Skip to main content

"பழமையான தமிழி எழுத்துக்களை எழுதி அசத்திய 6ம் வகுப்பு மாணவர்கள்" - உலக மரபு வார விழா நிகழ்வில் பாராட்டு

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

6th student written tamizhi

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ. பழனிவேல் தலைமை வகித்தார். தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன் வரவேற்றுப் பேசினார். உதவி தலைமை ஆசிரியர் எஸ்.குமரவேல், பள்ளி  ஆசிரியர்கள் க.ஆண்டிவேல், க.அனந்தநாயகி, சி.பாத்திமா, த.அருந்தேவி, மதிவாணன், சரவணன் ஆகியோர் தமிழர்களின் தொன்மை வரலாறு குறித்தும் அதனைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினர்.

 

தலைமையேற்று பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல், பழமையான தமிழி எழுத்துக்களை எழுதியும் வாசித்தும் காட்டிய மாணவர்களைப் பாராட்டினார். வருங்காலத்தில் உயர் பணிகளுக்குச் செல்வதற்கு இந்தப் பயிற்சி மிகுந்த பயனாய் அமையும் என்றார். அனைவரும் அறிந்திராத தமிழி எழுத்துக்களை மாணவர்கள் எழுதி வாசிப்பதற்குப் பயிற்சியளித்த தொன்மை பாதுகாப்பு மன்றத்திற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

6th student wrote tamizhi words

 

உலக மரபு வார விழா குறித்து தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன் பேசியதாவது, "உலகம் முழுவதும் உள்ள பல்வேறுபட்ட மனித வர்க்க பரவலில் தனிப்பட்ட வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள், அடையாளங்கள், மொழி , கலை வடிவங்கள், உணவு முறைகள், வாழ்விடங்கள் என வேறுபாடுகள் இருப்பதையும் அவற்றை அழியாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே உலக மரபு வார விழாவின் தலையாய நோக்கமாகும். இப்பணியை இளைய சமூகத்தினருக்குக் கடத்தும் நோக்கத்துடனேயே இதுபோன்ற பயிற்சிகள் , விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

 

நமது பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழி மற்றும் முற்கால தமிழ் எழுத்து வடிவங்களை அறிமுகம் செய்து வாசிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறோம். பயிற்சியின் நிறைவில் அனைவரும் கல்வெட்டு எழுத்துக்களை வாசிக்க இயலும்" என்றார். இறுதியாகத் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர் முகமது ஆசிப் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.