ADVERTISEMENT

புதுவையில் ஆட்சி - தமிழ்நாட்டில் வானதி சீனிவாசன்

04:03 PM Oct 16, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவில் சமீபத்தில் நடந்த அனைத்து மாற்றங்களுக்கும் முக்கியக் காரணம் வானதி சீனிவாசன் என்கிறார்கள் பா.ஜ.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க., பா.ஜ.க. குழப்பங்களுக்கிடையே நிர்மலா சீதாராமன் கோவைக்கு விசிட் அடித்தார். அவரை கோவைக்கு வர வைத்ததில் முக்கிய பங்கு வகித்தது ஜக்கி வாசுதேவ். அதற்கான கோரிக்கையை ஜக்கியிடம் முன்வைத்தது வேலுமணியும் வானதி சீனிவாசனும். கோவைக்கு வந்த நிர்மலாவிடம், வேலுமணி அ.தி.மு..க எம்.எல்.ஏ.க்களை அனுப்பி சந்திக்க வைத்தார். ஜக்கியும், வேலுமணியும் வானதி சீனிவாசனும், நிர்மலாவை ரகசியமாக சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அவர்களுடைய திட்டம் பற்றி நம்மிடம் விளக்கினார்கள் பா.ஜ.க. பிரமுகர்கள்.

அண்ணாமலையை நீக்கிவிட்டு வானதியை பா.ஜ.க. தலைவராக்குவது, அவரை கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக்குவது, ஜெயித்த பிறகு மத்திய மந்திரியாக்குவது என எல்லா வேலைகளையும் வேலுமணி பார்த்துக்கொள்வார். இந்த திட்டமிட்ட வேலைக்கு ஆதரவாக எடப்பாடி இருப்பார். அவரிடம் அ.தி.மு.க.விற்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ரெய்டுகள் வராது என்கிற உறுதி நிர்மலாவிடமிருந்து பெறப்பட்டு எடப்பாடியிடம் சொல்லப்பட்டது.

இந்தத் திட்டத்தின் அச்சாரம், சி.பி. ராதாகிருஷ்ணன் கவர்னரான உடன் அவருக்கு கவுண்டர்கள் நடத்திய பாராட்டு விழாவிலேயே வெளிப்பட்டது. அந்த விழாவில் பேசிய சி.பி.ஆர்., “வானதி, நீ கெட்டியாக வேலுமணியைப் பிடிச்சுக்கோ” என்றார். இந்தத் திட்டத்தின் ஹைலைட்டாக 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வேலுமணியை முதலமைச்சர் ஆக்குவதுதான் என்கிறார்கள் கோவை பா.ஜ.க.வினர். அதற்கு அச்சாரமாக அண்ணாமலைக்கு எதிராக ஒரு விரிவான ரிப்போர்ட்டை தயார் செய்து வானதி, ஜக்கி மூலமாக நிர்மலாவிடம் கொடுத்துள்ளார். நிர்மலா அந்த ரிப்போர்ட்டை பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளார்.

மோடி, அமித்ஷா இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பி.எல். சந்தோஷிடம் விவாதித்திருக்கிறார்கள். அவர் ஏற்கெனவே வெளிப்படையாக நடந்த மாநில பா.ஜ.க. கூட்டத்திற்குப் பதிலாக மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்த அண்ணாமலைக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அவரே நேரடியாகப் பங்கேற்றார். கூட்டத்திற்கு வந்தவர் அண்ணாமலையிடம் பேசவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பூத் கமிட்டி அமைப்பது பற்றிப் பேசினார்கள். 39 பாராளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் பணியாளர்கள் தயார் எனக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பி.எல். சந்தோஷ், இந்தமுறை நாம் பாண்டிச்சேரியில் ஆட்சியை அமைப்போம். தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவியில் பா.ஜ.க. அமரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை தமிழ்நாட்டில் வலுப்படுத்த வேண்டும். பா.ஜ.க. தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற வேண்டும். அதற்கு அ.தி.மு.க. முக்கியம். எனவே, அ.தி.மு.க.வை விமர்சித்து யாரும் பேசக்கூடாது. நமது கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியிருப்பது ஒரு தற்செயலான செயல். புதுவையில் ஆட்சி அமைப்பதற்காகத் தான் ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது என விரிவாகப் பேசினார். அண்ணாமலைக்கு கடிவாளம் போட்டுவிட்டு அவரது முக்கிய கோரிக்கையான, அ.தி. மு.க.வுக்கு எதிரான ஊழல் பட்டியலை அம்பலப்படுத்துவதற்கு பி.எல்.சந்தோஷ் தடை விதித்துவிட்டார்.

இப்பொழுது பா.ஜ.க. ஐந்து மாநிலத் தேர்தல்களில் பிசியாக இருக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதி அந்தத் தேர்தல் முடிந்துவிடும். அதன்பிறகு அ.தி.மு.க. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மறுபடியும் இணையும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என ஒட்டுமொத்தமாக அண்ணாமலைக்கு அதிர்ச்சி தரும் விதமாகவே பேசினார் பி.எல். சந்தோஷ். அவரது பேச்சில் எந்த இடத்திலும் அண்ணாமலையின் பாத யாத்திரையைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை.

அவரிடம் அண்ணாமலைக்கு எதிராகச் செயல்படும் தமிழக பா.ஜ.க. அதிருப்தியாளர்கள் எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா சிவா, கே.டி.ராகவன், செய்தித் தொடர்பாளர் சுப்ரமணிய பிரசாத் போன்றவர்களுக்கு கட்சிப் பதவிகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைப் பரிசீலனை செய்யலாம் என பி.எல். சந்தோஷ் சொல்ல, பா.ஜ.க.வில் நிர்வாகிகள் மாற்றம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. பாண்டியில் ஜெகத் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரையாவது பா.ஜ.க.விற்கு கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சிகள் வேகம் எடுத்துள்ளது. அண்ணாமலைக்கு எதிராக பிராமணர்கள், கவுண்டர்கள் உட்பட பலரும் வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அவரிடம் மிஞ்சி நிற்பது அவருக்கு ஆதரவான ஐ.டி.விங். மட்டுமே.

“அண்ணாமலை மாற்றப்படுவது ஒருவேளை நடக்காவிட்டாலும், அ.தி.மு.க. கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வானதி சீனிவாசனை கோவை எம்.பி. ஆக்குவது என்பதில் வேலுமணி உறுதியாக உள்ளார். அவரது குறி அ.தி.மு.க. தலைவர் பதவி. அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி காய் நகர்த்துகிறார். எடப்பாடி, அண்ணாமலையை எதிர்த்துப் பேசுவதற்கு முக்கிய காரணமே வேலுமணிதான் என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள். வேலுமணி, எடப்பாடி, பா.ஜ.க. வானதி, அண்ணாமலை ஆகியோருக்கு இடையே நடைபெறும் இந்த அதிகாரப் போட்டியில் யாரை, யார் எப்படி வீழ்த்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி நிலவரங்கள் அமையும். கோவை தொகுதியில் கமல்ஹாசன் போன்ற உறுதியான போட்டியாளர்கள் இல்லையென்றால் வானதியை எப்படியும் ஜெயிக்க வைத்துவிடுவார் வேலுமணி” என உறுதியாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT