ADVERTISEMENT

''இந்தப் பிறப்பே மற்றவர்களுக்கு உதவத்தான்!'' பேரிடர்கள் உருவாக்கிய நாயகன்!! 

08:32 AM May 11, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


''சமுதாயத்தில் பெரிய மனிதர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர் புயலிலும், வெள்ளத்திலும் தத்தளிக்கும் மக்களுக்கு நன்கொடை கேட்டால் பத்து பைசா தர மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான் நான் யாரிடமும் நன்கொடை கேட்பதில்லை, என்னால் முடிந்தவரை நான் ஈட்டும் பொருள் அனைத்தும் இயலாத மக்களுக்குக் கொடுக்கணும்னு முடிவு செஞ்சிட்டேன். அதில்தான் எனக்கு முழு திருப்தியும் கிடைக்கிறது,'' என்கிறார் விஜய்குமார்.

ADVERTISEMENT


வாழ்வில் கொடுந்துயரங்கள் எப்போதும் யாருக்கும் நேரக்கூடாது என்பதே எல்லோரின் விருப்பமாகவும் இருக்கிறது. அத்துயரிலும் ஒருவித நன்மையும் இருக்கிறது. நமக்காக உடன் வருபவர்களைப் பேரிடர்களே அடையாளம் காட்டுகின்றன. அப்படி, இயற்கை பேரிடர்களால் அடையாளம் காட்டப்பட்ட நாயகர்களுள் ஒருவர்தான், விஜய் என்கிற விஜய்குமார் (30).

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம்தான் சொந்த ஊர். பி.ஹெச்டி., முடித்துள்ள விஜய்குமார், ஈரோடு அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகராக (சைக்கியாட்ரிஸ்ட்) பணியாற்றி வருகிறார். ஓர் அரசு ஊழியர் என்பதைக் காட்டிலும், தன்னை ஓர் இயற்கை விவசாயியாக அறியப்படவே விரும்புகிறார். மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்தான் அவருக்கும் ஊக்கி. அதனாலேயே உள்ளூரில் 6 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பகலில் மன நல ஆலோசகர்; மாலை 06.00 மணிக்கு மேல் இயற்கை விவசாயி. இவை மட்டுமே அவரின் அடையாளங்கள் அல்ல.


கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. பொதுமுடக்கம் உள்ள நேரத்தில் காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் என முழுவீச்சில் களத்தில் இறங்கி கடமையாற்றினர். ஊர் காக்கும் அவர்களின் நலன் காக்கவும் களமிறங்கினார் விஜய். நாள்தோறும் வாழப்பாடி, ஏத்தாப்பூர், ஆத்தூர், தலைவாசல் வரை கரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒருவேளை உணவு வழங்குவதைச் சேவையாகச் செய்து வந்தார். சாலையோரத்தில் ஒடுங்கிய வயிறும், ஒட்டிய தேகமுமாக ஆதரவற்றுக் கிடந்தோருக்கும் உணவுப்பொட்டலங்களை வழங்கத் தவறவில்லை.


ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25- ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒரு மாதம் இந்த சேவையை வழங்கினார். நாள்தோறும் 1,200 பேருக்கு உணவு. வெஜிடேபிள் பிரியாணி, தக்காளி, எலுமிச்சை சோறு, தயிர் சோறு என அவருடைய சமையல் கூடத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினுசில் கலவை உணவு தயாரானது. சமையலையும் அவரே செய்கிறார்.

''காவல்துறையினரும், தூய்மைப் பணியாளர்களும் நமக்காகத்தான் நேரங்காலம் பார்க்காமல் பணியாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் சாப்பிட்டார்களா என்று கூட யாரும் கேட்பதில்லை. எனக்குத் தெரிந்து அவர்கள் பசியோடு இருக்கும் நேரத்திற்கு அவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. அதனால்தான் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உணவுப் பொட்டலங்களை வழங்கினேன்.


உணவுக்குத் தேவையான காய்கறிகளை இரவு 11.00 மணியளவில் நறுக்கி வைத்து விடுவேன். அதன்பின்னர் மூன்று மணி நேரம் தூக்கம். அதிகாலை 03.00 மணி முதல் 04.00 மணிக்குள் சமையல் வேலைகளை முடித்து விடுவேன். உணவுப் பொட்டலங்களை ஃபாயில் பெட்டிகளில் பேக்கிங் செய்யும் பணிகளில் பத்து நண்பர்கள் உதவியாக இருந்தனர். காலை பத்து... பத்தரைக்குள் 1,200 உணவுப் பொட்டலங்களையும் விநியோகம் செய்து விடுவோம். அதுதான் பலருக்குக் காலை அல்லது மதிய ஆகாரமாக இருக்கும்,'' என்கிறார் விஜய்குமார்.

உணவு மட்டுமின்றி 2,000 பேருக்கு கபசுர குடிநீர், 3,000 முகக் கவசங்கள், 5,000 கையுறைகளும் வழங்கியிருக்கிறார். உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்காக மட்டும் ஒரே மாதத்தில், தன் சொந்தப்பணம் 2.36 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார் இந்த இளைஞர். மொத்த சேமிப்பும் கரைந்து போய்விடவே, உணவுப் பொட்டலம் விநியோகத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

''உங்கள் சேவைகளைப் பார்த்த பிறகும் யாரும் உங்களுக்கு நன்கொடை அளிக்க முன்வரவில்லையா?,'' எனக் கேட்டோம். ''நல்ல கேள்விதான் அண்ணா. ஆனால், கடந்த காலங்களில் நன்கொடைக்காக சிலரை அணுகியதில் கசப்பான அனுபவங்கள் கிடைத்திருந்தன. எனக்குத் தெரிந்த கோடீஸ்வர சகோதரர்களை ஒரு பேரிடரின்போது நன்கொடைக்காக அணுகினேன். தம்பியிடம் கேட்டால், அண்ணன் வரட்டும் என்பார். அண்ணனிடம் கேட்டால், தம்பியிடம் கேளுங்கள் என்பார். இருவரும் இருக்கும்போது கேட்டபோது, வெறும் 100 ரூபாய் நன்கொடை கொடுத்து அனுப்பினார்கள். நண்பர்கள் சிலருக்கு வேறு வேறிடங்களில் இதுபோன்ற அனுபவங்கள் இருக்கு. அப்போதே முடிவு செய்துவிட்டேன்... உதவி தேவைப்படுவோருக்கு என்னால் முடிந்தவரை என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துவிடுவது என்று.

இங்கே பெரிய மனிதர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர் புயலிலும், வெள்ளத்திலும் தத்தளிக்கும் மக்களுக்கு நன்கொடை கேட்டால் பத்து பைசா தர மாட்டேன்கிறார்கள். அதனால்தான் நான் யாரிடமும் நன்கொடை கேட்பதில்லை. என்னால் முடிந்த வரை நான் ஈட்டும் பொருள் அனைத்தும் இயலாத மக்களுக்கு கொடுக்கணும்னு முடிவு செஞ்சிட்டேன். அதில்தான் எனக்கு முழு மன நிறைவும் கிடைக்கிறது. இந்தப் பிறப்பே மற்றவர்களுக்கு உதவத்தான் என நினைக்கிறேன்.,'' என்கிறார்.

கரோனா நிவாரண உதவிகள் மட்டுமின்றி கடந்த ஈராண்டுக்கு முன், கேரளா மாநில மக்கள் வெள்ளத்தால் தத்தளித்தபோதும், அம்மக்களின் அழுகுரல் அவரை தூங்கச் செய்யவிடவில்லை. நண்பர்கள் இருவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு பத்தினம்திட்டா மாவட்டத்திற்குப் புறப்பட்டு விட்டார். பெண்களுக்கான நைட்டிகள், சேலைகள், சானிடரி நாப்கின்கள் மற்றும் துண்டுகள், லுங்கிகள், பெட்ஷீட், பால் பவுடர், பிஸ்கட் என 2.30 லட்சம் ரூபாய்க்கு, தவிக்கும் மக்களின் தேவையறிந்து பார்த்துப் பார்த்து நிவாரண பொருள்களை நேரில் கொண்டு சென்று வழங்கியிருக்கிறார். ''அப்போதும் யாரிடமும் ஒத்த பைசா வாங்கவில்லை. அத்தனையும் என் வியர்வையில் சேர்த்த காசுண்ணே,'' என்கிறார்.

கேரளா மக்களுக்கே ஓடோடிச் சென்று உதவியவர், கஜா புயலில் வீடிழந்து, அடிப்படை வாழ்விழந்து தவிக்கும் விவசாயிகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருப்பாரா என்ன? கஜா புயல், புதுக்கோட்டை மாவட்டத்தையே புரட்டி எடுத்துவிட்டிருந்த நேரம் அது. சாலைகளில், வயல்வெளிகளில் அத்தனை தென்னை மரங்களும் விழுந்து கிடந்தன. ஊரின் பசிபோக்கிய விவசாயிகள், பசியோடு தவித்துக் கிடந்தார்கள்.


''கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சூரப்பள்ளம் என்ற பகுதி ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்தது. முறிந்து விழுந்த மரங்களை அறுத்தெடுக்க வசதியாக கட்டிங் மெஷின்கள் கொண்டு சென்றேன். அரிசி, மெழுகுவர்த்திகள், கொசுவத்தி சுருள்கள், காய்கறிகள், சோப்பு, பல்பொடி, டூத்பேஸ்ட், சோலார் விளக்குகள் என 3.70 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நிவாரணப் பொருள்களை வாகனத்தில் கொண்டு சென்றேன். அப்போது என்னிடம் சேமிப்பில் அவ்வளவுதான் இருந்தது. அதற்கு மேல் இருந்திருந்தாலும் அதையும் அவர்களுக்கு நிவாரண உதவியாக செலவிட்டிருப்பேன். அப்போது அப்படியான மனநிலையில்தான் இருந்தேன்.


அந்த ஊரில் எனக்குத் தெரிந்த இயற்கை விவசாயி ஒருவர் இருக்கிறார். அவருடைய வயலில் இருந்த அத்தனை தென்னை மரங்களும் புயலில் வேரோடு சாய்ந்துவிட்டன. அவர் அதிலிருந்து மீண்டு வருவதற்குக் கூட பத்து வருஷம் ஆகும். கஜா புயல், அங்குள்ள ஒவ்வொரு விவசாயியின் வாழ்க்கையையும் சின்னாபின்னமாக்கி இருந்தது. அந்தக் காட்சிகளை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது.


பல பேரு, அட்வைஸ்ங்கிற பேர்ல, எதுக்கு தம்பீ ஓடி ஓடி ஹெல்ப் பண்றீங்க? அரசாங்க உத்தியோகத்துல இருக்கீங்க... கல்யாணம், சொந்த வீடுனு செட்டில் ஆகுங்க. மத்தத அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. என்மேல இருக்கற அக்கறையில்தான் அப்படிச் சொல்றாங்கனு வெச்சிக்கிட்டாலும், பசியால் துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அப்போதே சோறிடுவதுதானே சரியாக இருக்க முடியும்?,'' எனத் தத்துவார்த்தமாக முடித்தார் விஜய்குமார்.

இன்னொன்றையும் இங்கே சொல்லியாக வேண்டியதிருக்கிறது. கஜா புயல், கேரளா வெள்ளம், கரோனா நிவாரண உதவிகள் உள்பட அவரின் எந்த ஒரு சேவைப்பணிகள் தொடர்பாகவும் அவரிடம் புகைப்படங்கள் இல்லை என்பதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தோம். இரண்டு வாழைப்பழங்களை நான்கு பேர் சேர்ந்து கொடுத்துவிட்டு, அதையும் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பப்ளிசிட்டி தேடும் உலகில், அவருடைய அணுகுமுறை ஆச்சர்யம் அளித்தது. நம் வற்புறுத்தலால் உணவுப்பொட்டலங்கள் தயாராகும் படங்களை எடுத்து அனுப்பினார்.

பிறரின் துயரைக் கண்டு எவனொருவன் கண்ணீர் சிந்துகிறானோ அவனை மனிதன் என்ற சட்டகத்திற்குள் மட்டும் சுருக்கிச் சொல்லிவிட முடியாது. அவன், அதற்கும் மேலானவன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT