ADVERTISEMENT

தமிழகம் இரண்டாக உடைக்கப்படுகிறதா? -மாவட்ட பிரிப்பால் புதிய சர்ச்சை!

05:12 PM Aug 26, 2019 | Anonymous (not verified)

பரமசிவம், மனோசௌந்தர், ராஜா

அ.தி.மு.க. அரசு கடந்த 8 மாதங்களில் மட்டும் 5 புதிய மாவட்டங்களை அறிவித்திருப்பது, ஒருபக்கம் மக்களுக்கான வளர்ச்சி என வரவேற்கப்பட்டாலும்... அது புதிய சர்ச்சையையும் எழுப்பியிருக்கிறது. நிர்வாக வசதிக்காகவும் பொதுமக்களின் கோரிக்கையின் படியும் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது. அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி என்ற புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 5 புதிய மாவட்டங்களும் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT



திருப்பத்தூரை மாவட்ட தலைமையிடமாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பல பல போராட்டங்களை பல்வேறு கட்சிகளும் நடத்தின. அதன்பின், வேலூர், திருப்பத்தூர், அரக்கோணம் என மூன்றாகப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. தேர்தலின்போது மட்டுமே வாக்குறுதி தருவார்கள். ஆனால், நிறைவேற்றமாட்டார்கள். அதற்குக் காரணம், அதிகாரம், வருமானம் போன்றவை தடைப்பட்டுவிடும் என பெரிய மாவட்டமான வேலூர் மாவட்ட பிரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் சட்டப்பேரவையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டை பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணையில் வேலூர் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக உள்ள அரக்கோணத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை காஞ்சிபுரம் மாவட்டத்தோடும் மற்றொரு பகுதியை செங்கல்பட்டு மாவட்டத்தோடும் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதனால், அரக்கோணம் தனி மாவட்டமில்லை என்று முடிவு செய்தார்கள் மக்கள்.

ADVERTISEMENT



வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதும் "எதிர்காலத்தில் அ.தி.மு.க. ஜெயிக்க மாவட்டம் பிரிப்பது பயன்தரும்' என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஏற்கனவே மாவட்டப் பிரிப்பு கோரிக்கை ஃபைலை தூசு தட்டி எடுத்து ஏலகிரி (திருப்பத்தூர்), ராணிப்பேட்டை என இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்கி வேலூரை மூன்று மாவட்டமாகப் பிரித்து சுதந்திரதின விழாவில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல்தான், நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உதயமானதாக உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையின்போது அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அறிவிப்பு வெளியாகி நாட்கள் கடந்தும் அதில் எந்தெந்த சட்டமன்றங்கள் அடங்கியுள்ளன என்கிற நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்படவில்லை. ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் போன்ற 5 தொகுதிகள் புதிய தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்படும் என்கிற தகவல் பரவிய சூழலில்... "சங்கரன்கோயில் தொகுதியை ஒதுக்கக்கூடாது, அது நெல்லை மாவட்டத்துடனேயே இருக்கவேண்டும்' என்று விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதையே வைகோவும் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறார்.



நெல்லை ஆட்சியர் நடத்திய விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் படுகாரமாகப் பேசிய விவசாயிகள், "சங்கரன்கோயில் நெல்லையிலேயே தொடரவேண்டும்' என்று ஆட்சியர் ஷில்பாவிடம் மனுக்களை கொடுத்திருக்கிறார்கள். பல தரப்பிலும் எதிர்ப்பு வலுக்கிறது. இதுகுறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொறுப்பாளர் ரங்கப்பிரசாத் நம்மிடம், “ஒரு புதிய மாவட்டம் உருவாகும்போது புதிய செலவுகளும் மிகஅதிகமாக ஏற்படும். மாவட்ட நிர்வாகத்திற்கு 100 கோடி ரூபாய் செலவழித்து மக்கள் நலத்திட்டங்களுக்கு 20 கோடி ரூபாய்தான் செலவழிப்பார்கள்.



90-களில் திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக்கப்பட்டது. ஆட்சியர், எஸ்.பி., என மேலிட பதவிகள் நிரப்பப்பட்டதே தவிர கீழ்மட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் நிர்வாக முறை ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் அதிகரித்தன. இருக்கும் மாவட்டங்களில் புதிய தாலுகாக்களை உருவாக்கி தாசில்தார்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்துகொடுத்தாலே மாவட்ட ஆட்சியர்களுக்கான சுமை குறையும். மாவட்டங்களை பிரிப்பது பல சமயங்களில் அரசியல் ஆதாயத்துடன் முடிந்து விடுகிறது''’என்கிறார்.


"நிர்வாகம் எளிது, மக்களுக்கு அலைச்சல் இல்லை என்பது சரியானதே... ஆனால் "பாரதீய ஜனதா கட்சி காஷ்மீரை அங்கீகாரம் இல்லாத பிரதேசமாக மாற்றியதல்லவா? அதேபோல, ஒவ்வொரு மாநிலத்தையும் இரண்டாக, மூன்றாகப் பிரிக்க... பிரிக்க மாநிலங்களின் வலிமையை, அதிகாரத்தை துண்டாக்குவதுதான் இதன் நோக்கம்''’என்று உறுதியாகச் சொல்லும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு நம்மிடம், ""தமிழகத்தை இரண்டாக உடைப்பதுதான் பா.ஜ.க.வின் தந்திரம். அப்போது, தமிழகம் என்ற மாநிலம் வலிமையற்றுப் போய்விடும். தேசிய இனங்களின் வேகத்தைக் குறைத்து, பிரிந்த இரண்டு மாநிலங்களுக்குள் பிரச்சனையை உண்டாக்குவார்கள். உதாரணத்துக்கு பல வருட போராட்டங்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து தெலங்கானா, சீமாந்திரா என ஆனது. இரண்டு மாநில மக்களுமே தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள்தான். ஆனாலும் அவர்களுக்குள்ளே பெரும் பகையாக மாறிவிட்டது. அதேபோல், ஸ்டெர்லைட், மீத்தேன், அணுமின் திட்டம், ஹைட்ரோகார்பன் என ஒருங்கிணைந்து போராடும் தமிழினத்தில் மிகப்பெரிய பகையை உண்டாக்கத்தான் மாநிலங்கள் பிரிப்பு. பா.ஜ.க.வின் தொலைநோக்கு திட்டத்தைத்தான் முதல்வர் எடப்பாடி மாவட்டப் பிரிப்பு என்கிற பெயரில் செயல்படுத்துகிறார்.

இது மக்களை பிரிப்பதற்கான சதித்திட்டம்தான். தமிழர்களாகத்தான் இருப்போம். ஆனால், பக்கத்திலுள்ள கடலூர் மாவட்டத்திற்குப் போகமுடியாத சூழல் ஏற்படலாம். காரணம், அது வேறு மாநிலமாக இருக்கும். மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபாடு உருவாகும். எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களே அந்த மாநிலத்தை ஆளக்கூடிய அவலநிலை ஏற்படலாம். மாநிலக்கட்சிகளின் வலிமை குறையக் குறைய தேசியக்கட்சிகள் வலிமையாகும். இதன்மூலம் மாநிலங்களை பலவீனப்படுத்தி ஒரே நாடு ஒரே தலைவர் என்று ஒற்றைநாடாக உருவாக்கப் பார்க்கிறார்கள்''’என்கிறார் விரிவாக.

"தமிழகமே கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, இன்னும் புதிய மாவட்டங்களை உருவாக்கி புதிய பணி நியமனங்களை செய்ய தமிழக அரசிடம் ஏது நிதி?' என்று கேள்வி எழுப்புகிற தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நம்மிடம், ""2003-லிருந்து 2014- வரை தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை சிறப்பித்துக்கொண்டே வந்தது. உதாரணத்திற்கு, ஒரு ரூபாய் வருமானத்தில் 19 பைசா வட்டி கட்டினோம். 2014-ஆம் ஆண்டில் 1 ரூபாய் வருமானத்தில் 11 பைசா வட்டிகட்டினால் போதும் என்ற நிலை வந்தது. ஆனால், 2014 ஜெயலலிதா அம்மையார் ஜெயிலுக்குப் போனபிறகு இன்றைய சூழலில் 1 ரூபாய் வருமானத்திற்கு மறுபடியும் 18 பைசா வட்டிகட்டவேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். ஐந்து வருடத்திலேயே இப்படியொரு நிலைமை. மாநிலத்தின் வருமானம், உற்பத்தியில் சராசரியாக 14 சதவீதம் வந்துகொண்டிருந்தது. இப்போது, வெறும் 10 சதவீதம்தான் வந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட உற்பத்தியில் இந்த மாநிலம் 4 சதவீதம் இழந்துவிட்டது. இதற்கு உண்மையான காரணம், வருமானம் வரக்கூடிய அத்தனை துறைகளிலும் ஊழல் நடப்பதுதான். ஊழல்களை களைந்தால் மட்டுமே மாவட்ட மக்களுக்கு நன்மைகளை செய்யமுடியும்.

13 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள வேலூரை மூன்றாகப் பிரிக்கும் அரசாங்கம் 20 தொகுதிகளைக் கொண்ட சென்னையை ஏன் பிரிக்கவில்லை? பதவியின் பலன்களை பகிர்ந்தளிக்கவே மாவட்டப் பிரிப்பு. மேலும், மோடியும் அமித்ஷாவும் எடுக்கும் முடிவில் யாருமே தலையிட முடியாது என்ற நிலையில் ஜம்மு காஷ்மீரைப் பிளந்து அதிகாரத்தை துண்டாக்கியதுபோல தமிழகத்தையும் மாநிலங்களாக பிரித்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.கவின் கொள்கைகளை நிலைநாட்டப் போகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது''’என்கிறார். மாநில அரசின் வருமானத்தில் 65 சதவீதம் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மற்றும் வாங்கிய கடனுக்கும் வட்டி என சென்றுகொண்டிருக்கும் சூழலில்... இன்னும் மாவட்டங்களைப் பிரித்து அரசு ஊழியர்களுக்கு நிதியை ஒதுக்கினால் தமிழக அரசின் கடன் சுமைதான் அதிகரிக்கும். ஆக, ஊழலற்ற நிர்வாகத்தை செய்து வருமானத்தை பெருக்கி நிதிமேலாண்மையை சரியாக கையாண்டால் மட்டுமே மாவட்ட பிரிப்பால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க முடியும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT