ADVERTISEMENT

ஸ்பைடெர்மேன், தோர், அயர்ன் மேன், ஹல்க்... இவர் புகழை சொல்ல இத்தனை பிள்ளைகள்!

03:10 PM Nov 13, 2018 | kirubahar

பெரும்பான்மை 90ஸ் கிட்ஸ்களின் அன்றைய ஃபேவரைட் சூப்பர் ஹீரோ சக்திமான்தான். அப்படி சக்திமானில் தொடங்கி இன்று மார்வெல் வெர்சஸ் டி.சி வரை சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களாகவே வளர்ந்து வந்திருக்கிறோம். இதில் இந்தியாவில் அதிகம் கல்லா கட்டுவது பெரும்பாலும் மார்வெல் வரிசை படங்களே. இடிகளின் அரசன் தோரும், ஹல்க்கும் போடும் முரட்டு சண்டைகளையும், அயர்ன் மேனின் வசனங்களையும் நம் உள்ளூர் ஹீரோக்களின் படங்கள் போல விசிலடித்துக் கொண்டாடிப் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இப்படி ஸ்பைடர் மேன், டேர் டெவில் முதல் அவெஞ்சர்ஸ் வரை பல சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியவர் ஸ்டான்லீ. இன்று மறைந்த இந்த 95 வயது இளைஞரின் இறப்பு பல மார்வெல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. யார் இந்த மனிதர்? அமெரிக்காவில் ஒரு மூலையில் பிறந்த இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டானது எப்படி?


1922 டிசம்பர் 28 ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார் ஸ்டான்லீ. வறுமை காரணமாக அவரது குடும்பம் நியூயார்க்கிலிருந்து வாஷிங்டனுக்கு குடிபெயர்ந்தது. சிறு வயது முதல் சூப்பர் ஹீரோக்கள் மீது அவருக்கு ஒரு தனி ஆர்வம் உண்டு. தனது பட்டப் படிப்பை முடித்த பின், பல்ப் இதழில் (pulp magazine) உதவியாளராக சேர்ந்தார். 1941ல் அவர் உருவாக்கிய முதல் காமிக் சூப்பர் ஹீரோ கேப்டன் அமெரிக்கா தான். அதன் பின் காதல், ஆக்சன், சயின்ஸ் பிக்ஷன் என பலதரப்பட்ட கதைகளை எழுதினார்.


1950களின் பிற்பகுதியில் டி.சி நிறுவனம் சூப்பர் ஹீரோக்களை ஒரு டீமாக்கி 'ஜஸ்டிஸ் லீக்' என்று வெளியிட்டு வெற்றி பெற்றது. எழுத்துத் துறையிலிருந்து ஓய்வு பெரும் எண்ணத்தில் இருந்த ஸ்டான்லீயை புதிதாக ஒரு சூப்பர் ஹீரோ டீமை உருவாக்கச் சொல்கிறார் காமிக்சின் ஆசிரியர் மார்ட்டின் குட்மன். அப்படி ஸ்டான்லீயால் உருவாக்கப்பட்டதே 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்'. இதன் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நண்பர் ஜாக் கிர்பியுடன் சேர்ந்து தோர், ஹல்க், அயர்ன் மேன் என அடுத்தடுத்த கதாபாத்திரங்களை உருவாக்கினார். அத்தனையும் ஹிட்.


காமிக்ஸ்களின் வெற்றியைத் தொடர்ந்து மார்வெல் ஹீரோக்களை மையமாக வைத்து தொலைக்காட்சிகளில் சீரியஸ்கள் ஒளிபரப்பப்பட்டன. அதுவும் வெற்றியடையவே அவை பின்பு திரைப்படமாக மாறின. ஆரம்ப காலகட்டத்தில் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்த மார்வெல் திரைப்படங்களுக்கு 2002 ஸ்பைடர்மேன் படத்துக்குப் பிறகு ஏறுமுகம் தான். 2008 ல் அயர்ன் மேன், முதல் 2018 ல் அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் வரை பல்வேறு வசூல் சாதனைகளை படைத்துள்ளது. மார்வெல் படங்களில் ஏதாவது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது ஸ்டான்லீயின் ஸ்டைல். அது போன்ற காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


1950களின் ஆரம்பத்தில் இந்தத் துறையை விட்டு செல்லும் எண்ணத்தில் இருந்த ஸ்டான்லீ அப்படி செய்திருந்தால் இன்று நாம் பல சூப்பர் ஹீரோக்களை மிஸ் பண்ணியிருக்கக்கூடும். சாதாரண உதவியாளராக வேலையில் சேர்ந்து பல சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி மார்வெல்லின் மூத்த ஆசிரியராகவும், பின் மார்வெல் குழுமத்தின் தலைவராகவும் தன் கடின உழைப்பின் மூலம் உயர்ந்தார்.


95 வயதிலும் ஒரு இளைஞன் போல தன் சுறுசுறுப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தவர், இப்பொழுது நம்மை விட்டு சென்றாலும், அவரது சூப்பர் ஹீரோக்கள் என்றும் அவரது நினைவுகளையும், புகழையும் உரைத்துக்கொண்டே இருப்பார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT