ADVERTISEMENT

ஆணவக் கொலைகளின் ஆணிவேர்!

05:57 PM May 30, 2018 | vasanthbalakrishnan

ஜாதி என்றைக்குத் தோன்றியதோ போய்த் தொலையட்டும். ஜாதிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஒரு காலத்தில் பெண்கள் மாராப்பு சேலை அணிய முடியாத காலம் இருந்திருக்கிறது. அப்படி மார்புகளை மறைத்தால் வரிசெலுத்த வேண்டிய கொடுமை இருந்திருக்கிறது. இதை எதிர்த்து நாஞ்சலி என்ற கேரளப் பெண் தனது மார்பையே அறுத்து எறிந்து போராடியிருக்கிறார். உயர்சாதியினர் வசிக்கும் தெருவில் நடக்கக்கூடாது என்றும், உயர்சாதியினர் வரும்போது அவர்கள் கண்ணில் படக்கூடாது என்றும் சில சாதிப் பிரிவினரை ஒதுக்கி வைத்து அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

கவுசல்யா - சங்கர்

ADVERTISEMENT



பார்ப்பனரைத் தவிர யாரும் படிக்கவே அனுமதிக்காமல் படுத்திய கொடுமைதான் எல்லாவற்றிலும் உச்சமாக இருந்திருக்கிறது. தமிழகத்தில் அத்தகைய பார்ப்பனீய கொடுமைகளை களப்பிரர்கள் ஒழிக்க முயன்றிருக்கிறார்கள். எல்லோரும் கல்வி கற்க வசதி செய்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலம்வரை மன்னர்கள், குறுநில மன்னர்கள் என்று மக்களை படுத்தி எடுத்து பகுதிக்கு ஒரு சாதியை ஆதிக்க சாதியாக்கி, ஒரு பிரிவினரை அடக்கி ஒடுக்கி வாழ்ந்தார்கள்.

பிரிட்டிஷ்காரர்கள் வந்தபிறகுதான் மக்களுக்கு கல்வி அறிவும் வெளியுலக அறிவும் கிடைக்கத் தொடங்கியது. அவர்கள் உதவியோடு, நீதிக்கட்சியும், திராவிட இயக்கமும், மக்களை பிரித்தாண்ட சாதி வேற்றுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பின. மக்கள் மத்தியில் சமத்துவ உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதன்விளைவாக பிறக்கும்போதே பெயருடன் சாதி ஒட்டிப் பிறந்த குழந்தைகளும், சாதிப்பெயருடன் பள்ளிக்குச் சென்றவர்களும் சாதி என்ற வாலை ஒட்ட நறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1960களில் சாதியை கேட்பதற்கே வெட்கப்படும் ஒரு புதிய தலைமுறை உருவாகியது. ஆனால், கல்வி வேலை வாய்ப்புகளிலும், வாக்கு அரசியலிலும் சாதி நீடித்தது. இதை திமுக, அதிமுக மட்டுமல்லாமல் எல்லா அரசியல் கட்சிகளுமே கடைப்பிடிக்கத் தொடங்கின.

இளவரசன்



தேர்தல் அரசியலில் இது தொடர்ந்தாலும், இரண்டு கட்சிகளிலும் சாதிப்பாகுபாடு அவ்வளவாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும், குறிப்பாக திமுகவில் அப்படிப்பட்ட வேற்றுமைகள் அதிகம் இல்லை என்பதும் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களே ஒப்புக்கொள்வார்கள்.

எனினும், சாதிகளின் மேலாதிக்கம் கட்டுப்பட்டு வந்த நிலையில், எம்ஜியார் ஆட்சிக் காலத்தில்தான் முதன்முதலில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்துக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து எல்லா சாதிகளும் தங்களுடைய சாதிச் சங்கங்களை பதிவுசெய்யத் தொடங்கின. அதன்பிறகுதான், அவரவர் சாதிக்கு பிரதிநிதித்துவம், அவரவர் சாதித்தலைவருக்கு சிலை உள்ளிட்ட பலவிதமான கோரிக்கைகள் எழத் தொடங்கின.


இதையடுத்து சாதிமோதல்கள், சர்ச்சைகள் அதிகரித்தன. சாதிகளை கவர்வதற்காக எம்ஜியார் தொடங்கிவைத்த சாதித் தலைவர்கள் பெயரால் மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் பெயர் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி சமயோசிதமாக முடிவு கட்டியவர் கலைஞர். அதன்பிறகுதான், மாவட்டங்கள் அந்தந்த மாவட்ட தலைநகர்களின் பெயரால் அழைக்கப்பட்டன. போக்குவரத்துக் கழகங்கள் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் என்ற ஒரே பெயரால் இயங்கத் தொடங்கின.

கோகுல்ராஜ்



எம்ஜியாரின் ஆட்சியில்தான் வன்னியர்கள் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடுகோரி போராட்டத்தை நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவத்தையே வரவைத்தார் எம்ஜியார். 30 பேர் அதில் உயிரிழந்தார்கள். அந்த போராட்டத்தின் விளைவாகத்தான் கலைஞர் 1989ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கென்று 20 சதவீத இட ஒதுக்கீடை வழங்கினார்.

இதெல்லாம் வரலாறு. கலைஞரை தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவானவர் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக இருக்கும் என்று முத்திரை குத்தும் அளவுக்கு திமுகவின் சமூகநீதிப் பார்வை இருந்து வருகிறது. அதேசமயம், இன்றுவரை தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் ஆணவப் படுகொலைகள் குறித்தும், சாதி மோதல்கள் குறித்தும் திமுக வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டே ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால், அதிமுகவோ, காங்கிரஸோ மற்ற கட்சிகளோ இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காதது குறித்து எந்த விமர்சனமும் வருவதில்லை. இதற்கான காரணம் என்னவென்றால், வாக்கு அரசியலில் திமுகவை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற நோக்கம்தான் என்று அந்த கட்சியினர் கூறுகிறார்கள்.


தர்மபுரியில் திவ்யா என்ற பெண்ணை காதலித்ததற்காக இளவரசனையும், உடுமலைப்பேட்டையில் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்ததற்காக சங்கரையும், பரமத்தி அருகே கோகுல்ராஜையும் சுயசாதி ஆணவத்தை நிலைநாட்ட படுகொலை செய்தார்கள். விழுப்புரம் அருகே வெள்ளம்புதூரில் தாயையும் 13 வயது மகளையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்கள். அப்போதெல்லாம் அந்த நிகழ்வுகள் வெறும் பரபரப்புச் செய்திகளாக மட்டுமே ஆகின. அந்த நிகழ்வுகள் குறித்து முக்கிய கட்சிகள் எதுவும் பெரிய அளவில் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், எல்லோரும் திமுக ஏன் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றார்கள். இத்தனைக்கும் திமுக கண்டனம் தெரிவித்திருந்தது. கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது என்பதே நடுநிலையாளர்கள் எனப்பட்டவர்களின் விமர்சனமாக இருந்தது.




இதோ இப்போது சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிக்கசாதி இளைஞர்களுக்கு இடையே நடந்த கவுரவச் சண்டையில் நிகழ்வுக்குத் தொடர்பு இல்லாத இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இருவர் தங்கள் காலை தங்களுடைய கால்மீது போட்டு அமர்ந்திருந்தார்கள் என்பதையே, தங்களுக்கு கவுரவக் குறைச்சலாக கருதி இந்த கொலையை நடத்தியிருக்கிறார்கள். கவுரவம் என்பதை எது எதிலோ பார்க்கத் தொடங்கி விட்டார்கள். மனுஷனாக இருப்பதுதான் கவுரவம் என்பதை மறந்துவிட்டார்கள்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT