Skip to main content

“அதிமுக, பாமக சாதிவெறியர்கள் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர்..” - இரட்டை கொலைக்கு திருமாவளவன் கடும் கண்டனம்..

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

Thirumavalavan condemn for Arakkonam issue

 

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் எனும் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் முன்விரோதம் காரணம் என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர், “அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்றுபேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

இந்தப் படுகொலைகளைக் கண்டித்து எதிர்வரும் ஏப்ரல் 10 அன்று, தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுகவின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக வேட்பாளர் கௌதம சன்னாவுக்கு ஆதரவாக பானை சின்னத்துக்கு அக்கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர். அத்துடன், பாமக ஆதரிக்கும் அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் அதிமுக, பாமக சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர்.

 

வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் அதிமுக - பாஜக - பாமக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோயில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர்  தொகுதிகளிலும்கூட தலுத்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.

 

தனது தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காக எடப்பாடி பழனிசாமி சாதிவெறியர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததோடு, தலித் மக்கள்மீதான தாக்குதல்களைக் கண்டும் காணாததுபோல் இருந்தார். அதன் விளைவே இந்தத் தாக்குதல்களும்  படுகொலைகளும் இப்போது நடந்துள்ளன.

 

விசிக இடம்பெற்றுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போவதைத் தாங்க முடியாத மதவெறியர்களும் சாதிவெறியர்களும் தமிழ்நாட்டை சீர்குலைக்க மிகப்பெரிய சதி திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பதன் அடையாளமே இந்தப் படுகொலை” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை (10.04.21) தமிழகம் முழுக்க மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.