ADVERTISEMENT

சூடான கேள்விகள்... கூலாக டீல் செய்த கூகுள் தமிழர்...!

05:53 PM Dec 17, 2018 | tarivazhagan

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 2004-ம் ஆண்டு கூகுளில் பணியில் சேர்ந்தார். அதன் பின் 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சமீபமாக கூகுள் நிறுவனம் சில சர்ச்சைக்கு உள்ளாகிவருகிறது. குறிப்பாக சீனாவில் கூகுள் தேடு பொறி தொடங்குவது பற்றி பெரிதாக பேசப்பட்டுவருகிறது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விசாரணைக்குழு அமைத்து சுந்தர் பிச்சையை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த விசாரணை கூட்டம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதில் 'முட்டாள்' என்று கூகுளில் தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்பு புகைப்படம் வருவது ஏன், அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சை போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்ற போதிலும் மீண்டும் மீண்டும் சீனாவில் புதிதாக கூகுள் தேடு பொறி அமைப்பது பற்றிய கேள்வியே அதிகமாக கேட்கப்பட்டது. ஆனால், சுந்தர் பிச்சை எந்தக் கேள்விக்கும் பதட்டமாகவோ, மழுப்பலாகவோ பதில் அளிக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாகவும், அமைதியாகவும் பதில் அளித்தார்.


இதற்குமுன் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியும் இதேபோன்று அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு கட்சி உறுப்பினர்கள் கூகுளின் தேடல் முடிவுகள் தங்கள் கட்சிக்கு எதிர்மறையாக அமைந்திருப்பது ஏன் என்று கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை ‘தேடல் முடிவுகள் எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல் வழிநடத்தி வருவதாகவும், தங்கள் சேவைகள் அதே விதமாக தொடர்வைதை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம்’ என தெரிவித்தார்.

முட்டாள் எனும் வார்த்தையைக் கொண்டு தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, ‘பொதுவாக கூகுளில் ஒரு விஷயத்தை தேடும்போது, கூகுள் 200 வார்த்தைகளை தன் கீவேர்டுகளாக கொண்டு கூகுளின் அல்கோரிதம் தீர்மானித்து பதிலை அளிக்கிறது. இதில் கூகுள் நேரடியாக தலையிடுவதில்லை’ என தெரிவித்தார்.

கூகுள் புதிதாக சீனாவில் தனது தேடு பொறியை தொடங்குவதாக சில தகவல்கள் வந்தது. ஆனால், அந்த தேடு பொறியில் அரசாங்கம் தொடர்பான தகவல்கள், மனித உரிமை சம்பந்தமான தகவல்கள் மற்றும் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக குழந்தைகள் சம்பந்தமான விஷயங்கள் மட்டுமே வர வேண்டும் என சீன அரசு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழு 'சீனாவிடம் இதுதொடர்பாக ஏதாவது கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா, கூகுள் நிறுவனம் சீனாவுக்கென்று பிரத்யேகமாக தனது தேடு பொறியை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதா' என்று மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த சுந்தர் பிச்சை சீனாவில் புதிதாக தேடு பொறியை அமைப்பது பற்றி எந்தத் திட்டமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனாவில் தேடு பொறி தொடங்குவது பற்றி பல முறை கேட்டபோதும் சுந்தர் பிச்சை நிதானமாகவும் அதே நேரம் தெளிவாகவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் நிதானமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து அமைதியாக பேசிய சுந்தர் பிச்சையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. சுந்தர் பிச்சையின் இந்த அணுகமுறை உலக அளவில் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT