ADVERTISEMENT

பிக் பாக்கெட் அடிப்பவர்களிடம் மட்டும் வீரத்தை காட்டினால் போதுமா..? - திருமுருகன் காந்தி கேள்வி!

02:35 PM Dec 03, 2019 | suthakar@nakkh…

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், சிதம்பரம் தீட்சகர் விவகாரம், ஐஐடி மாணவி தற்கொலை சம்பவம் பற்றி பல்வேறு கருத்துக்களை முன்வைத்தும், அதிகார வர்க்கத்தை விமர்சனம் செய்தும் கடுமையாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " இன்றைய தினம் நாட்டில் அனைவருக்கும் சட்டம் ஒன்றாக இருக்கிறதா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கிய உரிமையின்படி போராட்டம் நடத்த வேண்டும் என்று காவல்துறையினரிடம் அனுமதி கேட்டால் ஆயிரத்தெட்டு தொலைபேசி அழைப்புக்கள் வருகிறது. தொலைப்பேசியை அனைத்து வைத்தால் கூட மற்ற தோழர்களை பிடித்து நம்மிடம் தகவல் சொல்கிறார்கள். ஆனால், சிதம்பரம் கோயிலில் சாமி குப்பிட சென்ற பெண்ணை அங்கு பணிபுரிந்த தீட்சகர் ஒருவர் தாக்கி உள்ளார், அவரை மரியாதை குறைவாக பேசியுள்ளார். அவர் மீது முறையாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்று கூட அனைத்து வல்லமைகளும் பொருந்திய தமிழக காவல்துறைக்கு தெரியவில்லை. அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. காவல்துறையில் உள்ளவர்கள் நேர்மையாக இருந்தாலும், நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இருந்தாலும் அல்லது சூர்யா படத்தில் வருவது போல இருந்தாலும் அவர்கள் மீது கைவைக்க முடியுமா, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? ஜெயிலில் தூக்கி போட முடியுமா? சாதாரணமாக நாம் பொதுக்கூட்டத்தில் பேசினாலே நம்மீது பல வழக்குகள் போடுகிறார்கள், ஆனால் தவறும் செய்யும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறார்கள்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இன்று சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தன் மரணத்துக்கு இவர்கள்தான் காரணம் என்று எழுதி வைத்துக்கொண்டு மாண்டுள்ளார். கேரள முதல்வர் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டாரா? ஏன் கைது செய்யப்படவில்லை. காவல்துறை எதற்கு இருக்கிறது என்றால், ஐந்து ரூபாய், 10 ரூபாய் பிக் பாக்கெட் அடிப்பவர்களை கைது செய்து, பார் நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று சொல்லி நம்மை ஏமாற்றத்தான் இருக்கிறதே தவிர வேறு எதற்காகவும் இல்லை. இதற்காக அத்தனை செலவுகளும் செய்யப்படுகிறது. அதற்கான பணம் நம்மிடம் இருந்து வாங்கப்படுகிறது. நாங்கள் தலையில் இருந்து வந்தவர்கள் என்கிறார்களே, தலையில் இருந்து மனிதர்கள் வர முடியுமா?

தலையில் இருந்து வருகிறது என்றால் அதற்கு பெயர் வேறு. இதை வைத்து 2000 ஆண்டுகளாக எங்களை ஏமாற்றி வருகிறீர்களே, இதை யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? இதை பற்றி பேசினால் எங்களை வெறுப்பரசியல் பேசுகிறார்கள் என்கிறார்கள். நாங்களா அவ்வாறு பேசுகிறோம். நாங்கள் யாரையாவது ஒதுக்கி வைத்துள்ளோமா? அவ்வாறு இருந்தால் ஒருவரது பெயரையாவது கூறுங்கள். நீங்கள் செய்வதைவிடவா நாங்கள் அதிகம் குற்றச்செயல் செய்கிறோம். எங்கள் மீது வழக்கு போடுபவர்கள் சற்று யோசித்து பார்க்க வேண்டாமா? நாங்கள் குற்றம் புரிகிறோமா அல்லது அவர்கள் செய்கிறார்களா என்று பார்த்தாலே போதுமா, யார் மீது தவறு என்று கண்டுபிடிக்க. நீதியை வளைக்க பார்க்கிறார்கள், ஆனால் அதை அவர்களால் இறுதிவரை செய்ய முடியாது " என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT