ADVERTISEMENT

ரபேலில் ஊழல்... சின்ன புள்ள கூட நம்பாதுங்க... ஜோதிமணி சிறப்பு பேட்டி

04:01 PM Sep 24, 2018 | rajavel

ADVERTISEMENT



ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறியது அனைத்தும் பொய் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த சூழ்நிலையிலும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது. திட்டமிட்டபடி ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பதில் அளித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி.

நாட்டினுடைய பொருளாதார சூழல் மிகப்பெரிய பின்னடைவில் உள்ளது. 91க்கு முன்பு எந்த அளவில் இருந்ததோ, அந்த மாதிரியான சூழலில் இன்று இந்திய பொருளாதார சூழல் உள்ளது. இந்த மாதிரி சிக்கலான நேரத்தில் ஒரு நிதியமைச்சராக இருப்பவர், பிளாக் எழுதுவது, டிவிட் போடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் கம்பெனியுடன் காங்கிரஸ் அரசாங்கம் 2012ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒப்பந்தம்போட முடிவு எடுக்கப்படுகிறது. ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய். இந்திய ராணுவம் 126 விமானம் வேண்டும் என்று கேட்கிறது. 126 விமானத்தையும் வாங்குவதற்கு முடிவு எடுக்கப்படுகிறது. அதில் 18 விமானங்களை அவர்கள் கொடுப்பார்கள்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் அரசு நிறுவனம். 70 வருடமாக இந்த நிறுவனத்திற்கு ராணுவ தளவாடங்கள் தயாரிப்பது, விமானம் கட்டுவதில் முன்அனுபவம் உள்ளது. ஆகையால் மற்ற விமானங்களுக்கான டெக்னாலஜிகளையும் இங்கே கொடுப்பார்கள். இங்கு இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனம் அந்த டெக்னாலஜிக்களை பயன்படுத்தி விமானங்களை உருவாக்குவார்கள்.

மேலும் அடுத்த தலைமுறைக்கான விமானங்களையும் தாங்களே உருவாக்குவோம் என்று இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனம் சொல்லுகிறது. ஏனென்றால் இந்தியாவுக்கு அந்த டெக்னாலஜி வேண்டும், இந்தியா வளர வேண்டும், மேலும் விமானம் தயாரிப்பதற்கான லைசென்ஸ்சையும் வாங்கிக்கொள்ளலாம் என்பதற்காக இதனை சொல்லுகிறது.

எத்தனை விமானங்களை பிரான்ஸ் விற்பனை செய்கிறதோ, அத்தனை விமானங்களையும் வாழ்நாள் முழுவதும் அவர்களே பராமரிக்க வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் உள்ளது. இது அத்தனையும் ஒப்புக்கொண்டுதான் பிரான்ஸ் அரசாங்கம் இந்தியாவுக்கு விமானங்களை விற்க முடிவு செய்தன.



2007ல் ஆரம்பித்த இந்த ஒப்பந்த பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. ராணுவத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து விமானம் வாங்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. அதற்கு நிறைய செயல்முறைகள் உள்ளது. ஒப்பந்த பேச்சுவார்த்தை கமிட்டி, விலை பேச்சுவார்த்தை கமிட்டி, பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழு என இந்த மூன்று கமிட்டி மூலமாகத்தான் போக முடியும். இவையெல்லாம் முடிந்த பின்னர் மோடி அரசு பதவியேற்கிறது. இதனால் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

ஆட்சி மாறலாம், நாடு ஒன்றுதானே, விமானப்படை ஒன்றுதானே, ஒரு அரசாங்கம் செய்ததை அடுத்த அரசு வந்தால் அதனை அப்படியே தொடரவேண்யதுதானே. அதுபோன்று நடக்காமல் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தத்தை போடுகிறார்கள்.

ஒப்பந்த பேச்சுவார்த்தை கமிட்டி, விலை பேச்சுவார்த்தை கமிட்டி, பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழு என இந்த மூன்று கமிட்டி மூலமாகத்தான் போக முடியும். இதனைத் தவிர்த்துவிட்டு, எதனையும் செயல்படுத்தால் புதிய ஒப்பந்த்தை பிரதமர் மோடி போடுகிறார். இதுதான் ஊழலுக்கு ஆரம்பம்.

பாஜக அரசு போட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு விமானத்தின் விலை ரூபாய் 1670 கோடி. ஏறக்குறைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாங்க நினைத்ததோடு பார்த்தால் மூன்று மடங்கு அதிகம். டெக்னாலஜி டிரான்ஸர் கிடையாது. வாழ்நாள் பராமரிப்பு கிடையாது.

காங்கிரஸ் ஆட்சியில் போட்ட ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ் நிறுவனம் விமானத்திற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பராமரிப்பு பண்ண வேண்டும். ஆனால் மோடி அரசு அனில் அம்பானி கம்பெனிக்கு பராமரிப்புக்காக ஒரு லட்சம் கோடி கொடுப்பதாக உள்ளது.

இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்திற்கு பதில் அனில் அம்பானி நிறுவனத்திற்கு கொடுக்கின்றனர். மோடி அரசாங்கம் பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் போடும் பத்து நாட்களுக்கு முன்புதான் அனில் அம்பானி நிறுவனம் உருவாகிறது.

இதற்கு முன்பு அனில் அம்பானியின் நிறுவனம் பாதுகாப்புத்துறை சம்மந்தப்பட்ட எந்த ஒரு ராணுவ தளவாடத்தையும், விமானத்தையும் தயாரிக்காத நிறுவனம் என்பதோடு மட்டுமல்ல, 40 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசு வங்கிகளில் கடன் வைத்திருக்கிற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் ஒரு நிறுவனத்திற்கு கான்ராக்ட் கொடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. குறைந்தது மூன்று வருடம் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்கான ஆடிட் ரிப்போர்ட் இருக்க வேண்டும். 10 நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு நிறுவனத்திற்கு மூன்று வருடத்திற்காக ஆடிட் எப்படி தயாராக இருக்க முடியும்.

காங்கிரஸ் அரசு இருந்தபோது இந்த ஒப்பந்ததை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். அதைப்போன்றே இப்போது வெளியிடுங்கள் என்று ராகுல் காந்தி கேட்டார். ஆனால் தற்போதைய மோடி அரசு அதனை வெளியிட முடியாது என்கிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும் படி கூறியது இந்தியாதான் என்று கூறியுள்ளார்.

விமானத்தின் விலையை ரகசியம் என்று சொன்னது மோடி அரசாங்கம், ஆனால் டசால்ட் ஏவியேசன் நிறுவனமும், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமும் தங்களது இணையதளங்களில் வெளியிட்டிருக்கிறது. அப்படி ரகசியம் என்று சொன்ன விலையை இந்த இரு நிறுவனங்களும் எப்படி வெளியிட முடியும். ரபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று சொன்னால் சின்ன புள்ள கூட நம்பாது.


ஊழல் நடந்தது மட்டும் அல்ல, இதில் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டிருக்கிறார். சவப்பெட்டியில் இருந்து போர் விமானம் வரை ஊழல் செய்ய பாஜக முன்னேறியுள்ளது. 126 விமானங்களை ராணுவம் கேட்கிறது. ஆனால் 36 விமானங்களைத்தான் வாங்கி தருவதாக அரசு சொல்கிறது. இது பாதுகாப்புத்துறையை சமரசம் பண்ணுவதாக ஆகாதா?.

ஒரு தேசத்தின் பாதுகாப்பையே சமரசம் பண்ணி, ஒரு தேசத்தின் எதிர்காலத்தையே அழித்து, ஒரு தனி நபரை முன்னுறுத்தி ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் பண்ணிய பணம் அம்பானிக்கு மட்டும் போகுதா?. பாதுகாப்புத்துறை அமைச்சர் இருக்கிறார். பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் மீறி, எல்லாவிதமான விதிகளையும் மீறி, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்ததை ரத்து செய்துவிட்டு ஏன் மோடி இதனை செய்கிறார்?.

ரபேல் பிரச்சனையை அனில் அம்பானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சி சொல்லி வருகிறது. யாரும் கேட்கவில்லை. பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தபோது, ராகுல் காந்தி பேசுகிறார். அவரது பேச்சு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பியபோதுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT