ADVERTISEMENT

"யாரிடமும் சசிகலா எதுவும் பேசுவதில்லை"...சசிகலா விடுதலை ஆவாரா?

10:43 AM Oct 10, 2019 | Anonymous (not verified)

"சிறையில் இருக்கும் சசிகலா "யாருடனும் நான் பேச விரும்பவில்லை' என்கிற ஜென் தவநிலைக்குச் சென்றுவிட்டார்' என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள். டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் வழக்கறிஞர்கள் என யாரிடமும் சசிகலா எதுவும் பேசுவதில்லை. "யாரையும் நம்பமுடியவில்லை, என்னிடத்தில் ஒன்று பேசுகிறார்கள், வெளியில் ஒன்று பேசுகிறார்கள்' என வருத்தப்படுகிறார் சசிகலா.

ADVERTISEMENT



"சிறையில் உடனிருக்கும் சுதாகரனிடம்கூட முகம்கொடுத்துப் பேசுவதில்லை. விவேக் கூட தனது அம்மா இளவரசியிடம் தான் அதிகம் பேசுகிறார். இளவரசி மூலமாகத்தான் சசிகலாவின் மூடை அறிந்துகொள்கிறார். டி.டி.வி. தினகரன் நிலை படுமோசம். முக்கால்மணி நேரம் சந்தித்தாலும் தினகரன் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் சசியிடமிருந்து பதில் ஏதும் வருவதில்லை. அதனால் வழக்கறிஞர்களை விட்டு தினகரன் தூண்டில் போட முயற்சிக்கிறார். ஆனால் வழக்கறிஞர்களிடமும் சசிகலா வாய் திறப்பதில்லை. தினகரனால் இளவரசியிடம் பேச முடியாது. அதனால் சசிகலாவின் எண்ண ஓட்டம் என்னவென்று தெரியாமல் தவிக்கிறார் என்கிறது சொந்தபந்தம்.

ADVERTISEMENT



சமீபத்தில் மன்னார்குடி குடும்பத்தில் பெரிய சூறாவளி ஒன்று அடித்தது. அது சசிகலாவின் உறவினரான பண்ணைவயல் பாஸ்கரை அ.ம.மு.க.வின் அமைப்புச் செயலாளராக்கிய விவகாரம். தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரரான டாக்டர் வெங்கடேசனின் மனைவி ஹேமா. இவரது அப்பாதான் பண்ணைவயல் பாஸ்கர். இவர்மீது "எம்.பி. சீட் வாங்கித் தருகிறேன், அ.தி.மு.க.வில் பதவி வாங்கித் தருகிறேன்' என ஏமாற்றியதாக ஏகப்பட்ட மோசடிப் புகார்கள் எழுந்தன. அதனால் ஜெ.வும், சசியும் ஒருகட்டத்தில் கைது செய்யவே தயாரானார்கள். "அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி எப்படி கொடுக்கலாம்? எல்லாம் அனுராதாவின் திருவிளையாடல் என மன்னார்குடி குடும்பத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது பெங்களூரு சிறை வரை எதிரொலித்தது. திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோருக்கு எந்தப் பதவியும் தர மறுத்தார் தினகரன். ஆனால் "அனுராதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால் அமைப்புச் செயலாளர் பதவி எப்படித் தரலாம் என விவேக் எழுப்பிய கேள்விக்கு "அவங்க செய்றாங்க, அதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?' என நழுவும் பதிலையே சொல்லியிருக்கிறார் சசிகலா.



அதேபோல் கர்நாடக புகழேந்தி, சசிகலாவுக்கு நெருக்கமானவர். "ஜெ.வுக்கு ஜாமீன் வழங்க ஏற்பாடு செய்தவன்' எனச் சொல்பவர். அதேபோல் சசிகலாவின் உறவினர் என்ற பெயரில் சசிகலாவை சந்திப்பவர். லேட்டஸ்ட்டாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, சசியை சந்தித்தபோது, உடன் சந்தித்துப் பேசியவர். இவ்வளவு நெருக்கமானவர் தினகரனிடம் அமைப்புச் செயலாளர் பதவி கேட்டார், அதை அவருக்குத் தரமறுத்தார். அவர் தினகரனுக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கிறார். கோவையில் அ.ம.மு.க. பெயரில் கூட்டத்தினைக் கூட்டி ஏகத்துக்கும் தினகரனைத் திட்டினார். "தினகரனுடன் வந்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்காலம் காணாமல் போய்விட்டது. தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவேண்டும். தினகரன் என்னை அ.ம.மு.க.வை விட்டு நீக்க முடியாது. அந்தக் கட்சியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன்' என வெளிப்படையாகவே பேசிவருகிறார். "சசிகலா, புகழேந்தியை ஆதரிக்கிறார். புகழேந்தியை கட்சியை விட்டு நீக்க வேண்டாமென்று உத்தரவிட்டார்' என செய்திகள் மன்னார்குடி வட்டாரங்களில் இருந்தே கசியவிடப்பட்டன. அதேநேரத்தில் புகழேந்தி, தினகரனை விமர்சித்துப் பேசும் ரகசிய வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர், "அ.தி.மு.க.வில் சேர புகழேந்தி திட்டமிடுகிறார். அவரை அ.தி.மு.க. அமைச்சர்கள் ஆட்டுவிக்கிறார்கள். அந்தப் பூனைக்குட்டி வெளியேவரும். அது தொடர்பான ரகசிய வீடியோக்கள் அ.ம.மு.க.வின் வழக்கமான ஸ்டைலில் வெளியேவரும், பொறுத்திருங்கள்'' என்கிறார். இந்த விவகாரம் பற்றியும் சசிகலா ஒன்றும் பேசவில்லை. புகழேந்தி, அ.ம.மு.க.வை விட்டுப் போவது பற்றியோ, புகழேந்தி, தினகரனுக்கு எதிராகப் பேசுவது பற்றியோ ஒன்றும் பேசவில்லை என்கிறது மன்னார்குடி வட்டாரம்.


"சசிகலா முன்பு இப்படி இல்லை. தன்னை சந்தித்த நெருங்கிய உறவினர்களிடம் "அ.தி.மு.க. ஒன்றுசேர வேண்டும். எடப்பாடியும் ஓ.பி.யும் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டும். பழையபடி அ.தி.மு.க. வலுப்பெற வேண்டும்' என பேசிவந்தார். அதன்பிறகு அ.ம.மு.க. உருவானது. அடுத்தமாதம் தேர்தல் கமிஷன் அறிவித்த ஒருமாத காலக்கெடுவுக்குப் பிறகு அந்தக் கட்சிக்கு நிரந்தரச் சின்னம் கிடைத்தது.

அ.தி.மு.க.வைப் போலவே அ.ம.மு.க.வையும் நிரந்தரக் கட்சியாக தினகரன் மாற்றிவிட்டார். இதில் யார் பக்கம் சசிகலா நிற்பார். சசி நிச்சயம் எங்கள் பக்கம்தான் நிற்பார். சசிகலாவை, எடப்பாடி கட்சியை விட்டு நீக்கினார். கணவர் நடராஜன் சாவுக்கு சசிகலா வந்தபோது ஏகப்பட்ட பிரச்சினைகள் செய்தார் எடப்பாடி. 16-ஆவது நாள் காரியத்துக்கும் வரவிவில்லை. எடப்பாடியுடன் சசிகலா சேரமாட்டார். அவர் அ.ம.மு.க. பக்கம்தான் வருவார். சசிகலா வெளியே வந்து எங்களை ஆதரித்தால் அ.தி.மு.க.வினர் பலர் அ.ம.மு.க.விற்கு வருவார்கள் என அடித்துச் சொல்கிறார்கள் அ.ம.மு.க.வினர். சசிகலா அ.தி.மு.க. பக்கம் வருவதையோ, அவர் அ.தி.மு.க. தலைமையை ஏற்பதையோ அ.தி.மு.க.வினர் விரும்பவில்லை'' என்கிறார்கள் அமைச்சர்கள்.


எடப்பாடி நூறு சதவிகிதம் சசியை ஏற்கிறார். ஓ.பி.எஸ்.ஸுக்கு மட்டும் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. வெளியே வரும் சசிகலா, சிக்கிம் முதல்வர் பாணியில் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர், அவர்மீது வழக்குப் போடப்பட்ட ஒரு வருடத்தில் "மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள், 6 வருடம் தேர்தலில் போட்டியிடத் தடை என திருத்தம் செய்யப்படவில்லை' என விலக்கு பெற்றுள்ளார். அதே 96-ஆம் வருடம் ஊழல் வழக்குப் போடப்பட்ட தனக்கும் பொருந்தும் என மனு போட சசி தயாராகி வருகிறார். "அ.தி.மு.க., அ.ம.மு.க. என எதுவாக இருந்தாலும் சரி... நான் அரசியல் களத்தில் குதிப்பேன்' என சசி விடுதலையை நோக்கி காத்திருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT