ADVERTISEMENT

"எனக்கும் தலைமை நீதிபதி சந்திரசூட்க்கும் உள்ள ஆச்சரிய ஒற்றுமை; என்னை ஆளுநராக மட்டும் ஏன் பார்க்க வேண்டும்..." - தமிழிசை பேச்சு

09:47 PM Oct 25, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதுகுறித்த சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஊடகங்களில் பணியாற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நிறைவுரையாற்றிய தமிழிசை, தமிழக அரசியல் தொடர்பாகவும் தான் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார்.

இதுதொடர்பாக அவர் பேசும்போது, " இன்றைக்கு மிக முக்கியமான நிகழ்ச்சியாக இதைக் கருதுகிறேன். மனதுக்கு நிறைவான விழாவாக இது என்றும் நினைவில் இருக்கும். அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் கூட அனைவரும் வித்தியாசமான கருத்துக்களைப் பேசுகிறார்கள், ஒருவர் பேசியதை மற்றொருவர் பேசவில்லை என்று தெரிவித்தார். அது உண்மையும் கூட. அனைவரும் மனதில் தோன்றியதைப் பேசுகிறார்கள். கார்த்திகைசெல்வன் கூட தம்பிகள் சிலரின் திருமணத்துக்குச் சென்றதை பற்றிப் பேசி இருந்தார்கள். அது பெரிய செய்தியாக நான் பார்க்கவில்லை. நமக்குத் தெரிந்தவர்கள் நம்மை அழைக்கிறார்கள், நம்மால் முடிந்தால் செல்லப் போகிறோம் என்ற அளவில் தான் இதை நான் பார்க்கிறேன். இன்னும் சில தம்பிகள் திருமணத்துக்கு என்னால் செல்ல இயலவில்லை.

இவ்வளவு சொந்தங்களை நாம் இந்த இடத்தில் ஒன்று சேர்த்து சந்திப்பது என்பதே அவர்கள் என்மீது காட்டும் அன்புதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த நேரமும் தமிழ்நாட்டிலே இருக்கிறீர்கள், உங்களைத் தெலுங்கானாவில் தேட மாட்டார்களா? என்றெல்லாம் ஒரு தம்பி அதுவும் எனக்குத் தெரிந்த தம்பி ஊடகத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். பாண்டிச்சேரிக்கு வந்தால் இங்கே ஏன் இருக்கிறீர்கள் உங்களுக்குத் தெலுங்கானாவில் வேலை இல்லையா என்று நாராயணசாமி கேட்கிறார்.

அது சரி என்று தமிழகம் வந்தால் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இவர்களுக்கு நான் எங்கே சென்றாலும் பிரச்சனை தான் போல. நான் இப்போது தெளிவாகக் கூறுகிறேன். தெலுங்கானாவில் நான் முழுமையாக பணியாற்றுகிறேன், பாண்டிச்சேரியில் நிறைவாக பணியாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் என் முழு அன்பைச் செலுத்துகிறேன். இதில் இருவேறு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இன்றைக்கு இந்த கருத்து வேறுபாடுகளையும் கடந்து என்னை அக்காவாக, தங்கையாக அனைவருடன் இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறேன். எனவே அனைவரும் நம் உறவினர்கள் தான் என்ற கோட்பாட்டை நான் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். இந்த நேரத்தில் நான் மேலும் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள், அவருடைய தந்தை இருந்த இடத்தில் தற்போது மீண்டும் அமர்ந்துள்ளார்.

தனது தந்தை தலைமை நீதிபதியாக இருந்தபோது பிறப்பித்த சில உத்தரவைக் கூட திருத்தியுள்ளார். அதே போன்ற ஒரு ஒற்றுமை எனக்கும் எனது தந்தைக்கும் உண்டு. அவர் ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்துள்ளார். நான் மற்றொரு நேர் எதிர் தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்துள்ளேன். பெரிய பதவியில் அமர்ந்துள்ளீர்கள், கவர்னர் ஆகிட்டிங்க என்று சிலர் பேசுவதைக் கேட்கிறேன். அப்படியெல்லாம் எண்ணத் தேவையில்லை. நான் உங்களில் ஒருவராகவே இருக்கிறேன், இருப்பேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT