ADVERTISEMENT

வாக்குகளை வாங்குகிறாரோ இல்லையோ... சசிகலா உதவியால் தம்பிதுரைக்கு சீட்? கண்டிஷன் போட்ட ஓபிஎஸ், இபிஎஸ்! 

03:42 PM Mar 12, 2020 | Anonymous (not verified)

அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்களாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தம்பிதுரையை டெல்லியில் விரும்பாத பா.ஜ.க. தலைவர்கள், அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர். அத்துடன், சசிகலாவின் ஆதரவாளர் என்கிறார்கள்.

ADVERTISEMENT



மக்களவையில் போட்டியிட்டு தோற்றவருக்கு, சசிகலாவின் சிபாரிசில் மாநிலங்களவை பதவி தரப்பட்டிருக்கிறதோ என பா.ஜ.க. வினரை யோசிக்க வைத்துள்ளது தம்பிதுரையின் தேர்வு. அதற்கு நேரெதிராக சசிகலாவின் தீவிர எதிர்ப்பாளராக ஓ.பி.எஸ்.ஸுடன் சேர்ந்து அரசியல் செய்த கே.பி.முனுசாமிக்கும் வாய்ப்பு தந்துள்ளார் எடப்பாடி. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பதவிசுகங்களை அனுபவிப்பதால், தனக்கான வாய்ப்புக்காக கடந்தமுறை அன்புமணி மாநிலங்களவைக்கு நிறுத்தப்பட்டபோதே கலகக்குரல் எழுப்பியவர் கே.பி.முனுசாமி. தற்பொழுது ஓ.பி.எஸ்.ஸை விட்டு விலகி, முழுவதும் எடப்பாடியின் ஆதரவாளராக மாறிவிட்டார் கே.பி.முனுசாமி என்கிறார்கள் அ.தி.மு.க மேல்மட்டத்தினர்.

ADVERTISEMENT



நத்தம் விசுவநாதன், வேலூர் எம்.பி. தேர்த லில் பணத்தை வாரியிறைத்த புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், தே.மு.தி.க. சார்பில் சுதீஷ் அல்லது பிரேமலதா, இது தவிர பா.ஜ.க.வின் மேல்மட்ட தலைவர்களின் சிபாரிசுடன் மல்லுக்கட்டிய மைத்ரேயன், விஜிலா சத்யானந்த், மறைந்த சபாநாயகர், பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க.வில் முஸ்லிம் குரலாக மட்டும் ஒலிக்கும் அன்வர்ராஜா, பி.ஜே.பி. செல்லபாண்டியன் என பலரும் மாநிலங்களவை வாய்ப்பு கேட்டனர்.

அடுத்த மாநிலங்களவைத் தேர்தல் 2021-ல் தான் நடக்கும். அடுத்த சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வினரிடையே காணப்படும் பயம், அவநம்பிக்கை ஆகியவை இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியை கடுமையாக்கியது. இதில் தே.மு.தி.க.வை முந்தி மாநிலங்களவை வாய்ப்பை பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தொழிலதிபரான அம்பானியும் அதானியும் முன்பு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக வாசன் இருந்த காலத்தில் ஏற்பட்ட அறிமுகம் காரணமாக பெற்றுத்தந்துள்ளனர். இந்த தேர்வு தே.மு.தி.க.வை டென்ஷனடைய வைத்துள்ளது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் வரை தே.மு.தி.க. பொறுமைகாக்கும், அதன்பிறகு விஜயகாந்த், கமலைப் போல ரஜினி அணியில் இணைவார் என்கிறது தே.மு.தி.க. வட்டாரம். விஜயகாந்த்தைவிட ரஜினிக்கு மிக நெருக்கமானவர் ஏ.சி.சண்முகம். அவர் ரஜினியுடன் வெகுவிரைவில் காட்சியளித்து அ.தி.மு.க.வை கடுப்பேற்றுவார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.


ரஜினி, தி.மு.க.வுக்கு விழும் வாக்குகளை வாங்குகிறாரோ இல்லையோ... அ.தி.மு.க.வுக்கு விழும் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை நிச்சயம் பிரிப்பார் என்றும் அதன் பாதிப்புகளையும் கணக்குப் போடும் அ.தி.மு.க.வினர் இப்போதே ரஜினி ஓட்டப்போகும் ரயிலில் துண்டு விரித்து இடம் பிடிக்கத் தயாராகிவிட்டனர் .

இன்னொரு பக்கம், ஓ.பி.எஸ். மகனும் வைத்திலிங்கமும் மத்திய அமைச்சர் ஆவதற்கு இடையூறாக வரக்கூடாது என தம்பிதுரையிடமும் கே.பி.முனுசாமியிடமும் உத்தரவாதம் வாங்கியுள்ளார் எடப்பாடி என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT