Skip to main content

சோக க்ளைமேக்ஸ்... 5 நிமிடத்திற்கு ஒருமுறை பறக்கும் விசில்... 22 சாகச படங்களின் முடிவு எப்படி இருக்கிறது?

பாட்ஷா ரஜினி, வேட்டையாடு விளையாடு கமல், கில்லி விஜய், மங்காத்தா அஜித், அந்நியன் விக்ரம், சிங்கம் சூர்யா, தொட்டி ஜெயா சிம்பு, பொல்லாதவன் தனுஷ் இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? சுருக்கமாக அதுதான் அவெஞ்சர்ஸ். 
 

avengers

 

 

அயர்ன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, கேப்டன் மார்வெல், ஸ்பைடர்மேன், ஆன்ட் மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஹல்க், ப்ளாக் பேன்த்தர், ப்ளாக் விடோ, ஹாக் ஐ என இத்தனை ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களும் ஒன்று சேர்கிறார்கள் என்றால், அந்த வில்லன் எப்படி இருக்கவேண்டும்? உலகத்தை அழிக்க நினைக்கும் தானோஸ் எனும் சக்திவாய்ந்த வில்லனை இந்த அத்தனை பேரும் சேர்ந்து வீழ்த்துவதுதான் அவெஞ்சர்ஸ் சீரிஸின் கதைச்சுருக்கம். 
 

கடைசியாக வந்த அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் முடிவில், அண்டத்தில் இருக்கும் அத்தனை இன்ஃபினிட்டி ஸ்டோன்களையும் கைப்பற்றும் தானோஸ் ஒரு விரல் சொடுக்கின் மூலம் உலகத்தின் பாதி மக்கள்தொகையை அழித்துவிடுகிறான்.  இன்ஃபினிட்டி வார்ஸ் முடிந்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு துவங்குகிறது என்ட் கேம். முந்தைய ஆன்ட் மேன் படத்தில் க்வான்டம் ரியாலிட்டி என்றழைக்கப்படும் வெளிக்குள் சென்ற ஸ்காட் லேங், பாதி உலகை தானோஸ் அழித்ததால் வெளியே வரமுடியாமல் அதற்குள்ளேயே மாட்டிக்கொள்கிறான். அதிர்ஷ்டவசமாக மீண்டு நிகழ்காலத்திற்கு வரும் ஸ்காட், உலகிற்கு என்ன நடந்தது என்பதை அறிந்து உடைந்துபோகிறான். இறந்தவர்களை மீட்டுக் கொண்டு வர தன்னிடம் ஒரு வழி இருப்பதாக எண்ணி மிஞ்சியிருக்கும் அவெஞ்சர்களை அணுகுகிறான். 
 

அந்த யோசனையை கேட்டு பரபரப்பாகி, அயர்ன் மேனிடம் உதவிக்கு செல்கிறார்கள். இறந்தகாலத்திற்கு செல்லும் பக்காவான ஃபார்முலாவை உருவாக்குகிறான் டோனி ஸ்டார்க். எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் மற்ற அவெஞ்சர்களை தேடிப்பிடித்து இந்த இறுதி யுத்தத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்கள். அத்தனை பேரும் சேர்ந்து இறந்தகாலத்திற்கு சென்று அந்த இன்ஃபினிடிட்டி ஸ்டோன்களை கண்டுபிடித்தார்களா, மறைந்த மக்களையும் சூப்பர் ஹீரோக்களையும் மீண்டும் கொண்டு வந்தார்களா, இந்த விஷப்பரிட்சையில் ஏற்படும் விபரீதங்கள் என்ன, அதை சமாளித்து அவெஞ்சர்ஸ் தானோஸை கொன்றார்களா வென்றார்களா என்பதுதான் அவெஞ்சர்ஸ் என்ட்கேம்!
 

iron man

 

 

மார்வெல் சீரிஸ் படங்களின் வழக்கமான நகைச்சுவை இந்த படத்திலும் விரவிக்கிடக்கிறது. ஆனால் மற்ற படங்களைக் காட்டிலும் காட்சிக்கு காட்சி நகைச்சுவை தூவப்பட்டிருக்கிறது. ஆன்ட் மேன் நிகழ்காலத்திற்கு வந்து அவெஞ்சர்களை கண்டுபிடித்து, அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்று சேர்ந்து, இறந்தகாலத்திற்கு போக சம்மதித்து அங்கே போவதுவரை காட்சிக்கு காட்சி காமெடி களைகட்டுகிறது. குறிப்பாக தோர் சம்பந்தபட்ட காட்சிகளில். 
 

அவெஞ்சர்ஸ் ஒன்றிணைந்து இறந்தகாலத்திற்கு போகும் காட்சிகள் ஒவ்வொன்றும் பட்டாசு. ரசிகர்கள் கத்தித் தீர்க்கிறார்கள். ஏனென்றால் இந்த ஹீரோக்கள் திரும்பிப் போவது அவெஞ்சர்ஸ் 1, கேப்டன் அமெரிக்கா, தோர் 1 என முந்தைய அவெஞ்சர்ஸ் படத்தின் முக்கியமான காட்சிகளுக்கு. MCU எனப்படும் இந்த மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸின் முந்தைய படங்களை பார்த்த ரசிகர்களுக்கு அந்த காட்சிகள் எத்தனை அடிப்பொலி அனுபவமாக இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். இந்த காட்சிகள் இணைக்கப்பட்ட விதமும் அதில் நடக்கும் சம்பவங்களும் புத்திசாலித்தனமான திரைக்கதையின் வெளிப்பாடுகள். 
 

இறந்தகாலத்திற்கு செல்வது, இன்ஃபினிட்டி ஸ்டோன்களை எடுப்பது என எல்லாம் அடுத்தடுத்து எளிதாக நடக்கிறதே என்று பார்த்தால், அதிரடியாக வருகிறது அடுத்தடுத்த ட்விஸ்ட்கள். தானோஸின் எதிர்வினை, நிகழ்காலத்தில் இல்லாத ஹீரோக்கள் மறைந்த காலத்தில் வருவது என நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கிறது திரைக்கதை. 
 

இறுதிக்கட்டத்தில் இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ் அவெஞ்சர்களின் கைக்கும் வரும்போது, கொஞ்சமும் எதிர்பாராத மொத்த உலகத்தையுமே அழிக்க வல்ல பேராபத்து ஒன்றும் உடன் வருகிறது. துவங்குகிறது இறுதியுத்தம். அவெஞ்சர்கள் மாறி மாறி தானோஸை வீழ்த்த முயன்று, தானோஸ் மற்றும் அவன் படையின் அசுரபலத்தின் முன் நிற்கமுடியாமல் தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்படுகிறார்கள். அப்போது வரும் காட்சி துவங்கி அடுத்த பத்து நிமிடங்கள் வரை தியேட்டர் தாண்டவமாடுகிறது. கொல மாஸ், மரண மாஸ், வேற லெவல் என எத்தனை வார்த்தைகளை வேண்டுமானாலும் அதை விவரிக்க போட்டுக்கொள்ளலாம். அப்படியொரு ஆரவாரம்.
 

இறுதியுத்தத்தில் அயர்ன்மேன் அதிகமாக சண்டையிடவில்லையே என்ற ஏக்கம் அயர்ன் மேன் ரசிகர்களுக்கு ஏற்படக்கூடும். ஆனால் அந்த ஏக்கத்தை மொத்தமாக போக்குகிறது சண்டையின் கடைசியில் அயர்ன் மேனுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவ்ம்.  அவெஞ்சர்ஸ் படங்களில் நகைச்சுவையை போலவே எமோஷனல் காட்சிகளுக்கும் குறையிருக்காது. இது அத்தனை படங்களும் நிறைவடையும் அத்தியாயம் என்பதால் எமோஷனல் காட்சிகளுக்கு இன்னும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவை பலமான  தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
 

thor

 

3டி, பிரம்மாண்டமான க்ராஃபிக்ஸ், அட்டகாசமான திரைக்கதை, நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள், சூப்பர் ஹீரோக்களின் சுவாரசியமான சேஞ்ச் ஓவர், பாத்திரப் படைப்புகளில் இருக்கும் நேர்த்தி, சுவாரசியம், ஆர்ப்பரிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் என ஒரு அட்டகாசமான திரையனுபவம் அவெஞ்சர்ஸ் என்ட்கேம். படத்தின் முடிவு நீளமாகவும் சோகமாகவும் இருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் 22 படங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் சாகச பயணத்திற்கேற்ற நிறைவானதொரு முடிவுரை இது. 
 

ஐபிஎல் காய்ச்சலில் திரைப்படங்களின் வெளியீட்டை தள்ளிவைத்துக்கொண்டிருக்கும் வேளையில், காலை 4 மணி காட்சிக்கு அத்தனை தியேட்டர்களும் நிறைந்து கிடக்கின்றது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எந்த தியேட்டரிலும் டிக்கெட் இல்லை.  இந்த பிரம்மாண்டான எதிர்பார்ப்பை படம் முழுதாக பூர்த்தி செய்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை எழும் கைத்தட்டல்களும் விசில்களும். மார்வெல், அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தளித்திருக்கிறது என்ட்கேம். எந்த படம் வந்தாலும் வந்தாலும் முதல் சில நாட்கள் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் வேற லெவல், வேற லெவல் என்று சொல்வதை வாராவாரம் கேட்கிறோம். ஆனால் சர்வநிச்சயமாக இது ஒரு வேற லெவல் என்டர்டெயின்மென்ட்!