ADVERTISEMENT

சேலம் உருக்காலையை விலைக்கு வாங்கினால்...முனியப்பனுக்கு கிடா வெட்டி பூஜை!

12:08 AM Sep 03, 2019 | santhoshb@nakk…

சேலம் உருக்காலையை வாங்க நினைப்போரும், விற்க நினைப்போரும் ரத்தம் கக்கி சாவார்கள் என்று கஞ்சமலை சித்தர் கூறியதாக ஒரு தகவலை, உருக்காலை தொழிலாளர்கள் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT


பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்கான பூர்வாங்க பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்காக, செயில் நிர்வாகம், உலகளாவிய டெண்டர் கோரி பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல்முறையாக ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவகாசம் அளித்தபோது, ஒருவரும் இந்த ஆலையை வாங்க விண்ணப்பிக்கவில்லை. அதனால் மீண்டும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அவகாசம் வழங்கியது செயில்.

ADVERTISEMENT


அப்போதும், எந்த நிறுவனமும் சேலம் உருக்காலையை ஒப்பந்தம் கேட்டு விண்ணப்பிக்காததால் செயில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இதனால், இரண்டாம் முறையாக டெண்டர் கேட்டு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து இருக்கிறது. 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள உருக்காலை சொத்துகளை வெறும் 4000 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சிப்பதாகவும், ஆலை நட்டத்தில் இயங்குவதாக போலியான சித்திரத்தை மத்திய அரசு உருவாக்குவதாகவும் தொழிற்சங்கங்கள் கூறி வருகின்றன.


உருக்காலையை தனியார்மயமாக்கும் முடிவை எதிர்த்து, தொழிலாளர்கள் கடந்த ஜூலை 5ம் தேதி முதல் போராடி வருகின்றனர். தற்போதுவரை ஆலை நுழைவாயில் முன்பு சுழற்சி முறையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆலையை அடிமாட்டு விலைக்கு தள்ளிவிடும் முடிவில்தான், டெண்டர் கோருவதற்கான அவகாசத்தை மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்படுவதாக ஓர் அய்யத்தை கிளப்பி இருக்கிறார்கள் தொழிற்சங்க நிர்வாகிகள். ஒருவருமே ஆலையை வாங்க வராதபட்சத்தில் அதன் விலைப்புள்ளியை மேலும் குறைப்பதோடு, ஆளும் வர்க்கத்தினருக்கு நெருக்கமான கம்பெனிக்கே ஆலையை கைமாற்றிவிடும் சூழ்ச்சிகளும் நடக்கலாம் என்கிறார்கள்.


இது ஒருபுறம் இருக்க, உருக்காலை தனியார்மயத்தை எதிர்த்து பகுத்தறிவு அடிப்படையிலான விவாதங்களும், சட்டப்போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் பண்பாட்டுத் தளத்திலும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யத் தவறுவதில்லை. திடீரென்று கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, உருக்காலை நுழைவு வாயில் அருகே உள்ள செங்காட்டு முனியப்பன் கோயிலில் ஆட்டுக்கிடாவை பலியிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளனர்.


இரும்புத்தாது வளம்மிக்க பகுதியான கஞ்சமலையில் ஒரு காலத்தில் சித்தர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அங்கிருந்தவர்கள் ரசவாத கலையைக்கூட அறிந்திருந்தார்கள் என நம்பப்படுகிறது. கஞ்சமலை சித்தர் சொன்னதாக, 'உருக்காலையை வாங்குபவனும், அதை விற்க நினைப்பவனும் ரத்தம் காக்கி சாவான்' என்ற தகவலையும் வாட்ஸ்அப் மூலமாக தொழிலாளர்களுக்கும், செயில் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் பகிர்ந்து வருகின்றனர்.


ரத்த பலியிட்டு வேண்டுதல் நடத்தியதும், ரத்தம் கக்கி சாவான் என சாபம் விடுவது போன்ற தகவல்களாலும் ஆலை தனியார்மயத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள தொழிலாளர்கள், அதிகாரிகள் மத்தியில் ஒருவித கிலி ஏற்பட்டுள்ளது. அதேநேரம், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என, கையறு நிலையில் இருக்கும் தொழிலாளர்களின் இத்தகைய நம்பிக்கைகளையும் பகடி செய்து ஒதுக்கிவிடவும் கூடாது.


இதுகுறித்து உருக்காலைத் தொழிலாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், ''ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டிக்கொடுத்த சேலம் உருக்காலையை மீண்டும் பழையபடி லாபப்பாதைக்கு மீட்டெடுக்க முடியும். ஆலைக்குத் தேவையான மின்சாரம் தயாரிப்பதற்கான மின் உற்பத்திக்கூடத்தை இங்கேயே நிறுவுவது, ஆலைக்குச் சொந்தமான காலி நிலங்களில் சிறுதொழிலகங்கள் தொடங்குவது ஆகியவற்றின் மூலம் இந்த ஆலையை லாபகரமாக இயக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களை திட்டமிட்டே நலிவடையச் செய்கின்றன.


நட்டத்தில் இயங்கும் ஒன்றை தனியாரால் லாப பாதைக்கு மீட்டெடுக்க முடியுமெனில் அரசாலும் முடியும் என்பதுதான் அடிப்படை உண்மை. மற்றபடி தனியார்மயம் என்பதெல்லாம் அரசு கஜானாவைவிட, ஆளுங்கட்சிக்காரர்களின் பாக்கெட்டுகளை நிரப்பவே பயன்படும். இங்குள்ள ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எண்ணமும், இந்த ஆலை தனியாருக்கு போய்விடக்கூடாது என்பதுதான். அதனால்தான் மனமுருகி முனியப்பன் கோயிலில் ரத்த பலியிட்டு வேண்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த கோயிலில் வேண்டுதல் வைத்தால் பலிக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது,'' என்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT