ADVERTISEMENT

அம்மாவின் ஆட்சி இனிக்குது... அம்மாவின் வாக்குறுதி கசக்குதா? அதிமுக அரசை விளாசிய ஜோதிமணி

09:13 PM May 08, 2020 | rajavel



கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து ஒரு கோடி பெண்களிடம் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளார். தொலைபேசி வழியாக 0120 6844260 என்ற எண்ணில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு அழைப்பு போகும். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை ஆதரிக்கிறீர்களா என்று அந்த அழைப்பில் கேட்கப்படும். அதற்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் சொன்னால் போதும். அப்படி பெறப்பட்ட தமிழக பெண்களின் மதிப்புமிக்க கருத்துகளை தமிழக முதலமைச்சரிடம் மக்கள் பிரதிநிதியாக கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த நிலையில் மே 17 வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்தினை பகிர்ந்து கொண்டார் ஜோதிமணி.

அப்போது அவர், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டது. மதுக்கடைகள் இல்லாததால் வானம் இடித்து போய்விடவில்லை. இந்த கடைகள் மூடப்பட்ட காலத்தில்தான் குடும்ப வன்முறைகள் இல்லாமல் ஏழை எளிய பெண்கள் ஓரளவு நிம்மதியாக இருந்துள்ளனர். கரோனா நேரத்தில் அரசு உதவி செய்யவில்லை. ஏழை எளிய குடும்பங்கள் வறுமையுடன் போராடினாலும், அதையும் தாண்டி அந்த குடும்பங்களுக்கு ஒரு சின்ன நிம்மதி கிடைத்தது. வீட்டில் உள்ள ஆண்கள் மதுபானம் அருந்தாமல் சந்தோஷமாக பேசுகிறார் என்று நிம்மதியாக இருந்தனர். டாஸ்மாக் கடைகள் திறந்த மே 7, 8 ஆகிய இரண்டு தினங்களிலும் அந்த குடும்பங்களின் நிம்மதி மறுபடியும் கேள்விக்குறியானது.

கரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் அதிமுக அரசும் எதுவும் செய்யவில்லை. மத்தியில் உள்ள மோடி அரசும் எதுவும் செய்யவில்லை. தன்னார்வ அமைப்புகள், எதிர்க்கட்சிகள் நிவாரண உதவிகள், உணவு பொட்டலங்கள் கொடுத்து வந்ததை, கொடுக்கக் கூடாது என அதிமுக அரசு சொன்னது.

உணவு பொட்டலங்களையே கொடுக்கக் கூடாது, அப்படி கொடுக்கும்போது சமூக இடைவெளியை அரசியல் கட்சியினர் பின்பற்ற மாட்டார்கள் என்று சொன்ன அரசு, எந்த அடிப்படையில் டாஸ்மாக் கடைகளை திறந்தது. எல்லைத்தாண்டி போவார்கள் என்றார்கள். கேரளா, புதுச்சேரியில் இதுவரை மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.


இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க அதிமுக பிரமுகர்களின் சொந்த லாபத்துக்காக, மதுக்கடைகள் மூலம் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக டாஸ்மாக் கடைகளை திறந்தது. அதற்காக மக்களுடைய உயிருடன் இந்த அரசு விளையாடுகிறது.

கரோனாவை கட்டுப்படுத்த அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள்தான் கரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்து எல்லோருடைய உழைப்பையும் அரசு வீணாக்குகிறது. நேற்று ஒரு கரோனா நோயாளி மதுபானம் வாங்க வரிசையில் நின்றிருக்கிறார் என்று எனக்கு ஒரு தகவல் வருகிறது. அவர் எத்தனைப் பேருக்கு பரப்பியிருப்பார் தெரியவில்லை.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை ஆதரிக்கிறீர்களா என்று நாங்கள் தொலைபேசிய வாயிலாக கேட்டதற்கு 30 லட்சம் பேர் பதிலளித்திருக்கிறார்கள். அதில் 90 சதவீத பேர் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். பல பெண்களுடைய போன்களை அவர்களுடைய கணவர்கள் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் எடுத்து பேசினார்கள். அவர்களும் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்றனர்.

மக்களுடைய குரல்களுக்கு மதிப்பு இல்லாமல், எதிர்க்கட்சிகளுடைய கோரிக்கையை ஏற்காமல் டாஸ்டாக் கடைகளை திறந்துள்ளனர். கரோனவை பயன்படுத்தி கொள்ளைக்கு தயாராகுகிறார்கள். கரோனா முடியும் வரையும் கூட இந்த கொள்ளையை அடிக்காம பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு அக்கறை அற்ற அரசாங்கம் இந்த அரசாங்கம். இந்த நேரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. நீதிமன்றம் தலையிட்டுத்தான் தமிழக மக்களை கரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டிய நிலை வந்திருக்கிறது.


ஊரடங்கு நேரத்தில் மக்களிடம் காசு இல்லை என்று சொல்லும்போது, ஒருவருக்கு அதிகபட்சம் எத்தனை மதுபாட்டில்கள் அனுமதியோ அத்தனை பாட்டில்களையும் காசு கொடுத்து வாங்கி செல்கிறார்களே?

எதிர்க்கட்சியினர் நிவாரணம் கொடுக்க செல்லும்போது சிலர் பணம் கொடுப்பார்கள். அதனை மனைவிக்கு தெரியாமல் சிலர் மறைத்து வைத்திருப்பார்கள். பின்னர் மனைவி மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து தோடு, மூக்குத்தி, வீட்டில் உள்ள சாமான்களை பறிப்பார்கள், விற்பார்கள், அடகு வைப்பார்கள். குழந்தைக்கு பால் வாங்க வைத்திருக்கும் காசைக்கூட எடுத்துச் செல்வார்கள். இப்படித்தான் பெரும்பாலானோர் மதுபானம் வாங்க செல்கின்றனர். இதன் மூலம் குடும்ப வன்முறைகள் மீண்டும் தலைதூக்கும்.

இதையெல்லாம் தெரிந்த ஒரு அரசாங்கம் இரக்கம் இல்லாமல் நடக்கிறது. தேர்தல் நேரத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று அதிமுக வாக்குறுதி அளித்தது. அவர்கள் அளித்த வாக்குறுதிபடி 1400 மதுக்கடைகளை மூடியிருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை?. வார்த்தைக்கு வார்த்தை அம்மாவின் அரசாங்கம் என்கிறார்கள். அம்மா கொடுத்த வாக்குறுதிதானே அது. அம்மா அமைத்துக் கொடுத்த ஆட்சி மட்டும் இனிக்குது. அம்மா கொடுத்த வாக்குறுதி மட்டும் கசக்குதா இவர்களுக்கு? என்றார் ஆவேசமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT