ADVERTISEMENT

தமிழினப் போரில் தவிர்க்கமுடியாத போராளி தியாக தீபம் திலீபன்...

06:00 PM Nov 29, 2018 | tarivazhagan

அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இயக்கம் முப்படைகளைக்கொண்டு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, ஒரு அரசு தன் மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அது அனைத்தையும் கொடுத்து, வெற்றியின் விளிம்பு வரை சென்று தோற்றுப்போனாலும், அந்த சமகாலத்தின் வரலாறு, மனித இனம் இருக்கும்வரை அழியப்போவதில்லை. உரிமைகளுக்காக ஒர் இனம் போராடி மடிந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் இன்றுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை. சர்வதேச நீதி விசாரணையிலிருந்து உள் நாட்டு விசாரணைக்கு மாற்றி நேர்மையாக விசாரணை நடைபெறும் என்ற வாக்குறுதி கொடுத்தும் காலங்கள் ஓடிவிட்டன. குறைந்தபட்சமாக காணாமல் போனவர்களின் நிலையையாவது வெளியிட்டிருக்கலாம். ஆனால், அதுவும் இன்றுவரை முழுமையாக நடக்கவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈழ விடுதலைப் போரும், அதற்காக உயிர் நீர்த்த தியாகிகளின் வரலாறும் மனித இனம் இருக்கும்வரை பொதுவெளியில் பேசப்படும், ஒன்று, இரண்டு அல்ல, ஆயிரக்கணக்கான உயிர் தியாகங்கள் அதில் அடங்கியுள்ளது. நவம்பர் மாதத்தின் இறுதி வாரம் முழுக்க விடுதலைப்புலிகள் வாரம் என்றே சொல்லலாம். நவம்பர் 26 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள், நவம்பர் 27 விடுதலைப்புலிகள் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள் மற்றும் நவம்பர் 29 ஈழ விடுதலை மற்றும் விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தவிர்க்க முடியாத பார்த்திபன் இராசையா எனும் திலீபனின் பிறந்தநாள்.

திலீபன், ஈழவிடுதலையில் மாபெரும் அஹிம்சை போராட்டம் நடத்தி உயிர் நீர்த்தவர். 29 நவம்பர் 1964-ல் இலங்கை யாழ்பாணத்தில் உள்ள ஊரெழு எனும் இடத்தில் பிறந்த இவர் தமிழீழ விடுதலைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துகொண்டார்.

இவர் 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

அவர் வைத்தக் கோரிக்கைகள்:

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் தமிழர்கள் இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2. சிறையிலும், இராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

5. தமிழர் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முழுவதும் நிறுத்தப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தண்ணீரும்கூட அருந்த மாட்டேன் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.


இலங்கையைச் சேர்ந்த இணையதள தகவலின்படி, அவரின் பனிரெண்டு நாள் போராட்டம் எப்படி இருந்தது என்பதை பார்ப்போம். முதல் நாள் போராட்டம் தொடங்கிய அன்று திலீபன் மேடை ஏறி உண்ணாவிரத போராட்டத்தைப் பற்றிய விளக்க உரை கொடுத்துவிட்டு, அவர் வாசிப்பதற்காக சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை தன்னிடம் வைத்திருந்தார். மேலும் அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், திலீபனை சந்தித்தார். இரண்டாம் நாள் அதிகாலை திலீபன் எழுந்து சிறுநீர் மட்டும் கழித்துவிட்டு மேடை ஏறினார். உடல் சக்தி விரயமாகும் என்று இரண்டு நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்தினார். அன்றும் பிரபாகரன், திலீபனை சந்தித்தார்.

மூன்றாம் நாள் திலீபன் விழிக்கும் போதே தண்ணீர் வற்றி உதடுகள் வெடிப்படைந்திருந்தன. மேலும் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். மருத்துவ சோதனைக்கு மறுத்துவிட்டார். நான்காம் நாள் திலீபனால் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டும் அவரால் சிறுநீர் கழிக்க முடியாமல்போனது. ஐந்தாம் நாள் அவரால் எழவே முடியவில்லை. சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கியது. இந்திய சமாதானப்படையினரின் யாழ் கோட்டை இராணுவ கர்னல் அவரை சந்தித்து பேசிவிட்டு, மேலிடத்தில் பேசுவதாக சொல்லியிருந்தார். ஆறாம் நாள் திலீபனால் பேசமுடியாமல்போனது. ஏழாம் நாள் இந்திய பத்திரிகைகள் இலங்கை சென்றிருந்தது, அவர்களிடம் திலீபன் “எந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேண்டும். இல்லையென்றால், நான் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்” என்றார். எட்டாவது நாள் அவருடன் சேர்ந்து பொது மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்கள். ஒன்பதாவது நாள் திலீபனால் கண் திறக்கமுடியவில்லை. அன்று இந்தியத் தூதுவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இடையே இரண்டுகட்டமாக பேச்சுவார்த்தை நடந்து தோல்வியில் முடிந்தது. பத்தாவது நாள் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி, நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 52 எனவும், இரத்த அழுத்தம் 80/50 எனவும் இருந்தது. அவர் அன்று “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன்” என்றார். பதினோராவது நாள் உடல் அசைவற்று இருந்தார் திலீபன். அவருக்கு மிகவும் பிடித்த பாடலான “ஓ மரணித்த வீரனே! உன் ஆயுதங்களை எனக்குத்தா. உன் சீருடைகளை எனக்குத்தா” என்ற பாடலை அங்கிருந்தோர் பாடினார்கள். அவர் வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், பனிரெண்டாவது நாள் காலை 10.48 மணிக்கு அந்த வீரன், ஒரு சொட்டு தண்ணீர், ஒரு பருக்கை உணவு என எதையும் உட்கொள்ளாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்துகொண்டு வீர மரணம் அடைந்தார்.


தியாக தீபம் திலீபன் இறந்தபோது அவரின் வயது 23 மட்டுமே. இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கர்னல் திலிபன் எனும் பதவி உருவாக்கப்பட்டது.


இலங்கையில் ஜஃப்னா எனும் பகுதியில் இவருக்கு நினைவுத்தூண் எழுப்பப்பட்டது. ஆனால், 1996-ம் ஆண்டு இலங்கை இராணுவம் ஜஃப்னா பகுதியைக் கைப்பற்றியதும், அவரின் நினைவுத்தூண் இலங்கை இரணுவத்தால் இடிக்கப்பட்டது. மீண்டும் அவரது நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அதன் பிறகு 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளிலும் அவரின் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது. அரைநாள் உண்ணாவிரத போராட்டத்திலும்கூட ஆயிரம் குறுக்குவழிகளை கையாலும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், 12 நாட்கள் கடந்தும் கொண்ட கொள்கையில் உறுதியாக, நீர்கூட பருகாமல் வீரமரணம் அடைந்த அவரது தீர்கத்திற்காகவாவது நாம் அவரை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT