ADVERTISEMENT

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் யாருக்காக நிறுத்தப்பட்டதோ அவர்கள் இருவரும் ஒரே அணியில்! 

10:07 AM Apr 26, 2019 | Anonymous (not verified)

ஓட்டுக்கு நோட்டு என்ற காரணத்தால் இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்தல் நிறுத்தப்பட்ட தொகுதி என்ற தனிப் பெருமை அரவக்குறிச்சிக்கு சேரும். அந்தப் பெருமைக்குக் காரணமாக எதிர்எதிராகப் போட்டி போட்டு, பணத்தை வாரியிறைத்த இரண்டு பேரும் இப்போது ஒன்றாகப் பிரச்சாரத்தில் செல்வதை ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறார்கள் இடைத்தேர்தலின் மகத்துவம் அறிந்த அரவக்குறிச்சி மக்கள்.

ADVERTISEMENT



1952 முதல் பொதுத் தேர்தலிலிருந்தே அரவக்குறிச்சி தொகுதி உள்ளது. 5 பேரூராட்சிகளை உள்ளடக்கிய பெரிய தொகுதி. சமுதாயரீதியாக கொங்கு வேளாள கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாயக்கர்கள், இஸ்லாமியர்கள் நிறைந்துள்ளனர். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை, கரூர் ஜவுளிப்பூங்கா, தமிழக அளவில் சேவல்கட்டுக்கு பெயர் போன பூலாம்வலசு, இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பள்ளப்பட்டி, புகழ்பெற்ற ரங்கமலை, தனியார் பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் இத்தொகுதியின் சிறப்பம்சங்கள். கூடுதல் சிறப்பு, முருங்கைக்காய் விளைச்சல். தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். தொழில் வாய்ப்புகள் இல்லாததால் வடமாநிலங்களில் வட்டித் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT



தி.மு.க., அ.தி.மு.க. தலா 4 முறை, காங்கிரஸ் 3 முறை, சுயேட்சை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுதந்திரா கட்சிகள் தலா 1 முறை வெற்றிபெற்றுள்ள தொகுதியில், முருங்கைக்காய் குளிர்பதன கிடங்கு, அரசு கல்லூரி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இடையக்கோட்டை வழியாக ஒட்டன்சத்திரத்திற்கு ரயில் பாதை, வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் என ஏராளமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

2011 தேர்தலிலேயே அதிகப் பணம் புழங்கிய அரவக்குறிச்சியில் தி.மு.க. கே.சி.பழனிச்சாமி வெற்றிபெற்றார். ஆனால், ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அப்போது கரூரில் ஜெயித்த செந்தில்பாலாஜி மா.செ., மந்திரி என செல்வாக்காக வலம்வந்தார். பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளால் அவர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 2016 தேர்தலில் தி.மு.க. கே.சி.பழனிச்சாமியுடன் அரவக்குறிச்சியில் மோதவிட்டு, முடிந்தால் ஜெயித்து வா என்ற ரீதியில் சீட் ஒதுக்கினார் ஜெ.



செந்தில்பாலாஜியும் கே.சி.பழனிச்சாமியும் பணத்தை வாரி இறைத்ததால் நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி தேர்தல், ஜெ. சிகிச்சையில் இருந்தபோது நடந்தது. செந்தில்பாலாஜி வெற்றிபெற்றார். ஜெ. மரணத்திற்குப்பின் கூவத்தூர் கூத்துகளில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணிக்குச் சென்ற செந்தில்பாலாஜி, கவர்னரிடம் முதல்வர் மாற்றத்தை வலியுறுத்தி மனு கொடுத்த எம்.எல்.ஏ.க்களின் லிஸ்ட்டில் அவரும் இருந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டு, எம்.எல்.ஏ. பதவி பறிபோன நிலையில், டி.டி.வி. தரப்பின் கஜனாவாக செயல்பட்டுவந்த செந்தில்பாலாஜி, சில மாதங்களுக்குமுன் தி.முக.வில் சேர்ந்து, ஸ்டாலினை அழைத்து மிகப்பெரும் இணைப்புவிழா நடத்தி, மாவட்டச் செயலாளராகவும் (பொறுப்பாளர்) ஆன நிலையில்தான், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

எம்.பி. தேர்தலில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்கு சேகரிக்கும் தீவிரப் பணியில் செந்தில்பாலாஜி இருந்தபோது, அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட, அரவக்குறிச்சி வேட்பாளராக செந்தில்பாலாஜியை அறிவித்தது தி.மு.க. தலைமை. எம்.பி. தேர்தல் முடிந்த மறுநாளே, தனது தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் செந்தில்பாலாஜி. அவருக்காக எம்.பி. வேட்பாளர் ஜோதிமணியுடன், கடந்தமுறை செந்தில்பாலாஜியை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. புள்ளி கே.சி.பழனிச்சாமியும் ஒன்றாக ஜீப்பில் ஏறி பிரச்சாரம் செய்தார்.



தேர்தல் களம் குறித்து செந்தில்பாலாஜியிடம் நக்கீரன் கேட்டது. "எம்.பி. தேர்தலில் விழுந்த மொத்த வாக்கில் 60 சதவீதம் ஜோதிமணிக்குத்தான் விழுந்திருக்கிறது. கட்டாயம் வெற்றி பெறுவோம். அதே நம்பிக்கையுடன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டேன். செயல்வீரர்கள் கூட்டம் நடத்துகிறோம். எம்.பி. தேர்தல் போலவே இடைத்தேர்தலிலும் போலீசை வைத்து இந்த அரசாங்கம் அவுங்களா பிரச்சனை பண்ண நினைப்பாங்க, நாங்க அதை கவனமாக கையாண்டு கொண்டிருக்கிறோம். மக்கள் எங்களோடுதான் இருக்காங்க. நிச்சயம் ஜெயிப்போம்'' என்றார் நம்பிக்கையோடு.

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள இடைத்தேர்தல்களில் தீவிர கவனம் செலுத்தும்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போட்டி போட்டு வாரி வழங்கிய செந்தில்பாலாஜியும் கே.சி.பி.யும் ஒரே கட்சியில் உள்ள நிலையில் அவர்கள் தரப்பு கவனிப்புடன், எப்படியாவது ஜெயிக்க நினைக்கும் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டும், இரு தரப்பையும் எதிர்கொள்ள வேண்டிய அ.ம.மு.க.வின் விநியோகத்தையும் எதிர்பார்த்து அமோக கனவுகளுடன் இருக்கிறார்கள் அரவக்குறிச்சி மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT