ADVERTISEMENT

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

11:03 AM Mar 11, 2024 | ArunPrakash

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில், இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ADVERTISEMENT

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்' என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல் திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

ADVERTISEMENT

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள் உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும். எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம் அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன் 'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை. நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT