ADVERTISEMENT

முதல்ல வாசி.. அப்புறம்தான் சாப்பாடு; சங்கடத்தை வென்று சாதனை படைத்த 'நாதஸ்வர வித்வான்' பார்த்திபன்!

01:01 PM May 11, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனியார் தொலைக்காட்சி பாடல் போட்டி நிகழ்ச்சியின் மூலம் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்த நாதஸ்வர வித்வான் பார்த்திபன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல். அவர் கடந்து வந்த பாதை குறித்து பல்வேறு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

என்னுடைய குடும்பம் ஒரு நாதஸ்வரக் குடும்பம். அப்பா, தாத்தா இருவரும் நாதஸ்வர வித்வான்கள். எனக்குப் படிப்பு வரவில்லை. அப்பாவிடம் நாதஸ்வரம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு மாமாவிடம் கற்றுக்கொண்டேன். கடலூர் அரசு இசைப்பள்ளியிலும் நாதஸ்வரம் கற்றுக்கொண்டேன். சிறுவயதிலிருந்து பாட்டு பாடுவதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. எஸ்பிபி ஐயாவுடைய பாடல்கள் பலவற்றை கேட்டு நாதஸ்வரத்தில் வாசிப்பேன். அதன் பிறகு தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

நம்முடைய பாரம்பரிய இசை வாத்தியங்கள் தற்போது குறைந்துகொண்டே வருகின்றன. சூப்பர் சிங்கர் போன்ற மேடைகள் எங்களைப் போன்ற கலைஞர்களை ஊக்குவிக்கின்றன. எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சிறுவயதில் கிராமத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு அப்பாவுடன் வாசிக்க நான் சென்றுள்ளேன். அப்போது சம்பளம் மிகக் குறைவு தான். வருடத்துக்கு ஆறு மாதங்கள் தான் வேலை இருக்கும். மீதி ஆறு மாதங்களுக்கு அந்தப் பணத்தை வைத்து தான் செலவு செய்ய வேண்டும்.

பல கலைஞர்கள் இன்னும் வறுமையில் தான் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்தக் கலையை எப்போதும் விட்டு விடக்கூடாது என்று என் தந்தை என்னிடம் கூறினார். ஒரு சில நிகழ்ச்சிகள் முடிவதற்கு நேரம் ஆகிவிடும். அப்போது நாங்கள் நேரத்திற்கு சாப்பிட முடியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகு உடனே சாப்பிட்டாலும் ஏன் என்று கேட்பவர்களும் உண்டு. அப்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எனக்கு சிறப்பான ஒரு அனுபவம். ஷிவாங்கி எல்லாம் எங்களுடைய செட் தான். அனைவரும் இன்னும் நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம்.

நான் பங்கேற்ற சூப்பர் சிங்கர் சீசனுக்குப் பிறகு தான் கொரோனா வந்தது. எங்களுடைய சீசன் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியால் என்னுடைய கிராமத்தில் எனக்கு நிறைய புகழ் கிடைத்தது. நான் வாசிக்கும்போது என் அம்மா பட்ட கஷ்டங்கள் எல்லாம் என் நினைவுக்கு வரும். நாதஸ்வரம் வாசித்துக்கொண்டே பாடுவது மிகவும் கடினம் என்று கூறி அனிருத் என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் நம்மை ஆத்மார்த்தமாக ரசிக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எஸ்பிபி அவர்களின் பாடலை அவர் முன்னிலையில் பாடி பாராட்டுப் பெற்றது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். நிகழ்ச்சியில் பாடுவதற்கு முன்னரே அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றோம். அப்போதே அவர் என்னைப் பாராட்டினார். மேடையில் அவர் பாட நான் வாசித்தது ஒரு வாழ்நாள் தருணம். எங்களைப் போன்ற இசைக்கலைஞர்கள் இன்று திருப்தியாக இருக்கிறோம். மக்களுடைய ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. இது மென்மேலும் வளர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT