ADVERTISEMENT

‘நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே!’ -உயிரைவிடும் சிந்துஜாக்கள்!

04:31 PM Sep 15, 2018 | cnramki

ADVERTISEMENT

காதலிக்கும்போது.. ஸாரி.. ஒரு பெண்ணைக் ‘கரெக்ட்’ பண்ணும்போது, பலரும் அவளுடைய முகம், உடலமைப்பு என புறத்தோற்றத்தால் ஈர்க்கப்படுகிறார்கள்; பழகுகிறார்கள். மனதும் ஒத்துப்போகும்போது, பழகிய ஆணுடன் திருமணம் செய்துகொள்ளும் தவிப்பானது, முதலில் பெண்ணுக்குத்தான் வருகிறது. ஆணோ, ‘என்னமோ ஜாலியா சுற்றினோம்; அனுபவித்தோம். இவ என்னடான்னா கல்யாணம் அது இதுன்னு உசிர வாங்குறாளே!’ என்று அவளுக்குத் தெரியாதபடி உள்ளுக்குள் ஜகா வாங்குவான். பெண்ணானவள் விடமாட்டாள். சந்திக்கும்போதெல்லாம், ‘மேரேஜ் பண்ணிக்குவோம். உங்க வீட்ல சொல்லுங்க.’ என்று நச்சரிப்பாள். இவனுக்கும் அவளைப் பிடிக்காமல் இல்லை. ஆனாலும், ‘பழகியவளையே திருமணம் செய்தாக வேண்டுமா?’ என்று தப்பிக்கப் பார்ப்பான். பெண்ணோ, ‘மனதையும் உடலையும் உன்னிடம் கொடுத்துவிட்டேன். என் வாழ்க்கையில் இன்னொரு ஆண் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.’ என்பதில் உறுதியாக இருப்பாள்.

ADVERTISEMENT

கரெக்ட் பண்ணும்போது, பழகும்போது, அட, காதலிக்கும்போது, பெண்ணுடைய ஜாதியோ, சமூக அந்தஸ்தோ, பொருளாதார வசதியோ எதுவுமே ஆண்களின் கண்ணுக்குத் தெரியாது. கண்ணுக்கு லட்சணமாக ஒரு பெண் கிடைத்துவிட்டாள். நன்றாகக் கம்பெனி தருகிறாள். இவளை வைத்து சில நாட்களையோ, மாதங்களையோ ஓட்டலாம் என்று மனதளவில் எண்ணிக்கொண்டு, பெண்ணின் உன்மையான அன்பைப் பெறுவதற்காக, ‘நீயில்லாமல் நான் இல்லை.. ஐ லவ் யூ.. ஐ மிஸ் யூ’ என்று சும்மா ஒரு நடிப்புக்காகப் பினாத்துவார்கள். பெண்ணும் அவன் பேச்சை நம்பி, இந்த அளவுக்கு உயிருக்கு உயிராகக் காதலிக்கிறானே! இனி என் வாழ்க்கை இவனோடுதான்.’ என்று சகலத்தையும் அர்ப்பணித்துவிடுவாள்.


தன்னுடைய நடிப்பு நன்றாக வேலை செய்கிறது. அவளும் காதல் கிறக்கத்தில் இருக்கிறாள். இதுதான் தருணம் என்று உடல் ரீதியாக அவன் அத்துமீறும்போது, அந்தப் பெண்ணும் அனுமதிப்பாள். நாட்கள், மாதங்களைக் கடந்து, வருடக் கணக்கில் இந்தப் பழக்கம் தொடரும்போது, ஒரு கட்டத்தில் ‘செல்ஃபி எடுத்தாச்சு. ஃபேஸ்புக்ல போட்டாச்சு. இவதான் என் ஆளுன்னு ஃப்ரண்ட்ஸ்கிட்ட பெருமை பேசியாச்சு. அட. எல்லாத்தயும் பார்த்தாச்சு. அத்தனையும் அனுபவிச்சாச்சு. இனி இவகிட்ட வேற என்ன இருக்கு?’ என்று சலிப்படைவான். ஆனால், இதை அவளிடம் வெளிக்காட்ட மாட்டான். அவளோ, அவனை முழுவதுமாக நம்பி, தன்னை மனைவியாகவே பாவித்து, அவன் மடியில் தலைவைத்துப் படுப்பதில் பேரானந்தம் கொள்வாள்.

திருமணம் செய்துகொள்வதைக் கடத்திக்கொண்டே போகும் ஆண், ஓரளவு நல்லவனாக இருந்தால், ஒரு கட்டத்தில் ‘சரி வீட்ல சொல்லுறேன்’ என்பான். பிறகுதான், ‘அவன் என்ன ஜாதி? இவன் என்ன ஜாதி? யாரு மேல் ஜாதி? யாரு கீழ் ஜாதி? வசதி இருக்கா? கவர்மென்ட் உத்தியோகமா?’ என்பது போன்ற ஆராய்ச்சிகள் அத்தனையும் நடக்கும்.

மதுரை மாவட்டம் – திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜாவும் இப்படித்தான் ராம்குமார் என்பவனை உயிருக்கு உயிராகக் காதலித்தாள். நான்கு வருடங்கள் நீடித்த காதல் வாழ்க்கையின் அடுத்தகட்டமாக, திருமணப் பேச்சை எடுத்தாள் சிந்துஜா. சிவகாசி – திருத்தங்கல்லைச் சேர்ந்த ராம்குமாரின் பெற்றோருக்கு பெண்ணின் தோற்றப் பொலிவு பிடித்துப்போனதால், பெண் கேட்டுச் சென்றனர். அப்போதுதான், வசதியில்லாத ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவள் சிந்துஜா என்பது தெரிந்திருக்கிறது. ஆனாலும், பெண்ணுக்கு 40 பவுன் நகை போட வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறார்கள். அதற்கான வாய்ப்பு சிந்துஜா குடும்பத்தில் இல்லை என்ற நிலையில், பெற்றோரின் பேச்சைக் கேட்டு, சிந்துஜாவுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டான் ராம்குமார்.


‘நான்கு வருடங்கள் காதலித்தது, பழகியது அத்தனையும் பொய்யா?’ என்று கையை அறுத்துக்கொண்டு, வாட்ஸப்பில் படத்தை அனுப்பி வைத்தாள். ராம்குமாரிடம் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. காதல் என்ற பெயரில் ஆண்கள், பெண்களைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் கொடுமையை சிந்துஜாவும் அனுபவித்தாள். தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, பேரீச்சம்பழத்தில் எலி விஷத்தைக் கலந்து சாப்பிட்டாள். மதுரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் நாட்கள் கடந்தன. ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறந்தே போனாள் சிந்துஜா.

‘ஒரு பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. காதலிக்கலாம் என்றிருக்கிறேன். அவளிடம் எத்தனை பவுன் நகையை எதிர்பார்ப்பீர்கள்? திருமண விஷயத்தில் தங்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தால்தான், அந்தப் பெண் நம் குடும்பத்துக்குச் சரிப்படுவாளா? மாட்டாளா? என்று நான் ஒரு முடிவெடுக்க முடியும்.’ என்றெல்லாம் தன் பெற்றோரிடம் ராம்குமார் ஏன் கேட்கவில்லை? அல்லது, அவன் பெற்றோராவது, ‘மகனே! நீ யாரையும் காதலித்துக்கொள்! ஆனால், 40 பவுன் நகை முக்கியம்!’ என்று தங்களின் திருமணத் திட்டத்தை முன்கூட்டியே ஏன் சொல்லவில்லை?



ஒரு ஆண், காதல் என்ற பெயரில், எந்தப் பெண்ணிடம் வேண்டுமானாலும் பொழுதைப் போக்குவான். திருமணம் என்ற பேச்சு எழும்போதுதான், அவனுக்குப் பெற்றோரின் நினைப்பே வரும். அந்தப் பெற்றோரும், ‘இத்தனை வருடங்கள், தன் மகனிடம் நம்பிப் பழகியிருக்கிறாளே ஒரு பெண்!‘ என்று சிந்திக்காமல், தங்கள் இஷ்டத்துக்கு வரதட்சணை கேட்பார்கள். தற்கொலை செய்யும் அளவுக்குத் தூண்டி சாகடிப்பார்கள்.

காலம் காலமாக பெண்கள் அனுபவித்து வரும் கொடுமை இது! சமுதாயம் இன்னும் ஏன் பாடம் படிக்கவில்லை?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT