ADVERTISEMENT

"தனித்துப் போட்டியிடும் துணிச்சல் எங்கிருந்து வந்தது?" - சீமான் சிறப்புப் பேட்டி...

05:42 PM Mar 24, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தேர்தல் களத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுமே தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியைத் தனித்துப் போட்டியிட வைக்கும் துணிச்சல் சீமானுக்கு எங்கிருந்து வந்தது?

ஈழத்தில் தமிழ் மக்களுக்காகப் பல்வேறு அமைப்புகள் போராடிய நிலையில், அந்த அமைப்புகளில் இணைந்து செயலாற்றாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை 22 வயதில் கட்டமைத்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் எமது தேசியத் தலைவர் பிரபாகரன். "எங்கு நேர்மை இருக்கிறதோ அதனை மக்கள் தன்னெழுச்சியாக ஆதரிப்பார்கள்' என்பது அவரது சிந்தனை. அவரது சிந்தனையில் ஊறிப்போன எங்களுக்கு நேர்மைதான் இலக்கு. அதுதான் இந்த துணிச்சலை தந்திருக்கிறது.

தனித்துப் போட்டி என்பதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் பின்புலம் இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே?

பெரியாரிசம், மார்க்சியம், அம்பேத்கரியம் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பவன் நான். காங்கிரஸ், எமது இனத்தின் எதிரி; பா.ஜ.க., மனித குலத்தின் எதிரி என்று பொதுவாழ்க்கையில் நான் நுழைந்ததிலிருந்தே முழக்கமிட்டு வருபவன். இப்படி எதிர்க்க தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு தைரியம் உண்டா? பா.ஜ.க.வையும் ஆர்.எஸ்.எஸ்.சையும் என்னைப் போன்று எதிர்த்ததும் எதிர்ப்பதும் யாரும் கிடையாது. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் என்னைக் கண்டு அச்சம். அவர்கள்தான் இப்படிப்பட்ட பொய்ச் செய்திகளைப் பரப்புகின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உங்களுக்கு இடமில்லை என அவர்கள் கைவிரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?

பலவீனமான மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை நான் முன்னெடுத்திருக்கிறேன். இதில் சமரசங்களுக்கு இடமே இல்லை. அத்தகைய போராட்டங்களுக்கு முழுமையான சுதந்திரம் தேவை. நான், பலம் வாய்ந்த கட்சிகளுடன் இணைந்தால் என் சுயத்தையும் சுதந்திரத்தையும் இழப்பேன். அது ஒடுக்கப்பட்ட -விளிம்பு நிலை மக்களுக்கு உதவாது. இதுதான் என் கோட்பாடு. அப்படியிருக்கையில், அ.தி.மு.க.-தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க நான் முயன்றதுபோல சொல்வது கேலிக்கூத்து. என்னைப் பல்வேறு வழிகளில் அக்கட்சிகள் அழைத்தன; நான்தான் அக்கட்சிகளைப் புறக்கணித்தேன்.

திராவிடக் கட்சிகளை வீழ்த்தத் துடிக்கும் நீங்கள், அதே சிந்தனையிலுள்ள கமல்ஹாசனோடு அல்லது டி.டி.வி.தினகரனோடு கூட்டணி அமைத்திருக்கலாமே?

கமல்ஹாசனையோ தினகரனையோ முதல்வராக்குவது என்னுடைய இலக்கு அல்ல! அதற்காகவும் நான் பொதுவாழ்க்கைக்கு வரவில்லை! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.86 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கமலின் மக்கள் நீதி மய்யம் 3.66 சதவீத வாக்குகளை வாங்கியுள்ளது. ஒப்பீட்டளவில் இதில் யார் பெரியவர்? நான்தானே! பிறகெதற்கு அவருடன் நான் கூட்டணி வைக்க வேண்டும்?

தேர்தல் அரசியலில் வெற்றி என்பதுதான் முக்கியம். அதனால்தான் வெற்றிபெற வாய்ப்புள்ளவர்களை வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன. ஆனால், வேட்பாளர்கள் தேர்வில் சரிபாதி எண்ணிக்கையில் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் நீங்கள் வாய்ப்புகள் தந்திருக்கிறீர்களே?

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என வாய்கிழியப் பேசும் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகள், தேர்தல் அரசியலில் பெண்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை தருவதே இல்லை. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பெண்ணிய விடுதலையும் பாலின சமத்துவத்தையும் உதட்டளவில் பேசுபொருளாக வைத்திருக்கிறார்களே தவிர, முழுமையாக செயலாக்கம் செய்ய நினைக்கவில்லை. தமிழீழ தாயகத்தில் ஆண்-பெண் சமத்துவத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாக நிறுவிக் காட்டிய தேசியத் தலைவர் பிரபாகரனின், அடிச்சுவட்டில் அவரது பிள்ளைகள் தமிழகத்தில் செயல்படுத்த அணியமாகி நிற்கிறோம். அந்தவகையில், நாங்கள் பாலினச் சமத்துவத்தை சமரசமின்றி தருவோம் என்பதற்கான அடையாளம்தான் 50 சதவீத எண்ணிக்கையில் பெண்களுக்கான ஒதுக்கீடு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனைச் சட்டமாக்குவோம். அதேபோல, இங்கு இந்தியம் பேச, திராவிடம் பேச கட்சிகள் இருக்கின்றன. சாதிக்கு ஒரு கட்சியும், மதத்திற்கு ஒரு கட்சியும் கூட இருக்கிறது. ஆனால், தமிழன் என்கிற பெருமைமிக்க தேசிய இனத்திற்கென்று ஒரு அரசியல் இயக்கமோ, மக்கள் பெரும்படையோ இல்லை. அப்படி ஒரு பெரும்படையை கட்டி எழுப்பியிருக்கிறோம். அந்தவகையில், பொதுத்தொகுதிகளில் ஆதித்தமிழர் குடிகளைச் (தாழ்த்தப்பட்ட சமூகம்) சேர்ந்த 16 பேரை நிறுத்தியிருக்கிறோம். தமிழ்ச்சமூகத்தில் நிராகரிக்கப்பட்ட சமூகங்களான குயவர்கள், சலவைத் தொழிலாளரான வண்ணார், முடி திருத்தும் நாவிதர், குறவர்கள், கோவில்களில் வழிபாடு நடத்தும் பண்டாரம் போன்ற தமிழ்க்குடிகளுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத்தர அவர்களைத் தேடித் தேடிப் பிடித்துத் தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளில் இதனைத் திராவிடக் கட்சிகள் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்ததில்லை; செய்யப் போவதுமில்லை என்பதால்தான் நாம் தமிழர் கட்சி செய்கிறது.

தமிழ்த்தேச விடுதலைக்கான அரசியலை உயர்த்திப் பிடிக்கும் உங்களால், தேர்தல் அரசியலில் அதனை சமரசமின்றி சாத்தியப்படுத்த முடியுமா?

தமிழன் என்கிற உணர்வுடன் இனத்திற்கான அரசியலை செய்கிறபோது இது சாத்தியமாகும். அத்தகைய கட்டமைப்புடன் நாங்கள் இயங்குவதால், தமிழ்த்தேச விடுதலைக்கான அரசியலை தேர்தல் அரசியல் வெற்றியுடன் வென்றெடுக்க முடியும்.

சீமான் முன்னிறுத்தும் மாற்று அரசியல் என்பது ஆட்சி மாற்றமா? அரசியல் மாற்றமா? எது இன்றைய தேவை?

ஆட்சிக் கட்டிலில் இருந்து ஆட்களை மாற்றுவதல்ல நாங்கள் விரும்பும் அரசியல். அடிப்படையிலான அரசியல் மாற்றம்தான் எங்களுடைய கோட்பாடு. அரசியல் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அடிப்படையிலான குடியரசுக் கட்டமைப்பில் மாற்றம் வேண்டும்.

தி.மு.க.-அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கான இலவசங்களும் புதிய அறிவிப்புகளும் தூக்கலாக இருக்கின்றனவே?

மக்களிடம் கடந்த கால காயமோ, எதிர்கால கனவோ இல்லை. நிகழ்காலத் தேவை மட்டும்தான் இருக்கிறது. நீண்டகாலமாக வறுமையும் அறியாமையும் உளவியல்ரீதியாக அவர்களை தாக்கியிருக்கும் சூழலில், அவர்களுக்கான இலவசம் என்பது தவறல்ல. ஆனால், ஏற்கனவே 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கும் ஆட்சியாளர்கள், இலவசங்களுக்கான நிதியை எங்கேயிருந்து கொண்டு வருவார்கள்? அதனால், இலவசம் என்பது ஏமாற்று வித்தையாக இருக்கக்கூடாது. முந்தைய தேர்தல்களில் நாங்கள் முன்வைத்த பல திட்டங்களை திமுக தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறது. குறிப்பாக ஆடு-மாடு மேய்த்தலை ஒரு தொழிலாக அங்கீகரிப்போம் என்றோம். என்னைப் பார்த்து கேலி செய்தது தி.மு.க. இன்றைக்கு அவர்களின் தேர்தல் அறிக்கையில் ஆடு-மாடு குறித்துச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தி.மு.க., இப்போது என்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். ஆஹா, ஓஹோ என அறிவிப்புகளை அள்ளி வீசியுள்ள தி.மு.க.வும் அ.தி.மு.க.வும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்துவோம்; டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்' என ஏன் அறிவிக்கவில்லை?

நாம் தமிழர் கட்சிக்கான வெற்றி வாய்ப்புகளை எப்படி கணக்கிட்டிருக்கிறீர்கள்?

தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி இந்த முறை 15 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும். அந்த நம்பிக்கையை மக்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். நாங்கள் மக்களின் வேட்பாளர்கள். இந்தத் தேர்தலில் மாற்று அரசியலுக்கான முடிவை மக்கள் எடுத்துள்ளனர். அந்த வாய்ப்பை விவசாயிக்கு (நாம் தமிழர் கட்சியின் சின்னம்) தருவார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT