ADVERTISEMENT

‘ஜெய் பீம்’ சர்ச்சை: “சீமான் இப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம்.” - சுந்தரவள்ளி தாக்கு!

10:58 AM Nov 19, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெகுவாகப் பாராட்டிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தற்போது அளித்துள்ள பேட்டியில் காலண்டர் விவகாரத்தைக் குறிப்பிட்டு, “அதைத் தவிர்த்திருக்கலாம், சூர்யாவுக்கு தெரிந்து இது நிகழ்ந்திருக்க வாய்பில்லை" என்று கூறினார். இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் சீமானுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளியிடம் இதுதொடர்பாக நாம் கேள்வி எழுப்பினோம்.

ADVERTISEMENT

நம்முடைய கேள்விக்கு அவர், "நாம் தமிழர் சீமான் நேற்று கூறியதை இன்று மாற்றிப் பேசாவிட்டால்தான் ஆச்சரியம். பல விஷயங்களில் முன்பு கூறியதை அடுத்த நாள் மாற்றிக் கூறுவது அவருக்கு ஒன்றும் புதிது கிடையாது, வாடிக்கையான ஒன்றுதான். அவருக்கு எந்தக் கொள்கையும் இல்லை. ஆர்எஸ்எஸ், பாஜகவின் அஜெண்டாவைப் பொதுவெளியில் பேசக்கூடியவர்தான் அவர். சீமானின் பேச்சு, அரசியல் எல்லாவற்றையும் கடந்து போக வேண்டும், அதில் எந்த ஒரு கருத்தும் இருக்கப் போவதில்லை. தமிழர்களை சாதியாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறுபவர்களிடம் இந்த மாதிரியான பேச்சுக்களைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். எனவே இவரை எல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை.

தற்போது கோவிந்தன் வன்னியர்தான். அவரை பற்றிக் காட்டியிருக்கலாம் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர் சங்கம் எதைச் சொல்கிறதோ, அதைத்தான் இவரும் சொல்கிறார். கோவிந்தன் என்றைக்காவது நான் வன்னியர் என்று கூறியிருக்கிறாரா? சிவப்பு துண்டு போட்ட பச்சை கம்யூனிஸ்ட் அவர். உங்களைப் போல் சாதிப் பெருமையை அவர் எப்போதும் பேசுவதில்லை. அவர் அமைதியாக இருக்கும்போதே அவரை எங்கள் ஆள், உங்கள் ஆள் என்று போட்டிபோட்டுக்கொண்டு சாதி வளையத்திற்குள் சிக்கவைக்கப்பார்க்கிறார்கள். தற்போது வன்னிய சங்க இளைஞர்கள் என்ன பேசுகிறார்களோ, அதையேதான் சீமான் இன்ச் மாறாமல் பேசுகிறார் என்றால், அவர் யாருக்கான ஆள் என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். சீமானுக்கு இருக்கிற அரசியல் என்பது அரைவேக்காட்டுத்தனமான அரசியல். கம்யூனிஸ்ட்டாக ஒரு தோழர் இயங்குகிறார், அவரை சாதியற்றவர் என்று சொல்லக்கூட திராணி இல்லாத முதுகெலும்பு இல்லாதவர்தான் சீமான். சாதியை விரும்பாமல் பொதுவாழ்க்கைக்கு வந்த ஒருவரை சாதி வளையத்திற்குள் சிக்கவைக்கப் பார்க்கும் இவர்களைப் போல் உள்ள நபர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்.

காலையில் பேசியதை மாலையில் மாற்றி பேசுபவர்தான் அவர். தற்போது இரண்டு நாள் கழித்துதான் மாற்றிப் பேசியுள்ளாார். மக்கள், கருத்துகளை மாற்றிப் பேசினால் அரைவேக்காடு என்று நினைப்பார்கள் என்ற சிறிய புரிதல் கூட இல்லாமல் பேசக்கூடியவர் அவர். உள்ளாட்சித் தேர்தலில் சங்கிலேயே மிதித்துவிட்டார்கள். எனவே இவர்களை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்ற காரணத்தால் இவர்கள் சாதியைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். இந்த இடைச்சாதிப் பெருமையைப் பேசிக்கொண்டே நாம் கட்சியை வளர்த்துவிடலாம் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் அது முடியாது. அவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள் என்பது மட்டும் நிஜம். அதில் யாருக்கும் எப்போதும் சந்தேகம் வர வேண்டிய தேவையில்லை" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT