ADVERTISEMENT

வீடே இல்லாதவர்களிடம் பத்திரத்தை கேட்டால் எப்படி கொடுக்க முடியும்..? - திருமாவளவன் கேள்வி!

11:22 PM Feb 21, 2020 | suthakar@nakkh…

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு என்ன பிரச்சனை வந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எதிர்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.

அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த யாராவது ஒருவர் இந்திய சுதந்திரத்துக்காக போராடி சிறை சென்றார்கள், தியாகம் செய்தார்கள் என்று சான்று காட்ட முடியுமா? ஒரே ஒரு ஆள் போனார் வீர சவார்க்கர், அவர் வீர சவார்க்கர் அல்ல கோழை சவார்க்கர். அரசியலில் எல்லாம் இப்படிதான். கோழைகளுக்கு எல்லாம் அஞ்சா நெஞ்சம் என்று பெயர் வைப்பார்கள். மாவீரன் என்று அழைப்பார்கள். நோஞ்சானை கொன்றாலே அவன் மாவீரன் ஆகிவிடுவான். அந்த மாதிரி செல்லூலார் சிறையில் நீங்கள் சொல்கின்ற படி மட்டும் நடக்கிறேன்,வேறு எதையும் செய்யவில்லை என்று கூறி சரண்டர் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்த ஆள்தான் இவர். இவருக்கு பெயர்தான் வீர சவார்க்கர் என்று வைத்துள்ளார்கள். அந்த வகையில் இந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வெள்ளையர்களை எதிர்த்து போராடினார்கள், சிறை சென்றார்கள் என்று ஒருவரையாவது காட்டமுடியுமா? மாறாக விடுதலைக்காக போராடிய காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, இவர்களுக்கு தேச பக்தன்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்த ஒரு சதவீத முஸ்லிகள் கூட நல்லவர்கள் இல்லையா, எந்த அடிப்படையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்ற முடிவுக்கு வந்தீர்கள். இந்திய அரசியலமைப்புக்கு எதிராக இந்த குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்க கூடாது. இது இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத போக்கு என்பது வெளிப்படையாக தெரிகின்றது. இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்துகின்றது. இந்த சிஏஏ சட்டம் மதத்தின் அடிப்படையில் இருப்பதால் இந்திய அரசியலமைப்பையே கேள்விக்குறி ஆக்குகிறது. சிஏஏ சட்டம் இப்படி இருக்கிறது என்றால் அடுத்து என்பிஆர். இந்த என்பிஆர் சட்டத்தை பற்றி இன்னும் எடப்பாடியே தெளிவில்லாமல் இருக்கின்றாரோ என்ற அச்சம் நமக்கு எழுகின்றது. அவருக்கே இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அவருடைய தாயாரும், தந்தையாரும் உயிருடன் இருந்தால் அவர்களின் பிறப்பு சான்றிதழை காட்ட வேண்டும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது இந்தியாவில் இருக்கும் இந்தியர்கள், வெளிநாட்டினர் உள்ளிட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆகும். அவர்கள் கேட்கும் இந்த பிறப்பு சான்றிதழை நம்மால் கொடுக்க முடியவில்லை என்றால் நம்முடைய பதிவில் டி என்று போட்டு விடுவார்கள். டி என்றால் சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று பொருள். அப்படி பட்ட நபர்களை கணக்கீடு செய்துவிட்டு போய் விடுவார்கள். ஆனால், ஒருவாரம், பத்து நாள் கழித்து அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும். அங்கே உங்களிடம் ஆவணங்களை கேட்பார்கள். நீங்கள் ஆதார் கார்டை கொடுத்தாலும், ரேஷன் கார்டை கொடுத்தாலும், வாகன ஓட்டுநர் உரிமத்தை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாறாக இதற்கு முன்னால் நிலம் வாங்கிய, விற்ற பத்திரம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்பார்கள். அந்த பத்திரங்கள் அனைவரிடமும் இருக்குமா என்றால் அனைவரிடமும் இருக்காது. அரசாங்கம் கொடுத்த புறம்போக்கு பத்துக்கு பத்து இடத்தில் காலங்காலமாக வாழ்ந்து வருபவர்களிடமும் நீங்கள் பத்திரத்தை கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT