ADVERTISEMENT

பாஜக தனியாக நின்றால் ஜெயிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, ஊர் உலகத்துக்கே தெரியும்!! - மனம் திறந்த ராம சுப்பிரமணியன்!

01:05 PM Sep 22, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில், கூட்டணி பஞ்சாயத்து நடைபெற்றுவருகிறது. ஒருபுறம் பாமக கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டுள்ள நிலையில், பாஜக அதிக சீட் கோரி அழுத்தம் கொடுத்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தல், பாஜக கூட்டணி, அண்ணாமலையின் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் பதில்கள் வருமாறு,


தமிழ்நாட்டில் அடுத்த பரபரப்பு என்றால் விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல்தான். அனைத்து கட்சியினரும் அதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்றும், ஆனால் தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பாமக தனியாக நின்று தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் நடைபெறும் அந்த 9 மாவட்டங்களில் தென்காசி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பாமக சற்று வலுவாகவே இருக்கிறது. எனவே தங்களின் பலத்தை தனியாக காட்ட வேண்டும் என்று அவர்கள் விருப்பப்படுகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கூட்டணி தர்மம் என்ற ஒன்று உள்ளது. அதனை அவர்கள் மதிக்க வேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் ஒரு நிலைப்பாடு என்ற நிலைப்பாட்டை மக்கள் ஏர்றுக்கொள்ள மாட்டார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிகப்படியான இடங்களைக் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், இது பாஜகவுக்கு அதிமுக பெருந்தன்மையாக வாரிக்கொடுத்ததால் நடந்தது. பாஜக தனியாக நின்றால் ஒரு இடம் கூட ஜெயிக்காது என்பது அவர்களுக்கும் தெரியும், ஊர் உலகத்துக்கும் தெரியும். இந்த நான்கு பேரும் எப்படி ஜெயித்தார்கள். இதில் இருவர் திமுக, அதிமுகவில் இருந்து வந்தவர்கள். அதிமுகவின் கடுமையான உழைப்பினால் இது சாத்தியப்பட்டுள்ளது. தற்போது பாமக கூட்டணியைவிட்டு போனதால் தங்களுக்கு அதிக சீட், 25 சதவீத இடம் என்பதெல்லாம் சாத்தியமா? பாஜக கேட்டால் அதிமுக கொடுக்க முடியுமா? அவர்களுக்குள்ளாகவே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. ரெய்டு, கட்சி பிரச்சனை என போய்க்கொண்டிருக்கிறது. எனவே இடியாப்ப சிக்கலில் இருக்கும் அதிமுக, தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பார்ப்பார்கள். இந்த நேரத்தில் பாஜக அதிக சீட் கேட்பது அபத்தமாக இருக்கிறது. அவர்களும் தர மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறியுள்ளாரே?

அண்ணாமலை பேசுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர் அரசியலுக்குப் புதியவர். கள நிலவரம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தடா புடா என்று பேசி கட்சியை வளர்க்க முடியாது. உண்மையின் தன்மை தெரிய வேண்டும். இதைவிட பெரிய கூத்து, அடுத்த தேர்தலில் 150 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று கூறுகிறார். இது சாத்தியமா? கேவலமாக இருக்கிறது. உண்மை நிலவரம் தெரியாமல் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. இப்படி ஏடாகூடமாக பேசினால் அவர் மீது பொதுமக்களிடம் நல்ல பெயர் எப்போதும் வராமல் போய்விடும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT