ADVERTISEMENT

“ஜெயலலிதா, மோடி எல்லாம் இந்து விரோதிகள் இல்லையா?” - ராமசுப்பிரமணியன் கேள்வி

02:53 PM Jan 31, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அண்மையில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அதில் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடிக்க நேர்ந்ததையும், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட அந்தக் கோயில்களுக்குப் பதிலாக இடிக்கப்பட்டதைவிடப் பெரிய அளவில் மூன்று கோயில்களை மீண்டும் கட்டிக்கொடுத்ததையும் சுட்டிக்காட்டிப் பேசினார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு பேசியதை காணொலியாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் டி.ஆர்.பாலு பேசியதில் இருந்து அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் இருந்து சிலவற்றை வெட்டி விட்டு வீடியோ பகிரப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியன் நக்கீரன் யூடூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "டி.ஆர். பாலுவின் அந்த வீடியோவை பார்த்தேன். அண்ணாமலை அவருடைய ட்விட்டரில் வீடியோவை பதிவிட்டு உள்ளார். அதை எச். ராஜா மற்றும் பாஜகவினர் எல்லோரும் பதிவிட்டு, திமுக தான் இந்து விரோத சக்தி என்ற ரீதியில் பரப்பி வருகிறார்கள். நிறைய பேர் எனக்கும் இந்த வீடியோவை அனுப்பி இருந்தார்கள். ‘நீங்கள் திமுகவிற்கு ஆதரவாக இருக்கிறீர்கள். இது எல்லாம் அக்கிரமம். இது எப்படி நியாயம்’ என்று கேட்டார்கள். நூறு வருட கோவில்களை எல்லாம் இடித்து விட்டேன். இதற்காக எனக்கு ஓட்டு வராது என்றும் தெரியும். ஆனாலும் ஓட்டை எப்படி வரவழைக்க வேண்டும் என்றும் எனக்கு தெரியும் என்று எல்லாம் பேசி இருந்தார். இதை கேட்டவுடன் நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன்.

அதற்கு அப்புறம் இன்னொரு வீடியோ வந்தது. இது தான் உண்மையான வீடியோ என்று. அதை பார்த்தபோது, அதில், ‘லட்சுமி, சரஸ்வதி மற்றும் பார்வதி கோவில்களை நான் இடித்தேன். இடிக்கும் போது எனக்கு ஓட்டு வராது என்பது தெரியும். ஜீஎஸ்டி சாலைகளை அகலப்படுத்தும் போது கோவில்களை இடித்தாலும் கூட வேறு இடத்தில் கோவில்களை கட்டி விட்டேன்’ என்கிறார். அப்போது தான் என் மனசு நிம்மதி அடைந்தது. பாலு மிக சிறந்த பாராளுமன்றவாதி மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். கேபினட் அமைச்சராக உயர்ந்தவர்.

என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். தாம்பரம் சானடோரியம் இடையே இன்று உள்ள சிவா விஷ்ணு கோவில் முதலில், ஜிஎஸ்டி சாலையில் இருந்தது. அதனை ஜெயலலிதா ஆட்சியில் இடிக்க உத்தரவு கொடுத்துவிட்டார்கள். எனக்கு நிறைய வருத்தம் இருந்தது. நிறைய பேர் திரண்டு வந்து விட்டோம். கோவிலை இடிப்பதற்கு பொக்லைன் வாகனங்களை எல்லாம் அங்கு வந்து விட்டது. இந்து விரோதம், கோவிலை இடிக்காதே என்று எல்லாம் சொன்னோம். அப்போது அந்த சாலையை நாங்கள் முற்றுகை விட்டோம். கடைசியில் அங்கு வந்தவர்கள், ‘நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம். கோவிலுக்கு இடம் தருகிறேன், கோவில் கட்டுவதற்கு பணம் தருகிறேன்’ என்று சொன்னார்கள். அதன் பிறகு நாங்கள் கலைந்து வந்து விட்டோம். சொல்லிய படியே இடத்தை கொடுத்தார்கள். இன்னும் அழகாக பிரமாதமாக சானடோரியத்தில் முன்பு இருந்ததை விட கோவிலை கட்டினார்கள். தற்போது இந்த கோவில் மிகவும் அற்புதமாக நிர்வகிக்கபடுகிறது. அதற்காக ஜெயலலிதாவை இந்து விரோதி என்று சொல்ல முடியுமா?.

அதைத் தானே டி.ஆர். பாலு சொல்கிறார். கோவிலை இடித்துவிட்டு வேறு இடத்தில் கோவிலை கட்டினோம் என்று. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சாலை ஓரம் உள்ள 700 கோவில்களை இடித்து தள்ளினார்கள். அதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக தலைவர் அசோக் சிங்கள், ‘மோடி தான் நவீனகால அவுரங்கசிப்’ என்று சொன்னார். இது எல்லாம் பாஜக காரர்களுக்கு தெரியாதா என்ன?. எந்த பிரச்சனையும் இல்லாத ஒன்றை ஒட்டியும் வெட்டியும் பொய்யான தகவலை பரப்பி ஒரு மதக் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இதை செய்து இருக்கிறார்கள். இது ரொம்ப ரொம்ப ஆபத்தானது. அண்ணாமலை இது மாதிரி செய்துள்ளதை தவறு என இந்து பத்திரிகை கூட குறிப்பிட்டுள்ளது" என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT