ADVERTISEMENT

சிவபானமா இது... திருவண்ணாமலை சாமியார்களின் சுகவாசம்!   

06:14 PM Jun 23, 2018 | vasanthbalakrishnan

படுக்க இடம் கிடையாது, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வேலை கிடையாது, உற்றார், உறவினர் இருந்தும் இல்லாத நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அண்ணாமலையாரை நினைத்துக் கொண்டே வாழ்கிறோம் என உடம்பில் திருநீறு பட்டையுடனும் கழுத்தில் உத்திராட்சக் கொட்டையுடனும் வலம் வருகிறார்கள்.

ADVERTISEMENT



கடந்த வாரம் கிரிவலப்பாதையில் ஒரு சாமியாரை மற்றொரு சாமியார் அடித்து உதைத்தார். மற்ற சாமியார்கள் அதை வேடிக்கை பார்த்தபடி ‘எதையோ’ புகைத்தபடி அமர்ந்திருந்துள்ளனர். கிரிவலம் சென்ற பக்தர்களும் அதை வேடிக்கை பார்த்தனர். அப்படி வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது கற்களை வீசி எரிய முயல அவர்கள் பயந்து ஓடியுள்ளனர். இதை அவ்வழியாக சென்ற ஒருவர் போட்டோ எடுக்க அவர் மீதும் கற்களை வீசியுள்ளார். போட்டோ எடுப்பதைப் பார்த்த வேடிக்கை சாமியார்கள் புகைப்பதை நிறுத்திவிட்டு கற்களை எரிந்த சாமியாரை அடக்கி உட்கார வைத்தனர்.

ADVERTISEMENT

இதுபற்றி நம்மிடம் பேசிய சமூகநல ஆர்வலர் ஒருவர், "எல்லாம் கஞ்சா போதைங்க... பேருதான் இவுங்களுக்கு சாமியார். பாதிப்பேர் கஞ்சா அடிக்கறது, சரக்கு அடிக்கறதுன்னு இவுங்க உலகமே தனி. காலையில் 11 மணியாச்சின்னா ரமணாஸ்ரமத்துக்கும் – ஓம்சக்தி கோயிலுக்கும் இடையில் கோயிலுக்குப் பின்னால் அமர்ந்து கஞ்சாவை புகைக்கிறார்கள். அதே போல நிருதிலிங்கம் அருகே, திருநேர்அண்ணாமலை கோயில் அருகே, நித்தியானந்தா ஆஸ்ரமம் எதிரே கஞ்சா-குடி சாமியார்கள் நிறைய பேர் உள்ளார்கள். பௌர்ணமி அல்லாத நாட்களில் கிரிவலப்பாதையில் புளியமரத்தடி நிழலில் அமர்ந்து கஞ்சா புகைப்பது சகஜம், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா புகை இலவசமாக கிடைக்கிறது. இப்படி கஞ்சா புகைத்துவிட்டு அந்த போதையில் சாமியார்கள் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது சகஜம்" என்றார்.

கிரிவலப்பாதையே கதியென கிடக்கும் சாமியார்களுடன் புழங்கும் காவி கட்டிய அண்ணாமலையார் பக்தரிடம் பேசியபோது, "காவி கட்டிய வயதானவர்கள் தினம் ஒரு குழுவாகச் சென்று கடைகளில் திருவோடு ஏந்துவார்கள். அந்தக் குழு அதோடு அடுத்தவாரம்தான் செல்லும். மற்ற நாட்களில் கிரிவலப்பாதை, பெரிய கோயில் எதிரே அமர்ந்திருப்பார்கள். பௌர்ணமியன்று துண்டு போட்டும், திருவோடு ஏந்தியும் சாலை ஓரம் அமர்ந்து பக்தர்களிடம் யாசகம் பெறுவார்கள். பணத்தைப் பெற்றாலும் இவர்களுக்கு செலவென்று எதுவும் கிடையாது. தினமும் மூன்று வேலை உணவு ரமணாஸ்ரமம் உட்பட பல ஆசிரமங்களில் வழங்கப்படுகிறது. தினமும் காலையில் இருசக்கர வாகனத்தில் வந்து உணவுதானம் வழங்குபவர்கள் இருக்கிறார்கள். யாசகம் பெற்ற பணத்தில் பகலில் டீ சாப்பிடுவார்கள்.

சிலர் குடும்பத்தில் இருந்து யாராவது பார்க்க வந்தால் அவர்களுக்கு தந்து அனுப்பிவிடுகிறார்கள். பலர் இரவில் டாஸ்மாக் சரக்கும், கஞ்சாவுக்கும் செலவு செய்கின்றனர். டாஸ்மாக் கடையில் யார் கேட்டாலும் கிடைக்கிறது என்பதால் இவர்களே நேரடியாக போய் வாங்கிக்கொள்கிறார்கள். மதுவுக்குத் துணையாக பீப், சிக்கன் என உண்டுவிட்டு உறங்குவது வழக்கம். சாமியார்களாக வலம்வருபவர்கள் யாரும் கஞ்சாவை தேடி செல்வதில்லை. இவர்களை தேடி கஞ்சா வருகிறது. சாமியார் உடை போட்ட ஒருத்தரே கொண்டு வந்து விற்பனை செய்கிறார். ஒரு பாக்கெட் 50 ரூபாய்தான்" என்றார்.


முற்றும் துறந்ததாகக் கூறும் சாமியார்களுக்கே சாதாரணமாக கஞ்சா கிடைக்கிறது என்றால் மற்றவர்களுக்கு எப்படி என்கிற கேள்வி எழுந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா புகைக்கும் சாமியார்கள் மலையோரம் வசிக்கும் படிக்காத இளைஞர்களிடம் ஓரினச்சேர்க்கை செய்ததால் கொலையெல்லாம்கூட நடந்தது. சமீபமாக அப்படியெதுவும் நடக்கவில்லையென்றாலும் கஞ்சா போதையில் அவர்களுக்குள் அடித்துக்கொள்வது சகஜமாகியுள்ளது. இந்த கஞ்சாவை சிவபானம் என்றும் ஒரு சிலர் கூறிவருவதாலும் திரைப்படங்களில் யூ-ட்யூப் வீடியோக்களிலும் அவ்வாறு கூறப்படுவதாலும் கல்லூரி மாணவர்களும் இதை ஒரு ஸ்டைலாக, சிவபக்தியுடன் தொடர்புடையதாக தவறாக நினைத்து இந்தப் பழக்கத்துக்கு அடிமையாவது சமீபமாக அதிகரித்துள்ளது.

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைப் போல திருவண்ணாமலையில் உள்ள சாமியார்கள் விரும்பியபடி வாழ்கிறார்கள். உண்மையாக அனைத்தையும் துறந்தவர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களின் பக்தர்கள் பலர் பல பக்தி அனுபவங்களையும் கூட சொல்கிறார்கள். ஆனால் பலர் இந்த வகையறாவாகவே இருக்கின்றனர். என்ன தங்கள் காவி கோலத்தை மறந்து கோலாகலமாக வாழ்கிறார்கள். காவி கட்டிக்கொண்டு இவர்கள் செய்யும் எதையும் தமிழக காவல்துறை கண்டுகொள்வதில்லை. எந்த காவியைக் கண்டாலும் அவர்களுக்கு பயம்தான் போல...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT