ADVERTISEMENT

ஒரு மணியடித்தால் திருக்குறள் கேட்கும்... தமிழ்ச்சேவை புரியும் கடை

02:06 PM Sep 08, 2018 | sekar.sp

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் கடை வீதியில் சமீபத்தில் ஒரு நாள் பொருட்கள் வாங்க சென்றோம். அப்போது மாலை 3 மணிக்கு ஒரு கடை மாடியில் இருந்து ஒலிபெருக்கி மூலம், மதியம் 3 மணி என்ற பெண் குரல், 'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோருக்குப் பொய்யா விளக்கே விளக்கு', என்ற திருக்குறளை கணீர் குரலில் ஒலித்ததோடு அதற்கான பொருள் விளக்கமும் கூறி நிறுத்தியது அந்த ஒலிபெருக்கி பெண் குரல்.

நாம் நின்று அண்ணாந்து பார்த்தோம். மொட்டை மாடியில் இரண்டு ஒலி பெருக்கி குழாயில் இருந்து ஒலித்தது அந்த குரல். சரி யாரோ இப்படி செய்துள்ளார், வாழ்க வள்ளுவம் என்று மனதில் எண்ணியபடியே நாம் சென்ற பணிகளை முடித்துக்கொண்டு திரும்பும்போது சரியாக மாலை 5 மணிக்கு மீண்டும் அந்த இடத்தை நெருங்கும்போது அதே ஒலிபெருக்கியில் இருந்து பெண் குரல், மாலை 5 மணி என்றதோடு, 'செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்', என்ற குறளையும் அதற்கான விளக்கத்தையும் சொன்னது.

வியப்பு மேலிடவே அந்த ஒலிப் பெருக்கிக்கு கீழ் இருந்த கடைக்குள் நுழைந்தோம். முறுக்கு மீசையோடு அமர்ந்திருந்த முதியவரிடம் அதுகுறித்து கேட்டோம். ஒலிபெருக்கி மூலம் நேரத்தையும், குறளும் அதற்கான விளக்கமும் எப்படி ஒலிபரப்பப்படுகிறது, யார் ஏற்பாடு இது என்றோம். அவர் நம்மை உபசரித்து அன்போடு பேச ஆரம்பித்தார். அவர் பெண்ணாடம் திருக்குறள் ஆய்வு மையம் பேரவையின் தலைவர் த.கோ.சம்பந்தம். அதன் செயலாளர் திருஞானசம்பந்தம்.

"நம்மிடம் வாழ்வின் தத்துவத்தை வள்ளுவன் தனது 1330 குறள்பாக்களில் சொல்லியுள்ளார். வாழ்வின் தத்துவமான அந்த குறளை எளிமையான முறையில் எல்லா மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் உள்ளோம். எங்கள் மையத்தின் சார்பில் அவ்வப்போது நண்பர்கள் உதவியோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பல அறிஞர்கள், பள்ளி மாணவ - மாணவிகள் வந்து கலந்து கொள்கிறார்கள். எங்கள் மையத்தின் சார்பில் பள்ளிப் பிள்ளைகளுக்கு குறள்பா போட்டி வைத்துள்ளோம். ஒரு அதிகாரத்துக்கு 5 ரூபாய் வீதம் 100 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தால் பரிசுத் தொகையும், 200 குறளை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் பரிசுத் தொகையும் அளிக்கிறோம்.

1330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் என அறிவித்துள்ளோம். இதில் பல பள்ளி பிள்ளைகள் குறள் ஒப்பித்து பரிசு பெற்றள்ளனர். 1330 குறளையும ஒப்பிவித்து 10 ஆயிரம் பரிசு பெறும் முயற்சியில் பல மாணவ மாணவிகள் ஆர்வமாக முயன்று வருகிறார்கள். இப்படி குறள் பற்றிய அருமை பெருமைகளை பல வழிகளிலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியின் வெளிப்பாடாகதான் கடை வீதியில் எங்கள் கடை மாடியில் தினமும் மணிக்கு ஒருமுறை நேரத்தை குறிப்பிட்டவுடன் ஒரு குறளும், அதற்கு விளக்கமும் சொல்லும் முறையை ஒலிபெருக்கி மூலம் செயல்படுத்தி வருகிறோம். இதன் செலவு மட்டும் 5 ஆயிரம் ரூபாய். இந்த வடிவமைப்பை திருநெல்வேலி ஜங்ஷன் அருகேயுள்ள லிங்கராஜா என்பவர் பதிவு செய்து தருகிறார். அவரது தொடர்பு எண் 9994590097. நாங்கள் இந்த குறள் ஒலிபரப்பை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒலிபரப்பி வருகிறோம்.

அதேபோல் திருச்சியை சேர்ந்த கரு.பேச்சிமுத்து அவர்கள் திருக்குறளும், ஏழிளந்தமிழும் என்ற புத்தகம்எழுதி வெளியிட்டுள்ளார். அதில் குறள் அதற்கான விளக்கமும் உள்ளன. அதோடு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றி வேட்கை, நன்னெறி, உலகநீதி ஆகிய தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. பள்ளிப் பாடங்களில் கூட இவை இப்போது இல்லை. அதை தமது திருக்குறள் புத்தகத்தில் இடம்பெற செய்து இல்லம் தோறும் திருக்குறள் இருக்க வேண்டும். அனைவரும் படித்து நல்ல முறையில் பின்பற்றி நடக்க வேண்டும். மனம் அமைதி, மெய்திறனோடு வாழ திருக்குறளும், ஏழிளந்தமிழும் என்ற புத்தகத்தை வழங்கி வருகிறார். அதை வாங்கி மாணவ மாணவிகளுக்கு கொடுத்து படிக்க சொல்லி எங்கள் மையத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்கிறார் த.கோ.சம்பந்தம்.

"மேலும் அக்காலத்தில் மொழியாராய்ச்சி இல்லாததாலும், வடமொழி சொற்கள் ஒவ்வொன்றாக புகுத்தப்பட்டன. பல புலவர்களுக்குக் கூட வடசொல், தென் சொல் புலப்படாத காலத்தில் திருக்குறளிலும் பல வடமொழி சொற்கள் புகுந்தன. அவைகளையெல்லாம் களையெடுத்து தூய தமிழ் எழுத்துக்களோடு மக்களை படிக்க, பேச வேண்டும் என்ற நோக்கத்திலும் உள்ளது எங்கள் குறள் ஆய்வு மையம்.

திருக்குறள் எல்லா வகையிலும் உயர்வு பெற்ற நூல். எல்லா கேடுகளும், பாடுகளும், துன்பங்களும், தொல்லைகளும் நீங்கி எல்லோரும் இன்பமாக வாழ வழி காட்டுகிறது. திருக்குறள் தெளிந்து மனமும், வள்ளிய அறிவும், திண்ணிய நெஞ்சும், நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றி நமக்கு தந்துள்ளார். அதனைப் படித்து அதன்படி நடந்து பயன்பெற வேண்டும்" என்கிறார் த.கோ. சம்பந்தம். பெண்ணாடம் குறள் ஆய்வுமையத்தின் பணிகள் மென்மேலும் வளர வாழ்த்துவோம். வளரட்டும் தமிழ்பணி, செழிக்கட்டும் குறள்நெறி. இதே மையத்தின் மூலம் சாவிக்கொத்து, அன்பளிப்பு கவர்கள் உள்பட அனைத்தும் வள்ளுவர் படம் பொருத்தி தயாரித்து, குறைந்த விலையில் அளித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT