ADVERTISEMENT

குட்கா, மதுக்கடை வழக்குகளில் வேகம்! காவலர் இடஒதுக்கீடு வழக்கில் மெத்தனம்! -எடப்பாடி அரசின் சுயநலம்! 

01:15 PM May 20, 2018 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT



கடந்த டிசம்பரில், தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 6140 பேரை தேர்வு செய்யவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம். இணையதளம் வாயிலாக மொத்தம் 3.27 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், மார்ச் 11-ஆம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் 2.88 லட்சம் பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.


காவலர் இட ஒதுக்கீட்டில் பாரபட்சம்!

எழுத்து தேர்வு நடைபெற்ற ஒரு மாதத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, உடல் திறன் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த தடவை, நீதிமன்ற உத்தரவால் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாமல், காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது தமிழக அரசு. காரணம் என்னவென்றால் - காவல்துறை பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது, காவல்துறையில் பணியாற்றும் வாரிசுகள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு 9 சதவீதம், காவல்துறையில் அமைச்சுப் பணியாளர்களாக தற்போது வேலை பார்ப்பவர்களின் வாரிசுகளுக்கு 1 சதவீதம் என, மொத்தம் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது நடைமுறையாக இருந்தது. கடந்த மார்ச் மாதம் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது போல், ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கிட உத்தரவிட வேண்டும் என்று சதீஷ் என்ற இளைஞர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.

பொது சேவையில் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்பு!

சதீஷின் மனுவானது, கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி நீதியரசர்கள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதியரசர்கள் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது’ என்று குறிப்பிட்டு, காவலர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தனர். மேலும், பொது சேவையில் நுழைவதற்கு, அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.

இந்த தீர்ப்பானது, தேர்வு எழுதிய 2 லட்சத்து 88 ஆயிரம் பேரின் நிலையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. ஏப்ரல் 14-ஆம் தேதி எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வெளியிட்ட சீருடை பணியாளர் தேர்வாணையம், இட ஒதுக்கீட்டுக்கான ‘கட்-ஆப்’ மார்க்கை வெளியிடவில்லை. இதனால், உடல் தேர்வு போன்ற அடுத்தகட்ட தேர்வுகளுக்கு நாம் தகுதி பெற்றிருக்கிறோமா? இல்லையா? என்ற கேள்வி எழுத்து தேர்வு எழுதியவர்களுக்கு எழுந்துள்ளது.



காவலர்களின் வாரிசுகளுக்காக வரிந்துகட்டவில்லையே!

காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம், “குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். உடனே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அதுபோல், உள்ளாட்சி சாலைகளை வகைப்படுத்தாமல், நெடுஞ்சாலையில் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். உடனே உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது இதே எடப்பாடி அரசு. இந்த ஆட்சியாளர்களுக்கு எத்தனை சுயநலம்! அதனால், இவ்விரு வழக்குகளும் தள்ளுபடியானது வேறு கதை.

குட்கா, மதுக்கடை விஷயத்தில் காட்டிய வேகத்தை, காவலர் இட ஒதுக்கீடு வழக்கிலும் தமிழக அரசு காட்டியிருக்க வேண்டாமா? பல இடங்களிலும், காவலர்களைத் தங்களின் ஏவலர்களாக நடத்தி வரும் ஆட்சியாளர்களுக்கு, காவலர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த இடஒதுக்கீடு சலுகை, தற்போது இல்லாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்நேரம் வரிந்துகட்டி அப்பீல் செய்திருக்க வேண்டும். செய்யவில்லையே?” என்று குமுறலாகச் சொன்னார்.

காவல் இடஒதுக்கீடு வழக்கில் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்காமலும், மேல் முறையீட்டுக்குச் செல்லாமலும் மவுனம் காத்து வருகிறது. அதனால், காவலர் பணிக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நொந்துபோய் உள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT