இருப்பதனால் அவர்களை எதிர்த்து எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT