ADVERTISEMENT

எந்தப் பக்கம் போனாலும் இடிக்குதே... சிவசேனா வந்த பாதையும் நிற்கும் இடமும்!

05:37 PM Nov 13, 2019 | suthakar@nakkh…

1960-களின் மத்திய பகுதி, மராத்திய மக்கள் அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்த நேரம். சுதந்திரத்துக்குப் பிறகான இந்த 15 ஆண்டுகளில் மராட்டியர்களுக்கு வேலை வாய்ப்பில் போதிய முக்கியத்துவத்தை மாநில அரசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆளான நேரம் அது. அப்போது 'மண்ணின் மைந்தன்' என்ற கோஷத்தோடு அறிமுகமாகிறார் பால் தாக்கரே. மும்பையில் 'மார்மிக்' என்ற மராத்தி வார இதழை நடத்தி வந்த இந்த கார்ட்டூனிஸ்ட் மராத்தியர்களின் உரிமைகளுக்காக செயல்படத்தொடங்குகிறார். மராத்தியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை ஆளும் அரசு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கூறிய அவர், அதற்குக் காரணம் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இங்கே அடைக்கலம் கொடுத்ததுதான் என்ற பகீர் குற்றச்சாட்டை மராத்தி மக்கள் முன் வைத்தார். இது மக்களிடம் பேசு பொருளான சமயம், இதுதான் நேரம் என்று காத்திருந்த அவரின் ஆதரவாளர்கள் குஜராத்தி மற்றும் தென் இந்திய மக்களின் மீது சரமாரி தாக்குதல் நடத்தி தாங்கள்தான் மராட்டியர்களின் சிவாஜி என்று நிறுவ முயன்றனர். அதனை பொதுமக்களில் குறிப்பிட்ட பகுதியினர் ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். 1966ம் ஆண்டு சிவசேனா ஆரம்பிக்கப்படுகிறது. சிவசேனா ஆரம்பிக்கப்பட்ட இந்த 50 ஆண்டுகால கட்டத்தில் முதல் முறையாக ஒரு புதிய சூழ்நிலையை அக்கட்சி சந்தித்து வருகிறது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

சிவசேனா தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது சில தினங்களுக்கு முன்புவரை இந்துத்துவ சிந்தாந்தங்களோடு பயணித்த அந்தக் கட்சி முதல் முறையாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் குறைபட்ச செயல்திட்டத்துடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று கூறி தங்களின் ஐம்பது ஆண்டுகால காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை மறந்து நட்புக்கரம் நீட்ட விரும்பியது. காரணம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, 50-50 அமைச்சர் பதவிகளை தர பாஜக தரப்பு மறுத்த காரணங்களால் பாஜகவுடனான தங்களின் கூட்டணியை சிவசேனா முறித்தது. அதையும் தாண்டி வெற்றி பெறுவதற்காக யாரை எதிர்த்து சிவசேனா தேர்தலில் நின்றதோ அவர்களிடமே தாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவும் கேட்டது. யாரை அப்பறப்படுத்த கட்சி ஆரம்பித்ததாக இத்தனை ஆண்டுகாலம் கூறிவந்தார்களோ அவர்களிடமே ஆட்சி அமைக்க ஆதரவு கோருவது என்பது காலத்தின் கோலம் என்றுதான் சொல்கிறார்கள் ஜனநாயகவாதிகள். சிவசேனாவுக்கு முதல்வர் பதவி என்பது புதில்ல, ஏற்கனவே 1995ம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவுடன் இணைந்து முதல்வர் பதவியை கைப்பற்றியது சிவசேனா. அக்கட்சியை சேர்ந்த மனோகர் ஜோஷி முதல்வாராக்கப்பட்டார்.

தாங்கள் எதற்காக கட்சி ஆரம்பித்தோமோ அதனை சாதித்த மகிழ்ச்சியில் இருந்த தாக்கரே குடும்பத்தினர், அதனை தொடர முடியாமல் போனது அவர்களுக்கு நீண்டகால வருத்தம். மாநிலத்தில் இரண்டு இலக்கத்தில் வெற்றி பெறும் வல்லமையை பெற்று இருந்தும் கடந்த பல ஆண்டுகாலமாக அக்கட்சியை சேர்ந்த எவரும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. இது ஏக்கமாக மனதில் இருந்து வந்த சமயத்திலேயே பால் தாக்கரே 2012ம் ஆண்டு மறைந்து போனார். மன்னனுக்குப் பிறகு இளவரசர் என்ற அடிப்படையில் அக்கட்சிக்கு தலைவரானார் உத்தேவ் தாக்கரே. அப்பாவை விட வலிமையாக செயல்பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அதற்காக தீவிரமாக உழைத்தார். அவரின் பத்தாண்டுகால உழைப்புக்கு நடந்து முடிந்த தேர்தலில் நல்ல அரசியல் அறுவடை செய்யலாம் என்ற நிலையில், சிறு பங்கை வேண்டுமானால் தருகிறேன் ஆனால் நிலத்தில் கைவைக்காதே என்று கம்பு சுத்துகிறது பாஜக. 'அப்பாவிடம் (பால் தாக்கரே) நான் சிவசேனா கட்சியை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவேன் என்று அவர் இறப்பதற்கு முன் உறுதி கொடுத்துள்ளேன், எனவே உயிரே போனாலும் இந்த முறை சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்' என்று பாஜகவுக்கு எதிராக கொந்தளித்தார் உத்தேவ் தாக்கரே. 'சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை என்றாலும் ஆட்சி அமைக்கும் வல்லமை படைத்த நம்மிடம் இவர் வீம்பு செய்கிறாரே' என்று ஒரு புறம் அமித்ஷா தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர்களிடம் சிபிஐ படம் எடுபடாது. அதற்கு மிகச்சிறிய உதாரணம், என்சிபி தலைவர் சரத் பவார் மீது தேர்தலுக்கு முன்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டதற்கே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட ஆரம்பித்தனர். அப்படி வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறிய பிறகே என்சிபி கட்சியினர் அமைதியானர்கள்.



மராட்டிய அரசியல் சூழ்நிலை இப்படி இருக்க, முதல் முறையாக கைக்கட்டி நிற்கிறார்கள் பாஜக தலைவர்கள். குடியரசு தலைவர் ஆட்சி என்ற அரசியல் அமைப்பு வழங்கிய லகானை தற்போது கையில் எடுத்துள்ளனர். நிலைமை எப்படி மாறும் என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியவரும் என்றாலும் மராட்டியத்தில் சிவசேனாவை விட்டுவிட்டு பாஜகவால் அரசியல் செய்ய முடியாது என்பது எதார்த்தமான ஒன்று. தற்போது காங்கிரஸ் என்சிபியுடன் அவர்களுக்கு சமாதானம் ஏற்பட்டு ஆட்சி அமைப்பார்கள் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், ஆட்சியில் பங்கெடுக்க காங்கிரஸ் தயங்குவதாகக் கூறப்படுகிறது. நாம் மட்டும் வெளியில் இருந்து ஆதரித்து, என்சிபி ஆட்சியில் பங்கெடுத்தால் அவர்கள் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம் வேறு காங்கிஸ் கட்சிக்கு உள்ளது. யாருக்கும் ஆதரவில்லை என்று ஒருவேளை காங்கிரஸ் முடிவு செய்தால் மாநிலத்தில் மீண்டும் தேர்தல் வரலாம். அப்படி வரும்பட்சத்தில் சிவசேனா தனியாகவே தேர்தலை சந்தித்தாக வேண்டும். பாஜக ஒருபுறம், காங்கிரஸ்-என்சிபி கூட்டணி மறுபுறம் என்றால் வெற்றிவாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமாக இருக்கும் என்பது சிவசேனாவுக்கும் தெரிந்த உண்மைதான். இத்தனை ஆண்டுகாலம் இந்தியாவில் அதிரடி அரசியலை செய்துவந்த அவர்களுக்கு அடுத்துவரும் நாட்கள் முக்கியமானவை மட்டுமல்ல, தங்களை பல சமரசங்களுக்கு தயார்படுத்தும் நாட்களும் கூட!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT