ADVERTISEMENT

பாம்பைக் கடித்தவர்... வயலில் சன்னி லியோன் பேனர் வைத்தவர்... என்னலாம் பண்ணிருக்காங்க பாருங்க!!! விநோதங்கள் 2018!!! பகுதி 1

01:42 PM Dec 31, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ஒவ்வொரு ஆண்டும் விநோதமான பல சம்பவங்கள் நிகழும். 2018ம் அதற்கு விதிவிலக்கல்ல... இந்தாண்டின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய விநோதம் நடந்துள்ளது. அதுவும் பிரஞ்சு நாடாளுமன்றத்தில்... 2018 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இமானுவேல் மாக்ரான் புதிய சட்டத்தைக் கொண்டுவந்தார். ‘தவறு செய்யும் உரிமையை வழங்கும் சட்டம்தான் அது. அதன்படி, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் இந்த சட்டமியற்றுதலுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த செய்தி அந்நாட்டு பொதுமக்களின் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய புரட்சி என அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இந்த சட்டத்தின்படி, தவறு செய்பவர் உடனடியாக தண்டிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அவர் செய்த தவறின் நோக்கத்தை கருத்தில் கொண்டு அதற்கான தண்டனை வழங்கப்படும். இதை நல்ல நோக்கத்திலான தவறு மற்றும் தீய நோக்கத்திற்கான தவறு என இரண்டாக வகைப்படுத்தினர். இதில் மிகப்பெரிய விநோதம் என்னவென்றால், பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களால் இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான்.

ADVERTISEMENT

சீனாவில் வறுமை காரணமாக வாலிபர் ஒருவர் சாலையைத் திருடி விற்ற சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின் ஜியான்க்சூ பகுதியில் உள்ளது சங்கேசு மாவட்டம். இங்கு கடந்த ஜனவரி 24ஆம் தேதி சாலை ஒன்றின் குறிப்பிட்ட பகுதி காணாமல் போயிருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இதனை அதிசயித்துப் பார்த்த நிலையில், திடீர் பராமரிப்பு வேலைகளுக்காக இருக்கலாம் என செய்திகள் உலாவின. அதன்பின்தான் தெரிந்தது இந்த சாலையை ஜூ என்ற இளைஞர் வறுமை காரணமாக திருடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜூ நீண்ட நாட்களாக வறுமையால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொழில் தொடங்க வழிதேடிய அவர், அங்கிருந்த சாலையில் சுமார் 800 மைல் நீளத்தை வேலைக்கு ஆள் வைத்து பெயர்த்து கிட்டத்தட்ட 500 டன் எடைக்குக் கிடைத்த சிமெண்டுக் கட்டிகளை, ஒரு சிமெண்ட் நிறுவனத்தில் 5,000 யூவானுக்கு விற்றுள்ளார் என்பது. இதுகுறித்து அந்த இளைஞர், ‘யாருக்கும் பயனில்லாமல் கிடந்த சாலையை நான் பயன்படுத்திக் கொண்டேன். அதை விற்றபோது எனக்கு நல்ல பணம் கிடைத்தது’ என தெரிவித்துள்ளார். வறுமை ஒருவரை எந்தளவுக்கு புத்திசாலியாக யோசிக்க வைத்துள்ளது என்றும், அவர் திருடிய சாலையை மீண்டும் போடச் செய்வதே அவருக்கு கொடுக்கும் சரியான தண்டனை என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.


மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீட்டா சர்க்கார் (வயது 28). இவரது கணவர் பிஸ்வாஜித் திருமணமான முதல் 12 ஆண்டுகளாக வரதட்சணை கேட்டு ரீட்டாவை துன்புறுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ரீட்டாவிற்கு, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடல்வால் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அதன்பின்பும் வலியானது தீரவில்லை. இதையடுத்து மீண்டும் மருத்துவ சோதனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர் பரிசோதனை செய்து, அவருக்கு ஒரு கிட்னி இல்லாததை தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ரீட்டா, இதனை உறுதிசெய்ய மறுபரிசோதனை செய்தபோதும், முடிவில் மாற்றம் எதுவும் இல்லை. ரூ.2 லட்சம் பணத்திற்காக தன் கணவர்தான் இப்படி செய்துள்ளார் என்பதை அறிந்து பிஸ்வாஜித் மற்றும் அவரது தம்பியின் மீது காவல்துறையில் புகார் அளித்தார் ரீட்டா.

கனடா பிரதமர் ஜஷ்டின் ட்ரூடோ ஒரு கூட்டத்தில் மொக்கை காமெடி அடித்ததற்கு மன்னிப்பு கோரியுள்ளார். ‘தாய்ப்பாசம் மனிதகுலத்தின் (Mankind) எதிர்காலத்தை மாற்றக்கூடியது’ என பேசிமுடித்தார். அப்போது குறுக்கிட்ட ஜஷ்டின், Mankind என்ற வார்த்தைக்குப் பதிலாக Peoplekind என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே எனக் கூறினார். பின்னர் ஒரு பேட்டியில் ‘எனக்கு நல்ல ஜோக் அடிக்கவேண்டிய கட்டாயங்கள் எதுவும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். சில தினங்களுக்கு முன்னர் நான் அடித்த மொக்கை ஜோக் வைரலானதாக தகவல்கள் வந்தன. நான் அடித்த ஜோக் அந்த அரங்கிற்குள் சுமாராக எடுபட்டது. வெளியில் சுத்தமாக எடுபடவே இல்லை. இது நான் ஜோக் என்று நினைத்துக்கொண்டு பேசுவதெல்லாம் ஜோக்காக இல்லை என்பதையே எனக்கு நினைவூட்டுகிறது’ என தெரிவித்துள்ளார். மேலும், தான் அடித்த மொக்கை ஜோக்கிற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறினார்.

பொலிவியா நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக தனது இணைக்காக தனிமையில் காத்திருக்கும் தவளை கவனம் பெற்றுள்ளது.


செஹுவேன்காஸ் இனத்தில் தனி ஆளாக எஞ்சியிருக்கும் ஒரேயொரு தவளையை பாதுகாக்கும் வண்ணம் அங்கு ஒரு வித்தியாசமான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. பொலிவியா நாட்டின் டேட்டிங் இணையதளமான மேட்ச்.காம் மற்றும் பொலிவிய நாட்டின் ஊர்வன பாதுகாப்பு அமைப்பு இணைந்து நிதி திரட்ட முடிவுசெய்தன. இந்த தவளைக்காக 15 ஆயிரம் டாலர் நிதியை காதலர் தினத்திற்கு முன் திரட்டவும் முடிவு செய்திருந்தனர். மேட்ச் இணையதளத்தில் இந்தத் தவளையின் புகைப்படத்தையும், தன்குறிப்பும் அளிக்கப்பட்டிருந்தது. அந்த தன்குறிப்பில், நான் இதுவரை திருமணமே ஆகாதவர், குழந்தைகள் கிடையாது மற்றும் கண்டிப்பாக குழந்தைகள் பெற்றாக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், ‘நான் ஒரு அழகான, சாதாரண பையன். நான் இரவுகளை வீட்டில் கழிக்க ஆசைப்படுகிறவன். சாப்பிடப் பிடிக்கும்; யாருக்குத் தான் பிடிக்காது? என்னைப் போன்ற தவளைக்கு இங்கு என்ன வேலை என நீங்கள் அதிசயித்திருப்பீர்கள் என உறுதியாக என்னால் கூறமுடியும். நான் என்னுடைய இணையைத் தேடி இங்கு வந்திருக்கிறேன். உங்களைப் போலவே... என (சோகமான குரலில்)’ விவரிக்கிறது.

இதுகுறித்து மேட்ச் இணையதளத்தின் செயல் அதிகாரி ஹெசம், ‘ரோமியோவுக்கான இணையைத் தேடுவது எங்களுக்கு வந்துள்ள மிகப்பெரிய சவால். ஆனால், அதன் ஒட்டுமொத்த இனமும் அழியாமல் இருக்க இதை நாங்கள் நிறைவேற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தனது இணைக்காக ரோமியோ ஏங்குவதாகவும், கூடிய விரைவில் அதற்கு அந்த வசதியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அதன் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த விவசாயி சோனேலால் என்பவரை அங்கிருந்த பாம்பு கடித்தது. இதனால், ஆத்திரமடைந்த சோனேவால் தன்னைக் கடித்த பாம்பைப் பிடித்து, அதன் தலையைக் கடித்துத் துப்பினார். சில நிமிடங்களில் அதே இடத்தில் மயங்கி விழுந்த சோனேவாலை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மயக்கம் கலைந்து எழுந்த சோனேவால் என்ன நடந்தது என்பதை விளக்கச் சொல்லியிருக்கிறார். பின்னர் நடந்தவற்றை நினைவுப்படுத்திக் கொண்ட அவர், ‘என்னை அந்த பாம்பு கடித்தது. அதனால், பதிலுக்கு அந்த பாம்பின் தலைப்பகுதியை நான் கடித்து, மென்று துப்பினேன். பின்னர் கிராமத்திற்கு எடுத்துவந்து மீதமிருந்த தலையையும் நான் கடித்துத் துப்பினேன்’ என தெரிவித்துள்ளார். இது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது.

அடுத்த பகுதி:

ஆங்கிலம் பேசியதால் கத்திக்குத்து... நாய்க்கு மஞ்சள் நீராட்டு விழா... என்னலாம் பண்ணிருக்காங்க பாருங்க!!! விநோதங்கள் 2018!!! பகுதி2

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT