ADVERTISEMENT

தமிழக அரசாணையால் மோடி ஷாக்!

03:37 PM Jul 08, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

சாத்தான்குளம் காவல் துறையினர் நடத்திய இரட்டைப் படுகொலை பற்றி உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட்டை சீரியஸாகக் கையாள்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

தேசிய அளவிலான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க 30-ந்தேதி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல், மத்திய உள்துறையின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். எல்லை விவகாரம் தொடங்கி, மாநிலங்களின் செயல்பாடுகள் வரையிலான ஆலோசனைகளில் தமிழகத்தின் சாத்தான்குளம் இரட்டைக் கொலைக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, "சாத்தான்குளம் இரட்டைக் கொலைக்கு தமிழக போலீஸாரின் ப்ரூட்டல் அட்டாக்தான் காரணம். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து நிலையப் போலீஸார் மீதும் மக்களுக்கு பயம் இருக்கிறது. போலீஸ் ஸ்டேசன்கள் அனைத்தும் கட்டப்பஞ்சாயத்து கூடாரங்களாக மாறி, அப்பாவிகளுக்கு எதிராக நிறைய கொடுமைகள் நடந்துள்ளன. சாதி ரீதியிலான காவல் துறையினர் நியமிக்கப்படுவதால் மாற்று சமூகம் ஒருவித அச்சத்திலேயே வாழும் நிலை உள்ளது. இரட்டைக் கொலையில் சம்மந்தப்பட்ட காவல்துறையினரை பாதுகாக்க திட்டமிடுகிறது தமிழக அரசு. தமிழக உள்துறையில் மத்திய அரசு தலையிட வேண்டும்'' என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருப்பதாக மோடியிடம் விவரித்துள்ளார் அமீத்ஷா.

இரட்டை மரணம் குறித்து தமிழக உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி.யு.ம். அறிக்கை அனுப்பியிருக்கிறார்களா என மோடி கேட்டதற்கு, இல்லை என அமித்ஷா சொல்லியிருக்கிறார். அப்போது, கடந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தில் நடந்துள்ள லாக் அப் மரணங்கள், சிறை மரணங்கள், தாக்குதல்கள் மற்றும் தமிழக காவல்துறைக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் சேகரிக்குமாறு உளவுத்துறைக்கு உத்தரவிடுங்கள் என அமித்ஷாவிடம் கேட்டுக்கொண்டார் மோடி.

இந்தச் சமயத்தில் பிரதமரிடம் பேசிய மத்திய உள்துறைச் செயலாளர், காவல்துறையின் அராஜகங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், காவல்துறையைச் சீர்திருத்த வேண்டிய கட்டாயத்தையும், அதன்படி சில வழிகாட்டுதல்களையும் ஒவ்வொரு மாநில அரசும் பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, கடந்த 2006-இல் ஒரு ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். அந்த ஜட்ஜ்மெண்டுக்கு எதிராக தமிழக அரசு ஒரு அரசாணையைப் பிறப்பித்து மொத்த அதிகாரத்தையும் காவல் துறையிடமே கொடுத்துள்ளது. இதனால்தான் மக்களுக்கு எதிரான போலீஸ் ஸ்டேசன் வன்முறைகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை. போலீஸ் வன்முறையாளர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இது, மோடிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இதனால், சாத்தான்குளம் படுகொலையில் சில அதிரடி முடிவுகளை அமித்ஷா எடுப்பார் எனத் தெரிகிறது’’ என்கின்றன டெல்லி தகவல்கள்.

காவல்துறையில் சீர்திருத்தம் வேண்டி தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் அட்வகேட் செந்தில்குமார் ஆதித்தனிடம் பேசியபோது, "காவல்துறையைச் சீர்திருத்த வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்திய உச்சநீதிமன்றம், போலீஸ் கம்ப்ளைண்ட் அத்தாரிட்டி என்கிற ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை சேர்மனாக நியமித்து அவரது தலைமையில் மாநில அளவிலான கமிட்டியும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியைச் சேர்மனாக நியமித்து அவரது தலைமையில் மாவட்ட கமிட்டியும் அமைக்க வேண்டும் என ஒரு ஜட்ஜ்மெண்டை கொடுத்துள்ளது. இந்தத் தீர்ப்பைக் கடந்த 2006 நவம்பரில் வழங்கியது உச்சநீதிமன்றம். பல மாநிலங்கள் இதனை உடனடியாக நிறைவேற்றின. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கிடப்பில் போட்டன. 2013 வரை இப்படியே இருந்த சூழலில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களைப் பற்றி கவலை தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக பிறப்பித்த அரசாணையில், மாநில அளவிலான கமிட்டிக்கு உள்துறைச் செயலாளர் சேர்மனாகவும், அவருக்குக் கீழே கமிட்டி உறுப்பினர்களாக டி.ஜி.பி.யும் சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பியும் இருப்பார்கள். டி.எஸ்.பி.க்கு மேலே உள்ள அதிகாரிகள் மீது வரும் புகார்களை இந்தக் கமிட்டி விசாரிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்தின் கலெக்டர், மாவட்ட கமிட்டிக்கு சேர்மனாகவும், போலீஸ் எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பி. ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். டி.எஸ்.பி மற்றும் அவருக்குக் கீழே உள்ள போலீஸாருக்கு எதிரான குற்றங்களை இந்த மாவட்ட கமிட்டி விசாரிக்கும்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு மாறாக, காவல்துறையினரைப் பாதுகாக்கும் வகையில், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்டு கமிட்டியை உருவாக்கினார் ஜெயலலிதா. காவல்துறையினருக்கு எதிரான குற்றங்களை அரசு அதிகாரிகள் விசாரித்தால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

உள்துறைச் செயலாளரும் மாவட்ட கலெக்டரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருப்பதால், காவல்துறையினருக்கு எதிரான குற்றங்களில் அவர்களுக்கு எதிராக எப்படித் தீர்ப்பளிப்பார்கள்? காவல்துறையை நம்பியே முதலமைச்சர்கள் இருப்பதால் போலீசுக்கு பாதகமான எந்த ஒரு தீர்ப்பையும் தமிழக அரசு அமல்படுத்தாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப்போக வைக்க தற்காலிக கமிட்டியை மாற்றியமைத்தார் ஜெயலலிதா.

இதனை, தற்போதைய எடப்பாடி அரசும் கடந்த 2019-இல் புதுப்பித்து ஆணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கமிட்டி உருவானால்தால் காவல்துறையின் அராஜகம் கட்டுக்குள் வரும். இல்லையேல் அராஜக போலீஸ்காரர்களை தண்டிக்கவே முடியாது. அதேபோல, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. அவர்களைக் கொண்டு அப்பாவிகள் மீது தேர்ட் டிகிரி ட்ரீமெண்டை நடத்துகிறது. ஜெயலலிதா உருவாக்கிய அரசாணைக்கு தற்போதைய முதல்வர் எடப்பாடியும் வலிமை சேர்த்திருப்பதால்தான், சாதாரண ஒரு போலீஸ்காரர், நீதிபதியைப் பார்த்து, "உன்னால் ஒன்னும் பண்ண முடியாதுடா" எனத் துணிச்சலாகப் பேச முடிகிறது'' என விரிவாகப் பேசினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத்தான் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் கையிலெடுத்து எடப்பாடி அரசுக்குக் கிடுக்கிப்பிடி போட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், காவல்துறையைக் கைக்குள் வைத்திருக்கும் தனக்கு எதிராக தமிழகத்திலும் மத்திய அரசிலும் அதிகரித்து வரும் எதிர்ப்புகளிலிருந்து தப்பிக்க வழி தேடியிருக்கிறார் எடப்பாடி. இது குறித்து உயரதிகாரிகளிடமும், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களிடமும் அவர் விவாதிக்க, அப்போது கொடுக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில்தான் சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும் முடிவை எடுத்ததால், பிரச்சினை அமுங்கிவிடும் என நம்புகிறார் எடப்பாடி.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவசகாயத்திடம் கேட்ட போது, "சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறையினர்தான் குற்றவாளிகள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஐ.பி.சி.யின் 302 ஆவது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே அல்லது சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டிய வழக்காக இருப்பின் அதனை சி.பி.ஐ.க்கு மாற்றலாம். இந்த வழக்கு அப்படிப்பட்டதல்ல. பிறகு எதற்கு சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்? யாரைப் பாதுகாக்க இந்த முடிவு? ஊழல் மற்றும் அநியாய நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை மற்றும் சிவில் அதிகாரிகள்தான் சாத்தான்குளம் சம்பவத்துக்கு அடிப்படை. அதனால்தான் நீதித்துறையைக் கூட காவல்துறையால் மிரட்ட முடிகிறது. தற்போதைய ஆட்சியாளர்களால் ஒரு ஆபத்தான சூழலில் சிக்கியிருக்கிறது தமிழகம்'' என்கிறார் அழுத்தமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT