Skip to main content

"கோயில்கள் யாரிடம் இருக்க வேண்டுமென காஞ்சி மகா பெரியவர் சொல்லியிருக்கிறார்..” - ராமசுப்பிரமணியன்

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

ramasubramanian talks about annamalai hindu religious charitable endowment speech 

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசும்போது, "பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்பது எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும்" என பேசி இருந்தார். இந்நிலையில் இது குறித்து கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியன் நக்கீரன் யூடூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பின்வருவனவற்றை பேசினார்..

 

"இதற்கு முன்பாகவே அண்ணாமலை பேசும்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்து விடுவோம் என்று சொல்கிறார். பழைய கதைகளை எல்லாம் எடுத்துப் பாருங்கள். ஆரம்பத்தில் ராஜாக்கள் கட்டிய கோவில்கள் ராஜாக்கள் கோவில்கள் எனப்பட்டன. ராஜாக்கள் எல்லாம் அதன் நிர்வாகத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆகவே அந்த கோயில் உடைய முழு அதிகாரங்களும் ராஜாக்களிடம் இருந்தது. அதே ராஜாக்கள் நிறைய மானியங்கள் வருமானங்கள் எல்லாம் கோவிலுக்கு போய் சேர வேண்டும். அர்ச்சகர்களும் கொடுக்க வேண்டும் என்று கல்வெட்டுகள் எல்லாம் கூட இருக்கிறது. அந்த கோவிலுடைய சொத்துக்களை அநியாயமாக அபகரிப்பவர்களுக்கு என்ன பாவம் வந்து சேரும் என்றால் தன்னுடைய சொந்த தாய்க்கு  செய்த பாவம் உங்களுக்கு வந்து சேரும் என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.

 

இந்த நிலைமை தான் கோவில்களில் தொடர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு கோவில் நிர்வாகத்தை  அரசு எடுத்துக் கொண்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.  இதன் பிறகு கிறிஸ்தவ  கொள்கைக்கு எதிரானது என்றதால், அதை எல்லாம் விட்டுக் கொடுக்க சொன்னதால் விட்டுக் கொடுத்து விட்டார்கள். மறுபடியும் கோவில் சொத்துக்கள் எல்லாம் கோவிலின் அறங்காவலர்கள், தர்மகர்தாக்கள்  என்ற பெயரில் பலவாறு சூறையாட ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு பிறகு மறுபடியும் கோவில்களை எல்லாம் கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வருகிறார்கள். 1925 ல் முதல் முறையாக இந்து அறநிலையத்துறை சட்டத்தை கொண்டு வந்தனர். அதன் பிறகு 1951 இல் சட்டம் கொண்டு வரப்பட்டது.

 

ஓமந்தூரார்  போன்ற பிரமாதமான ஆன்மிக செம்மலை பார்க்கவே முடியாது. ராஜாஜி, நேரு போன்றோர் எல்லாம்  1947 இல் அவரை முதல்வராக ஆக கேட்ட போது,  ரமண மகரிஷியிடம் அனுமதி கேட்டு அதன் பிறகு  6 மாதம் கழித்து அந்த பதவியை ஏற்று கொள்கிறார். கோவில் நிர்வாகம் தொடர்பாக  ஓமந்தூராருக்கு   நிறைய புகார்கள் வருகிறது. அதனால் அவர், 60 க்கும் மேற்பட்ட புகார்கள்  மீது வழக்குகள் போட சொல்லுகிறார். அதன் பிறகு ‘நீங்கள் முதல்வராக வர வேண்டும் என்று  சொன்னதால் வந்தேன். இப்போது நீங்கள் போக  சொன்னதால் போகிறேன்’ என்று சொன்னார்.  அப்படிப்பட்ட உத்தமான மனிதர் ஓமந்தூரார். அறங்காவலர்கள் சிப்பந்திகள் செய்கிற அக்கிரமங்கள் எல்லாம் பற்றி அவர் சொல்லி இருக்கிறார்.

 

அதற்குப் பிறகு 1951 இல் ஒரு சட்டம் வருகிறது. பின் அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, மாற்றி அமைத்து 1959 இல் மீண்டும் சட்டம் வருகிறது.  இதைப் பார்க்கும்போது அரசாங்கத்தின் கையில் கோயில்கள் இருப்பது தான் நல்லது. ஆரம்பத்தில் நான் கோவில்கள் எல்லாம் அரசாங்கத்திடம் இருக்கக் கூடாது என்று தான் பேசி உள்ளேன். அரசே ஆலயத்தை விட்டு விலகு என்று எல்லாம் பேசி உள்ளேன். இவ்வாறு பேசியது எல்லாம் சரியான புரிதல் இல்லாத வரை தான் அப்படி பேசினேன். ஆனால் ராமசுப்ரமணியன் மாற்றி பேசுகிறார் என்று எண்ணிவிடக் கூடாது. காஞ்சி மகா பெரியவரின் தெய்வத்தின் குரல் நூலின்  7 தொகுதியை  படித்து பாருங்கள்  கோவில்களின் நிர்வாகம் என்பது நிச்சயம் அரசாங்கத்திடம் இருப்பது நல்லது. தனியாரிடம் சென்றால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று சொல்ல முடியாது. நிறைய சொத்துக்கள் சூறையாடல் எல்லாம் ஏற்படும் என்று அதில் சொல்லி இருக்கிறார்.

 

குறிப்பாக டி.ஆர். பாலுவின் ஒன்றும் இல்லாத அவரின் இந்த பேச்சை மத கலவரத்தை உருவாக்க நினைத்து பரப்பினார்கள். கடைசியில் புஷ்னு போய் விட்டது. இது மாதிரி வீடியோக்களை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அண்ணாமலை புழுதியை வாரி இறைத்து வருகிறார். இப்போது இந்த விஷயத்தையும்  ஒட்டியும் வெட்டியும் செய்து வருகிறார். நியாயமா இது ?. ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் இதை வைத்து பொதுமக்களிடம், ‘ போய் பாருங்கள் கோவிலை இடித்தவர் இவர் தான். இந்த ஆட்சி இருக்கலாமா. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கோயில்கள் வரலாமா’ என்று கேள்வி கேட்பது  நியாயமற்றது,  அபாண்டமானது அதர்மமானது" என்று பேசினார். 

 

 

 

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்

Next Story

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Tamil Nadu BJP executives meeting with Prime Minister Modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு பிரதமரை அழைத்து வர நேரம் கேட்டுள்ளோம். இது குறித்து அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் இறுதி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே பிப்ரவரி 2 வது வாரம் நிறைவடையும் பாதயாத்திரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் பங்கேற்பதற்காக மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.