ADVERTISEMENT

ரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா? -கராத்தே தியாகராஜன் அதிரடி

04:43 PM Nov 19, 2019 | rajavel

ADVERTISEMENT


நடிகர் கமலஹாசனுக்கு நடந்த கலைவிழாவில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ’’அரசியலில் அதிசயமும் அற்புதமும் நேற்றும் நடந்தது ; இன்றும் நடக்கிறது ; நாளையும் நடக்கும் ‘’ என சொல்லி, உதாரணத்திற்காக, ’’முதல்வராவோம் என எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ‘’ என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டினார். ரஜினியின் அந்த பேச்சு, அரங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தேசிய அளவில் பேசு பொருளாகவும் உருவெடுத்தது.

ADVERTISEMENT

ரஜினியின் அந்தப் பேச்சில் அரசியல் நெடி அதிகமாக இருக்கும் நிலையில் அவரது பேச்சின் பொருள் குறித்த விவாதங்கள் இன்னமும் நின்றபாடில்லை. இந்த நிலையில், ரஜினியின் மனசாட்சியாக அண்மைக் காலங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் பொறுப்பு மேயருமான கராத்தே தியாகராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


ரஜினியின் நாளைய அதிசயம் என்பதன் பொருள் என்ன?

தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பப் போகும் தலைவர் ரஜினிதான். நேரடி அரசியலில் அவர் இறங்குவது உறுதி. அடுத்த வருடத்தில் கட்சி துவக்குவார். கட்சி துவங்கியதும் அவரது அரசியல் இன்னும் அதிரடியாக இருக்கும். அந்த வகையில், அண்ணன் ரஜினி கூறிய நாளைய அதிசயம் என்பதை ஆராயும்போது, ’ தமிழகத்தின் நாளைய முதல்வர் அவர்தான் ’ என்பதாக நாங்கள் அர்த்தம் எடுத்துக்கொள்கிறோம். யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் முதல்வராக எடப்பாடி வந்ததை தமிழகமே அதிசயமாகப் பார்த்தது இல்லையா? அதுபோல, தமிழக முதல்வராக அண்ணன் ரஜினி பதவி ஏற்கும் அற்புதமும் நடக்கும்.



முதல்வர் எடப்பாடியை பற்றி ரஜினி கூறிய வார்த்தைகளுக்கு நமது அம்மா பத்திரிகை ரஜினியை கடுமையாக விமர்சித்திருக்கிறதே?

’கண்டக்டராக வாழ்க்கையை துவக்கிய ரஜினி, சூப்பர் ஸ்டாராவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ’ என நமது அம்மா பத்திரிகை எழுதியிருக்கிறது. முதல்வர் எடப்பாடியை குறித்து அண்ணன் ரஜினி கூறியதன் பொருளை தவறாக புரிந்துகொண்டார்களோ என நான் நினைக்கிறேன். கண்டக்டர் வாழ்க்கையை எப்போதும் அண்ணன் ரஜினி மறக்கவில்லை ; மறக்கவும் மாட்டார். அந்த வாழ்க்கையை அவர் உயர்வாக நினைத்து மகிழ்பவர். அதனை பல சந்தர்பங்களில் நினைவு கூர்ந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில், ’ கண்டக்டராக நான் இருந்த போது எனக்கு 350 ரூபாய் சம்பளம். திடீரென சினிமா வாய்ப்பு வந்து நடித்தபோது 3 லட்சம், 4 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்தது. அப்போது அடேங்கப்பா என ஆச்சரியப்பட்டேன். கனவில் கூட இவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு நினைக்கவில்லை ‘ என ரஜினி சொல்லியிருக்கிறார். அதனால், கனவில் கூட என்பதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. தவறான கண்ணோட்டோத்தில் அண்ணன் ரஜினி பயன்படுத்தவில்லை. உழைப்பு என்கிற அர்த்தத்தில்தான் கனவில் என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் அண்ணன் ரஜினி. அரசியலாகட்டும் தனி மனித வாழ்க்கையாகட்டும் ஒவ்வொரு மனிதரும் கடுமையாக உழைத்தால் நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு உயர்ந்த நிலையை அடைய முடியும். அது கனவில் கூட காண முடியாத உயர்ந்த நிலையாகக் கூட இருக்கும் என்கிற சிந்தனையில்தான் முதல்வர் எடப்பாடியை உதாரணமாக காட்டினார். அரசியலில் எடப்பாடி உழைத்த உழைப்புக்கு உயரிய இடம் கிடைத்திருக்கிறது என்பதே அண்ணன் ரஜினி கூற வந்த பொருள். இதனை அதிமுகவினர் புரிந்துகொள்ளவேண்டும் ; புரிந்துகொள்வார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தலை அதிமுக, பாஜக கட்சிகளோடு ரஜினியும் இணைந்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க பாஜக தேசிய தலைமை திட்டமிடுவதாக தகவல்கள் பரவுகிறதே?

தனிக்கட்சி அடையாளத்தோடுதான் அண்ணன் ரஜினி தமிழக அரசியல் களத்தில் நுழைவார். இது, 200 சதவீதம் எதார்த்தமான உண்மை. ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பார்கள் என்பதெல்லாம் ஊடகங்களின் யூகங்கள். அதனால்,ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பது என்பதை அன்றைய சூழல்கள்தான் தீர்மானிக்கும்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக தாக்கி வருகிறீர்கள். அதேபோல, கமல் விழாவில் பேசிய ரஜினியும், ஸ்டாலின் பெயரை சொல்லாமல் அவரை தாக்கியிருக்கிறார். இதனைப் பொறுத்திப் பார்க்கும்போது, ரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறீர்களா?

கமலுக்கு நடத்திய விழாவில், ’எடப்பாடி ஆட்சி ஒரு மாசம் கூடா தாங்காது ; மூணு மாசத்துல கவிழ்ந்திடும் ; நாலு மாசத்தில் கவிழ்ந்திடும் என்றெல்லாம் சொன்னார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று விவரித்தார் அண்ணன் ரஜினி. கவிழ்ந்திடும்ங்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியது அண்ணன் ஸ்டாலின். அதனால், ஸ்டாலினை ரஜினி தாக்கியதாக நினைக்கிறீர்கள். தமிழக அரசியலில் சமீபகாலமாக அண்ணன் ஸ்டாலின் பேசியது எதுவுமே நடக்கவில்லை. அதனால் ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை தனது பேச்சில் பொறுத்தமான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் அண்ணன் ரஜினி. அதேபோல, அரசியலில் நடக்கும் சில சம்பவங்களில் எனக்கு தெரிந்த பல உண்மைகள் அண்ணன் ஸ்டாலினின் அரசியலோடு சம்மந்தப்படுவதால் அதனை எனது பேச்சில் பொறுத்தமான இடத்தில் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான். மற்றபடி ஸ்டாலின் குறித்து நான் முன்வைக்கும் விமர்சனங்களும் கருத்துக்களும் என்னுடையது மட்டுமே. இதனை அண்ணன் ரஜினியின் வாய்ஸோடு பொறுத்திப்பார்ப்பது தவறானது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT