ADVERTISEMENT

சர்கார் பேச்சைக் கேட்டு இலவசங்களை விட்டெறியலாமா?

10:11 AM Nov 09, 2018 | kumaresanfreelancer

ADVERTISEMENT



ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ள எரிச்சல், கதை தொடர்பாக நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்பட்ட வழக்கு, 1,300 ரூபாய் வரையில் போன டிக்கட் விலை, கெடுபிடிகளை மீறி சட்டவிரோதமாகத் திரையரங்கப் பதிவை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளதாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ மீதான குற்றச்சாட்டு… இப்படியான சூழல்களோடு ‘சர்கார்’ திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. படத்தின் மையக் கருத்தாகச் சொல்லப்படும் கள்ள ஓட்டு தொடர்பான தேர்தல் சட்டத்தின் ‘49-பி’ பிரிவு பற்றிய தகவல், அரசியல் பின்னணி இல்லாத சமூக சேவகர்களை வேட்பாளர்களாக்குகிற அரசியல், சமூக ஊடகங்களின் பயன்பாடு ஆகியவற்றைத் தாண்டி ஒரு நுட்பமான செய்தி இருக்கிறது. படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளப்பிவிடப்பட்டுள்ள போதிலும் உண்மையிலேயே சர்ச்சைக்குரிய செய்தி அதுதான்.

ADVERTISEMENT


கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கிற விலையில்லாப் பொருள்கள் உள்ளிட்ட இலவசத் திட்டங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று படம் போதிக்கிறது. எழுச்சியடையும் மக்கள் தாங்கள் பெற்ற மிக்ஸி, கிரைண்டர், டிவி போன்ற இலவசப் பொருட்களைக் குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள். அது ஒரு சுயமரியாதைச் செயல் என்பதாக சித்தரிக்கப்படுகிறது.


பொதுவாகவே அரசின் இலவசங்கள் பற்றி இரண்டு வகையான எதிர்மறைக் கருத்துகள் சொல்லப்பட்டு வந்துள்ளன. ஒன்று, அவை மக்களின் வரிப்பணத்திலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கே வழங்கப்படுகின்றன என்ற கருத்து. இன்னொன்று, இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளுக்காக வாக்குப் பதிவு செய்து, பின்னர் அந்த இலவசங்களை ஏற்பதன் மூலம் மக்கள் தங்கள் தன்மானத்தை அடகுவைக்கிறார்கள் என்ற கருத்து. முதல் கருத்தின் இணைப்புக் கருத்தாக, மாநில அளவில் விநியோகிப்பதற்கான அந்த இலவசப் பொருள்களைத் தயாரிப்பாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதில் பெரும் ஊழல் நடக்கிறது, அதன் மூலமாகவும் மக்கள் பணம் கடத்தப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இலவசங்களை ஏற்பது அந்த முறைகேடுகளுக்கு உடந்தையாவது போன்ற செயல்தான் என்பார்கள். இலவசங்களால் மக்கள் சோம்பேறியாக்கப்படுகிறார்கள் என்பவர்களும் உண்டு.




இருவகை இலவசங்கள்

இரண்டு வகையான இலவச விநியோகங்கள் இருக்கின்றன. முதலாவது, தேர்தல் களத்திற்கு வருகிற கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு என்னென்ன இலவசமாகக் கிடைக்கச் செய்வோம் என்று தேர்தல் அறிக்கைகளில் சட்டப்பூர்வமாகவே அறிவிப்பது. இரண்டாவது, வாக்குப் பதிவுக்கு முன்பாக, வீடுவீடாகத் தேடிச் சென்று ஆரத்திக் காசு போடுவது முதல், செய்திப் பத்திரிகைகளுக்கு ஊடாகப் பணத்தாள்களை வைப்பது வரையில், குறிப்பிட்ட கடைகளுக்குப் போய் விலைகொடுக்காமல் பெற்றுக்கொள்வதற்கான அடையாளச் சீட்டுகளை வழங்குவது வரையில் இலவசமாகத் தருவது.


கட்சிகளோ வேட்பாளர்களோ வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு வாகனங்களில் அழைத்துவருவதே குற்றம் என்கிறது தேர்தல் சட்டம். வாக்குப் பதிவுக்கு முன் இவ்வாறு பணமும் பொருளும் தருவது ஜனநாயகத்திற்குச் செய்யப்படும் கொடூரமான அவமானம் என்பதை மறுப்பதற்கில்லை. அதை ஏற்கிறவர்கள், பின்னர் அந்தப் பிரதிநிதிகளை எதற்காகவும் தட்டிக்கேட்க முடியாதவர்களாகிறார்கள். ஏனென்றால் அந்தப் பிரதிநிதிகள் அந்த மக்களுடைய வாக்குரிமையை விலைகொடுத்து வாங்கிய உடைமையாளர்களாகிறார்கள். உங்களிடமுள்ள பொருளை ஒருவர் விலைபேசி வாங்கிய பிறகு, அதற்குப் பேசிய விலையை அவர் கொடுத்துவிட்ட பிறகு, அவரை உங்களால் கேள்வி கேட்க முடியாதல்லவா? ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள் என்பது அழகிய கருத்தாக்கம். ஆனால் வாக்குரிமையை விலைக்கு வாங்கியவர்கள் இங்கே எசமானர்களாகிறார்கள்.


மேலும், இது போட்டிக்களத்தில் சமநிலை இல்லாமல் செய்கிறது. விலைகொடுக்க இயலாத, விலைகொடுக்க விரும்பாத கட்சிகளும் வேட்பாளர்களும் எவ்வளவு நியாயமான கொள்கைகளைப் பேசினாலும் எடுத்து எடுப்பிலேயே பின்னுக்குத் தள்ளப்படுகிற அவலம் நடைபெறுகிறது. ஆகவேதான், இப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகிறபோது, குறிப்பாக இடைத்தேர்தல் வருகிறபோது, இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் கறாரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதை ஒப்புக்கொள்கிற ஆணையம் எந்த அளவுக்கு வலுவாக அந்த முறைகேடுகளைத் தடுக்கிறது என்ற காட்சிகள் வேடிக்கையாகவும் இருக்கிறது.


அது வேறு, இது வேறு

இதை, தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்படும் வாக்குறுதிகளோடு ஒப்பிடுவதற்கில்லை. ஒரு வகையில் அது கட்சிகளின் ஆட்சிக் கொள்கை தொடர்பான அறிவிப்பேயாகும். அது, தொழில் வளர்ச்சி, விவசாய முதலீடு, சிறுதொழில் ஊக்குவிப்பு, கல்வி மேம்பாடு, உள்கட்டுமானங்கள் போன்ற திட்டங்களாகவும் இருக்கலாம். வாழ்க்கைக்கு உதவுகிற பொருள்களை நேரடியாக வழங்குவதாகவும் இருக்கலாம். நாட்டின் அரசமைப்பு சாசனத்திற்கு உட்பட்டதாக இருக்கிற வரையில் இதில் தேர்தல் ஆணையமோ, நீதிமன்றமோ தலையிட முடியாது. தலையிடக் கூடாது. இன்னின்ன வாக்குறுதிகளைத்தான் அளிக்கலாம், இப்படிப்பட்ட வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது என்று ஆணையமோ நீதிமன்றமோ கட்டளையிட முடியாது, கட்டளையிடக்கூடாது.






ஒரு கட்சி அளிக்கிற வாக்குறுதி நம்பமுடியாதது என்று விமர்சிப்பது அதற்கு எதிரான கட்சியின் வேலை. எதை நம்பலாம் எதை நம்பலாகாது என்று முடிவு செய்வது இறுதியாக வாக்காளர் அதிகாரம். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் வண்ணத்தொலைக்காட்சி, இருசக்கர வாகனம் போன்ற இலவசப் பொருள்களை அறிவித்ததைத் தொடர்ந்து ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றம், கட்சிகள் அறிவிக்கக்கூடிய எந்தத் திட்டத்தை வேண்டுமானாலும் இலவசத் திட்டம் என விளக்கமளிக்கலாம் என்பதால், இலவச வழங்கல்கள் பற்றி அறிவிக்கவே கூடாது என்று ஆணையிட முடியாது என்று கூறி ஒதுங்கிக்கொண்டது. அதேவேளையில், தேர்தல் அறிக்கைகள் எப்படி இருக்கலாம் என்ற ஒரு வழிகாட்டல் நெறிகளை ஆணையம் உருவாக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியது.


அந்த ஆலோசனையை ஏற்று 2013ல் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது. ஓரிரு கட்சிகள் தவிர்த்து அதில் கலந்துகொண்ட காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தேசியக் கட்சிகள், திமுக, அதிமுக, தெலுங்குதேசம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அனைத்துமே இலவச வழங்கல்கள் பற்றிய அறிவிப்புகளுக்குத் தடைவிதிக்கக்கூடாது என்று ஒருமித்த குரலில் கூறின. உறுதியளிக்கப்படும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளோடு இணைந்ததுதான் இலவச வழங்கல்களும் என்று வாதிட்டன.


தமிழகக் காட்சி

இலவச வழங்கல்கள் உண்மையிலேயே சமூக மேம்பாட்டோடு தொடர்புள்ளவைதானா? தமிழகத்தில் பொதுவிநியோகக் கடைகள் மூலம் மிகக் குறைந்த விலையில் அரிசி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அது மாதாமாதம் 20 கிலோ வரையில் இலவசம் என்று மாற்றப்பட்டது. குறைந்த விலை என்பதில் அரசின் மானியம் இருப்பதால், அதுவும் ஒரு வகையான இலவசம்தான். இந்த நடவடிக்கை, தங்கள் சொற்ப வருவாயில் பெரும் பகுதியை உணவுக்கே செலவிட்டாக வேண்டிய நிலையில் உள்ள எளிய மக்களுக்கு எவ்வளவு பெரிய ஆறுதல்! இதனால் கையில் தங்குகிற பணத்தைக் குடும்பத்தின் இதர சில முக்கியத் தேவைகளுக்குச் செலவிட முடியும் என்பது எத்தனை நிம்மதி! இதன் சமூகத் தாக்கம் ஆழமானது என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள்.


அதே போல், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், அவை கிடைக்கப்பெற்ற குடும்பங்கள் இனி தங்கள் வீடுகளிலேயே நிகழ்ச்சிகளைக் காணலாம் என்ற நிலையை ஏற்படுத்தி அவர்களுடைய சுயமரியாதையைக் காக்கவே செய்தன. அதைவிட, சினிமாக்கள், சீரியல்கள் ஆகியவற்றோடு அந்த வீடுகளுக்குள் நுழைந்த செய்திகளும், விவாதங்களும் அவர்களது பொதுப்புரிதல்களை விரிவுபடுத்துவதில் பெரும்பங்காற்றியுள்ளன. இன்று அந்த மக்கள் கேள்வி கேட்கக்கூடியவர்களாகத் தலைதூக்கியிருப்பதை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் நுழைவைத் தவிர்த்துவிட்டு ஆராய முடியாது.


பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், பெண் குழந்தைகளுக்கு மிதிவண்டிகள் என்றெல்லாம் கிடைத்ததன் உளவியல் தாக்கங்கள் சிறப்பானவை. இல்லையேல் இவை குறித்த ஏக்கங்களும் உளைச்சல்களுமே அந்தக் குழந்தைகளை அழுத்திக்கொண்டிருந்திருக்கும். என் கையில் இருப்பது சட்டப்படி எனக்குக் கிடைத்திருக்கிறது, எவரும் போட்ட பிச்சையல்ல என்ற சிந்தனை தருகிற விடுதலை உணர்வு மகத்தானது. அவர்களைத் தன்னம்பிக்கையோடு நடைபோட வைப்பது. பள்ளி மாணவர்களுக்கும் முதியோருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் என்பது பெரியதொரு நடமாட்டச் சுதந்திரம். சாதிக்கலப்பு, மதக்கலப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களுக்கு விலையில்லாத் தங்கமும், பண உதவியும் வாழ்க்கைச் சூறாவளியில் அவர்களுக்கொரு அங்கீகாரக் கேடயம்.




சத்துணவாக மாறிய மதிய உணவு உள்ளிட்ட ஒவ்வொரு இலவசத் திட்டமும், அதன் பயனாளிகளான மக்களை அதற்கு முந்தைய சுமைகளிலிருந்து விடுவித்திருக்கின்றன. தொழில் நெருக்கடி, விவசாயம் புறக்கணிப்பு, எங்கும் நீக்கமற ஊடுறுவியிருக்கும் ஊழல், சாதியத்தின் சதிராட்டம், சாதி மத பேதமற்ற பெண்ணடிமைத்தனம் என பல்வேறு பின்னடைவுகள் இங்கே இருக்கின்றன. அதையெல்லாம் மீறி, ஒப்பீட்டளவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகமும் இடம் பிடித்திருக்கிறது என்றால், அதற்கு இத்தகைய இலவசங்களினால் மக்கள் விடுவிக்கப்பட்டதும் ஒரு மையமான காரணம்.


நிலையான, நம்பகமான தீர்வு என்ன என்று கேட்டால், இலவசங்களை எதிர்பார்த்திராமல், மடிக்கணினியோ, சைக்கிளோ, போதுமான உணவு தானியமோ, பேருந்துப் பயணச் சீட்டோ எதுவானாலும், தாங்களே தங்களுக்குத் தேவையானதை சொந்தப் பணத்தைக் கொடுத்துப் பெற்றுக்கொள்கிற மரியாதையான வாழ்கையையும் அதற்கான பொருளாதாரத்தையும் உறுதிப்படுத்துவதுதான். ஆனால், அது உறுதிப்படுகிற வரையில், வசதிக்காரர்களைப் பார்த்து இந்த மக்கள் ஏங்கியிருக்கட்டும், எங்கும் செல்லமுடியாமல் முடங்கிக் கிடக்கட்டும் என்று விட்டுவிடுவது, அவர்களின் தலைவிதிப்படி நடக்கட்டும் என்று கைவிடுகிற ஒரு வன்கொடுமையே. மாற்றங்களை நோக்கிச் செல்வதற்கே இவ்வாறு கைகொடுப்பது தேவைப்படுகிறது – ஏனென்றால், உண்மையில் இது இலவசமல்ல. அவர்களது உழைப்பிலிருந்து கைப்பற்றப்பட்டதில் ஒரு பகுதியை அவர்களிடமே திருப்பித் தருகிற சமூக நீதியும் இதில் இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT